Thursday, July 30, 2015

கனவுகளை விதைத்த ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி

தங்களுக்கு விஞ்ஞானி, ஜனாதிபதி, கவிஞர், ஆசிரியர் மற்றும் இன்னும் பல அடையாளங்கள் இருந்தும் ஆசிரியர் என்ற அடையாளத்தால் அறிய  படுவதையே உங்களின் விருப்பமாக இருந்தது. ஆதலாலே இந்த தலைப்பும்..............

எழுபதுகளின் இரண்டாம்பாதிக்கு மேல் பிறந்தவர்களுக்கு நல்ல தலைவன் என்பவன் வரலாற்று பக்கங்களில் படித்த ஒரு விசயமாகவே இருந்தது. ஆம் காமராஜ், காந்தி போன்றோர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தது இல்லை, ஆனால் நீங்கள் இருக்கும் வரை அறிந்திருக்கவில்லை அவர்களுக்கு ஒப்பான ஒரு தலைவருடன் வாழ்ந்திருக்கிறோமென்று. இதுவரை எவ்வளவவோ பிடித்த அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், சினிமா பிரபலங்களின் இறப்பு செய்திகளை கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் ஜூலை 27' 2015 இரவு வந்த அந்த செய்தி மட்டும் நமக்கு மிகவும் நெருங்கிய அல்லது வெகு நாள் பழகிய ஒருவரை இழந்ததாகவே தோன்றுகிறது.

போர் விமானி ஆக விருப்ப பட்டீர்கள், நல்ல வேலை அன்று அந்த வேலை உங்களுக்கு கிடைக்கவில்லை, இல்லையென்றால் விண்வெளியில் இந்தியாவுக்கு இவ்வளவு வெற்றிகள் சாத்தியபட்டிருக்குமே என்பது சந்தேகமே. இல்லையில்லை அன்று நீங்கள் போர் விமானி ஆகி இருந்தால், இன்று இந்திய விமான படை உலகின் தலைசிறந்த ஒரு விமான படையாக இருந்திருக்கும்.

ஆம், இந்திய குடியரசின் அதிக அதிகாரம் இல்லாத அதி உயர்ந்த பதவி, ஐந்து வருட ஜனாதிபதி பதவி; யாரும் அறிந்திருக்கவில்லை உங்களால் அப்பதிவியும் அலங்கரிக்க படும் என்றும். இன்றும் அந்த ஐந்து வருடமே(2002 - 2007) அப்பதவிக்கு அளவுகோளாக பார்க்கபடுகிறது. அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் செய்திடவில்லை(அப்படி ஒன்றும் செய்திடவும் முடியாது, அப்பதவியால்), ஆனால் இந்த பதவியை உங்கள் குறிக்கோளுக்கு படிக்கட்டாய் பயன் படுத்தி கொண்டீர். தெளிவான ஒரே குறிக்கோள், அதை அடைய ஒரே வழி; வளர்ந்த நாடாக இந்தியா, அதை சாத்திய படுத்துபவர்கள் இளைஞர்கள்..........இது தான் அந்த குறிக்கோளும் அதை அடைய நீங்கள் கண்டுபிடித்த வழியும். ஜனாதிபதியாய், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் குழந்தைகள், இளைஞர்களுக்கு அறிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வழியாக வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தீர்கள். அப்பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆசிரியராய் தொடர்ந்து இப்படியும் கூட வாழ முடியுமா என்று எண்ண வைத்தீர்கள். ஜனாதிபதியாய் சந்தித்த மாணவர் எண்ணிக்கையை விட அதற்கு பிறகு சந்தித்த மாணவர் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு தருணத்தில் மாணவர்களுடன் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது உங்கள் இறப்பும் ஒரு தனிதத்துவம் படைத்தது.

ஐரோப்ப யூனியன் பார்லிமென்ட்டில் பேசிய உரை, திருப்பதி திருத்தலத்தில் இந்தியாவிற்கே அர்ச்சனை செய்தது, வெற்றிகளில் சிறந்த வெற்றியாக போலியோ பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் இடை குறைந்த செயற்கை கால்களை வடிவமைத்ததை சொல்வது. சாகும் நிமிடங்களுக்கு சில மணித்துளிகள் முன்னர் கூட உங்களுக்காக ஆயுதம் ஏந்தி நின்று கொண்டே பயணம் செய்த காவலருக்கு நன்றி சொன்னது. இவ்வாறு பல நிகழ்வுகள், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

தலைவன் ஆவதற்க்காகவே கட்சி ஆரம்பிக்கும் இந்நாட்டில் நூறு கோடி மக்களாலும் தலைவனாக ஏற்று கொள்ள பட்ட ஒரே தலைவர் அதுவும் எந்த ஒரு கட்சி அல்லது இயக்கம் சாராதவர். ஒரு பஸ் எரிப்பு இல்லை, கல் எறிதல் இல்லை, எந்த ஒரு அசம்பாவிதம் இல்லை, வலுகட்டாய கடை அடைப்பு இல்லை.........இந்தியாவில் இதுவே முதல் முறை இப்படியொரு இறுதி பயணம்(மேற் சொன்ன காந்தி காமராஜரின் மறைவுகள் கூட சில அசம்பாவித சம்பவங்களை பதிவு செய்திருக்கிறது). மாறாக, சிறப்பு பேருந்துகள் இயக்க பட்டன, சில இலவச பேருந்துகளும் கூட இயக்கப்பட்டன. ஏன், இந்த இறுதி ஊர்வலத்தை பார்த்து சில அரசியல் தலைவர்கள் கூட கனவு காண ஆரம்பித்திருப்பார்கள் தங்கள் இறுதி பயணமும் இது மாதிரி இருக்க வேண்டுமென்று. சாமானியனை மட்டுமல்ல தலைவர்களையும் கனவு காண வைத்த இந்த பயணம், உங்கள் கனவு மெய்பதுவதற்கு சிறந்த எடுத்துகாட்டு. நீங்கள் நினைத்த வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைந்து விட்டது, இனி உங்களின் விதைகள் விருட்சமாக வளரட்டும்.








Saturday, July 4, 2015

முதல் மெட்ரோ பயணம்

முதல் மெட்ரோ பயணம்................ஓகே அப்படி பொத்தாம் பொதுவா "முதல்" மெட்ரோ பயணம்ன்னு சொல்லிற முடியாது. வேணும்ன்னா இந்தியால முதல் மெட்ரோ பயணம், ஒ ஒ ஓஓ அதுவும் சொல்ல முடியாது டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோகளிலும் தலா ஒரு பயணம் முடிந்தாகிவிட்டது, சரி முழு கட்டுமான பணிகளையும் பார்த்து பயணம் செய்த ஒரு மெட்ரோ பயணம்.

ஆம், வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார்ன்ற பழமொழிய எல்லோராலும் அனுபவிக்க முடியுதோ இல்லையோ, "மெட்ரோ கட்டுவதை பார்" இந்த வாக்கியத்தை கடந்த ஆறு வருடங்களில் சென்னையை தொடர்புடைய யாராலும் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. இந்த கட்டிட வேலைகளால் அரை கிமீ தூரத்தை கடக்க கூட அரை மணி நேரமாகிய நாட்கள், மழைக்கு ஒதுங்கி பில்லருக்கு அடியில் நின்று இதில் ஒரு track இருக்குமா அல்லது இரு track இருக்குமா போன்ற விவாதங்களை கேட்ட நாட்கள், கட்டுமான பணியின் போது நடந்த விபத்துகளால் அவ்வழி பாதைகளில் பயணம் செய்த சக பயணிகளுக்கு நடந்த கொடூர மரணங்கள், இவையல்லாமல் வெறும் துண்டு செய்திகளாக வந்த கட்டுமான அஸ்ஸாம், மற்றும் மணிப்பூர் பகுதி பணியாளர்களின் மரணங்கள், ஆட்சி மாற்றங்களுக்கு இடையில் வெகுவாக சிக்காமல் சிற்சில தடைகற்களை மட்டுமே தாண்டி வளர்ந்து கொண்டிருக்கும் மெட்ரோ, இப்படி நாம் தினமும் கேட்டு அல்லது பார்த்து வளர்ந்த மெட்ரோ சென்னை மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என்ற செய்தியே கொஞ்சம் ஆர்வமாக தான் இருந்தது. ஒவ்வொரு வெள்ளி கிழமைகளில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கே முதல் ஷோ முதல்  ரிவ்யூ கொடுக்கணும்ன்னு இருக்கும் ஷோஸியல் மீடியாக்களின் குறிக்கோள்களுக்கு மத்தியில் இந்த மெட்ரோ ஓபனிங் ஒன்றும் விதி விலக்கல்ல. படங்களை போல் 120ரூ டிக்கெட் இல்லை அதிகமே 40ரூ தான், டிக்கெட் கெடைக்கலைன்ற பிரச்சனையே கெடையாது, இப்படி பட்ட மொக்க படத்துக்குபோய் முதல் நாளே வந்துட்டோம்ன்னு வருத்தமும் இருக்காது. இவையனைத்தும் சேர்ந்து நாமளும் மெட்ரோல போய் ஒரு செல்ஃபி எடுத்து போடணும் என்ற எண்ணம் மேலும் ஆர்வத்தை கூட்டியது. ஆலந்தூர் முதல் அசோக் பில்லர் முடிய திரும்ப அசோக் பில்லரில் இருந்து ஆலந்தூர் முடிய, பயண நேரம் பத்து நிமிடங்களுக்கு குறைவே; ஸ்டேஷன் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பராக்கு பார்த்து சென்றது ஒரு அரை மணி நேரம் எடுத்திருக்கும்.

இதற்கு முன்பு இதே போல் பராக்கு பார்த்து கொண்டே மெட்ரோவில் பயணம் செய்தது ட்யூப் என்று செல்லமாக அழைக்க படும் லண்டன் மெட்ரோவில். முதல் இரண்டு மூன்று ட்யூப் பயணங்கள் சுவாரசியமும் மிரட்சியும் கலந்ததாகவே இருந்தது; சுவாரசியம் - எப்படி இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்களை கட்டி முடித்திருப்பார்கள், எவ்வளவு காலம் எடுத்திருப்பார்கள்; மிரட்சி - வழி தவறாமல் நண்பர்களின் பின்னாலயே சென்றது, இந்த கூட்டத்தில் இவர்களை தவற விட்டால் நம்மால் திரும்ப வீடு போக முடியுமா......அடுத்தடுத்த ட்யூப் பயணங்களில் "மிரட்சி" சுத்தமாக குறைந்தாலும் சுவாரசியம் சற்றும் குறையவே இல்லை, ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு புது புது ரூட்களின் ட்யூப் பயணம் புதிதாகவே இருந்தது. நிலத்துக்கு அடியில் இரண்டடுக்கு tunnelக்கே விலகாத ஆச்சரியங்களுக்கு இடையில்  ஐந்தடுக்கு tunnel அந்த ஐந்தடுக்குக்கும் escalator வசதி, அதில் ஒரு சிறு பிசுறு இல்லாமல் பயணம் செய்யும் லட்சகணக்கான பயணிகள் மேலும் மேலும் சுவாரசியத்தை கூட்டும். இந்த சுவாரசியம் அகலும் முன்னே அடுத்த ட்யூப் ரூட் தேம்ஸ் நதிக்கடியில்......வருடம் முழுவதும் நீர் ஓடும் நதிகடியில் சுரங்க பாதையா, அதுவும் இதை 150 வருடங்களுக்கு முன்னரே கட்டி விட்டனர்............இவைகளுக்கிடையில் ஏனோ தேவை இல்லாமல் நம்ம ஊரின் மெட்ரோ பணிகளை ஒப்பிட்டு பார்க்கும் மனது, அப்போதுதான் சென்னை மெட்ரோவில்  அடையார் நதியை(சாக்கடையை) கடந்து செல்லும் பாதையை கட்டி கொண்டிருந்தார்கள், ஆனால் அண்டர்க்ரௌண்ட் இல்லை, நதியின் மேலே செல்லும் பாதையே. நமது நாட்டின் வளங்களை 400 வருடங்கள் சுரண்டி சென்றால் இதை விட சிறப்பாகவே கட்டி இருக்கணும் என்று தானாக சமாதானம் அடையும் மனது. 

அதே சுவாரசியம் மற்றும் மிரட்சியை நிறைய கண்களில் ஆலந்தூரிலும் பார்க்க முடிந்தது. நாங்களும் மெட்ரோ ரயில் எரிட்டோம்ல என்று வெற்றி புன்னகையோடு சில பெண்கள் கூட்டம்; 150 அடிக்கு மேல் இருக்கும் escalator அதில் பயந்து பயந்து ஏறும் பெரியவர்களின் கூட்டம்; இதோ மெட்ரோ டிக்கெட், மெட்ரோ ஸ்டேஷனில் தண்ணி குடிக்கிறேன், இந்தா ட்ரெயின் வருது, இந்த கதவு திறக்குது..............இப்படி ஒரு நிமிசத்துக்கு முன்னூறு ஸ்டேடஸ் போடும் காலேஜ் இளசுகள் கூட்டம்; முதல் மெட்ரோ பயணம்ன்றத விட என்ட்ட iphone6 இருக்குன்னு காண்பிப்பதுக்கே செல்பி எடுக்கும் corporate கூட்டமும்;  இன்ஜினியரிங் கவுன்செல்லிங் வந்திருக்கும் மிரட்சி குறையாத சில வெளியூர் மக்களும். இவர்களுக்கு இடையில் நம்மளும் blog எழுதி ரெண்டு மாசத்துக்கு மேல ஆயுடுச்சே இந்த மெட்ரோ மேட்டர வச்சி ஒரு கட்டுரையாவது எழுதிரலாம்னு திரிஞ்ச நானும் ஒருத்தன்.

இந்த பயணத்தில் புகழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் நாற்பதினாயிரம் பயணிகள், இந்த நாற்பதினாயிரம் பயணிகளுக்கும் முகம் சுழிக்காமல் உதவி(லிப்ட் மற்றும், escalator ஏரியாகளில்) புரியும் volunteerகள். சொன்ன வினாடிக்கு(நிமிடம் அல்ல வினாடி) சரியாக வந்து நிற்கும் ட்ரெயின், எந்த பிளாட்ஃபார்மில் எந்த வழியாக செல்லும் வண்டி வரும், அதற்க்கு எந்த வழியாக செல்ல வேண்டும் இவ்வாறு பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் அறிவிப்பு பலகைகள்,  மேலும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். ஆனால், இவ்விசயங்களை லண்டன் ட்யூப் பயணத்தோடு கம்பேர் செய்தால், அனைத்துமே பாஸ் மார்க் கூட வாங்காது. மொத்த லண்டனில் 9ஜோன்களாக பிரித்து அதில் 11lineல் இயங்கும் ட்யூபோடு ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஆனால் நம் சென்னையில், நம் நாட்டில் நாம் இது வரை பயணம் தாம்பரம் பீச் சப்-அர்பன் ரயில், பறக்கும் ரயில் திட்டங்களோடு கம்பேர் செய்தால் இது நிச்சயம் புகழ்வதற்கு உரிய விசயமே. அதுவும் இந்த ஒரு பகுதி மட்டுமல்லாமல் முழு வேலையும் முடிவடைந்து சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இரண்டு corridorல் அனைத்து பகுதியையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்பதான சென்னையும் அதன் போக்குவரத்தும் ன்னு மெட்ரோவ பற்றி இன்னொரு blog எழுதலாம்.



Tuesday, April 14, 2015

Deja Vu


இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 18 நிமிடங்கள் ஆகும்]


".....................................................உனக்கு வேண்டியது பணம்"

"சாருக்கு மட்டும் பணமே தேவை இல்லையோ, உங்களுக்கு என்ன வேணும்"


"ஹா ஹா, எனக்கும் பணம்தான்........ஆனா அதுக்கு முன்ன உன்னோட மூளைய யூஸ் பண்ணி எனக்கு ஒரு வேலை"

"புரியலையே"

"நீ பேசுன clock encryption, secure cipher text கூடத்தான் எனக்கும் புரியலை............"

"ஆனா எனக்கு பணம் வேணும்றது மட்டும் உங்களுக்கு புரியுதே"

"உன்னோட பணத்தேவை சாதாரணம் கிடையாது, நீ அளவுக்கு அதிகமா எதிர் பார்க்குற"

"அளவுன்றது எது..........உன் அறிவுக்கு உனக்கு கிடைக்குற பணமும்தான் அதிகம்"


"நல்லா பேசுற......ஆனா எனக்கு இருக்குறது பணம் பண்ணுற அறிவு......உனக்கு இருக்குறது எனக்கு தேவையான அறிவு"

[waiter வறு கடலையுடன் வருகிறார்]

"KF strong, then cashew with pepper..........ம்ம் உனக்கு"

"வியாபாரம் பேசும் போது நான் சாராயம் குடிக்குறது இல்ல, ஒரு 65 மட்டும் சொல்லு"

"65 இங்க இருக்காது., வேற சிக்கன் சொல்லுறேன்......... bring one plate stuffed tangri kebab"

[waiter சென்றவுடன்]


"சரி, எனக்கும் உன்னுடைய அக்கௌன்ட்ல பணம் வளர்ற மாதிரி வளரணும்'

"சரி எனக்கும் வெப் செக்யூரிட்டி, encryption சொல்லித்தா......"

"ட்வெல்த் கூட படிக்காத உனக்கு encryption பத்தி சொன்னா புரிஞ்சுக்க முடியுமா"

"அதே மாதிரிதான் பணம் பண்ணுறது எப்படின்னே தெரியாதவன்ட்ட திடீர்ன்னு நானுறு கோடி ரூவா கொடுத்தா அத காப்பாத்திக்க தெரியாது, உன் பணத்த காப்பாத்த முடியலைன்னா பரவாஇல்ல என்னையும் மாட்டி விட்டுருவ............சரி நான் ட்வெல்த் முடிக்கலைன்றது எப்படி தெரியும்"

"மூணு மாசமா உன்ன follow பண்ணுறேன்"

"நீ follow பண்ண ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே எனக்கு தெரியும்"

"................"

"actuallaa நானும்தான் உன்ன follow பண்ணினேன், நீ follow பண்ண ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்ன இருந்தே"

"ஏன் ........"

"அத பேசுறதுக்குதான் இப்ப இங்க இருக்கோம்........."

"ம்ம் "

"உன்னோட மொத assignmentக்கு சம்பளம் ஒரு கோடி...........பேரம் பேசாத ஒத்துக்கிட்டா வேலை, அட்வான்ஸ் 25 லட்சம் வேலை முடிஞ்ச உடனே மீதி 75 லட்சம்"

"வேலைய சொல்லலையே......."

"மொதல்ல ok சொல்லு, என்ன வேலைன்னு அடுத்து சொல்லுறேன்"

"ஹஹஹா சரி 25 லட்சத்துடன் நான் ஓடிட்டா??"

"உன்னோட தேவைக்கு 25 லட்சம் பத்தாது, நிச்சயம் திரும்பி வருவ"

"........."

"இந்தா இந்த laptopஓட ownerஅ கண்டு பிடிக்கணும், அதான் உன்னோட வேலை"

"புரியலையே "

"இது என்னோட partner laptop, நாலு மாசமா காணோம்.......அவரைத்தான் கண்டு பிடிக்கணும்"

"யாரும் எதிரிகள் ......"

"வெளி எதிரிலாம் கெடையாது........அவரும், அவர் பண ஆசை, அப்புறம் அவரோட encryption அறிவு தான் அவருக்கு எதிரி"

"ஓ அவரும் cryptologistஆ........"

"அதுனால தான் உன்ன தேர்ந்தெடுத்தேன் இந்த வேலைக்கு............இந்த laptop வச்சிக்கோ, இதுல அவர் கடைசியா பண்ணிய வேலைகள் இருக்கு அது மூலமா என்ன ஆனார்ன்னு கண்டு பிடிக்கணும்"

"வாழும் புரியலை தலையும் புரியலை............"

"அதுக்குதான் ஒரு கோடி.......உன்னோட encryption அறிவ வச்சி இந்த laptopல என்ன projectல ஈடுபட்டுருந்தார் வேற என்னாலும் பண்ணினார்ன்னு கண்டு பிடிக்கணும், இதுக்கு மேல எதுவும் கேக்காத............நான் உன் கூட ரொம்ப நேரம் இருக்க முடியாது, இருந்தா நம்ம ரெண்டு பேருக்கும்தான் ஆபத்து, நீ வேலைய முடிச்ச உடனே நானே உன்ன வந்து பாக்குறேன், அது வரை என்ன தேட வேண்டாம்.....நான் கிளம்புகிறேன்"

 "என் advance ???"

"இங்க வருவதற்கு முன்னே உன் accountக்கு 25லட்சம் transfer பண்ணிட்டேன், இந்நேரம் உன் accountல் கிரெடிட் ஆகி இருக்கும்"

வேகமாக தனது ஃபோனை எடுத்து அக்கௌன்ட் பேலன்ஸ் பார்த்தான், தன்னிடம் இருந்த கடைசி முன்னுற்றி அறுபதையும் சேர்த்து 2500360 பேலன்ஸ் இருந்தது, பணத்தை பார்த்த ஒரு வெற்றி சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தான்.......எதிர் இருக்கையில் ஆளுக்கு பதில் laptop bag. வலது புறம் திரும்பி வாசல் நோக்கி பார்த்தான்....செக்யூரிட்டிக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு வெளியே நடந்து செல்வது தெரிந்தது. அதற்க்கு மேல் அவனை பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காமல் Beer, Cashew மற்றும் chickenம் வந்தது.

"2shots margeritta and Bring the cheque"

waiter சென்ற உடன் பீரும்  உள்ளே சென்றது, ஏனோ வேலையை பற்றிய யோசனையை விட அந்த 25 லட்சத்தை பற்றியே அதிகமாக இருந்தது. அதை செலவு செய்வது இவனுக்கு ஒன்றும் பெரிய காரியமில்லை.........பில்லுடன் வந்த waiteரிடம் கார்டை கொடுத்து......"take the bill amount and book a premium suite" என்றான்.
.
.
.
.
.
.
.
premium suite - சொர்க்கத்த காசு கொடுத்து வாங்கக் கூடியவர்களுக்காக இந்த சொர்க்கத்த கட்டி வைச்சிருக்காங்க. சிக்கனுடன் உள்ளே சென்ற பீரும் மார்கரிட்டாகளும் உடனே bedல் தள்ளின. அடுத்த நான்கு நாட்கள் சென்னையின் மேல்தட்டு வாழ்க்கையை ஒவ்வொரு வினாடியும் ரசித்து வாழ்ந்தான். இடையில் ஒரு வினாடி கூட அந்த laptopஅ ஓபன் பண்ணி கூட பாக்கலை. நாலாம் நாள் இரவு அக்கௌன்ட் பேலன்ஸ் மெசேஜ் வந்தது......மீதி இருந்த amount 1302406, இனி தூங்கினால் இந்த வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க முடியாது.

Bagல் இருந்து laptop எடுத்து பூட் பண்ணினான், password crack பண்ணுவதற்கு வெகு நேரம் எடுக்கவில்லை. desktopல் சில folderகள், இவனுக்கு ஈடுபாடு வருமளவுக்கு எந்த ஒரு விசயமும் இல்லை. ஒரு பெண்ணின் புகைப்படம் தவிர வேறு எதுவும் இல்லை.

C மற்றும் D driveல் சில hacking சாப்ட்வேர்களும் மற்றும் சில pdf டாகுமென்ட் தவிர வேறு எதுவுமில்லை. wi fiல் கனெக்ட் பண்ணி மேலும் சில ஹாக்கிங் சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தான், command promptல் அதில் சில சாப்ட்வேர்களை ரன் செய்து சில மணி நேர தகவல் பரிமாணத்தில் அவனுக்கும் அந்த laptopக்கும் ஒரு உடன் பாடு வந்தது போல் தெரிந்தது. மானிட்டரில் இன்னொரு சிஸ்டம் பூட் ஆவது போல் தெரிந்தது. இப்பொழுது ஒரு சிஸ்டத்துக்கு உள்ளே இன்னொரு சிஸ்டம் தனி மெமரி drives, அதற்குள் எல்லா கணக்குவழக்குகளும் இருந்தது. யார் யார் அக்கௌன்ட்ல இருந்து எப்பப்ப எவ்ளோ வந்தது என்ற விவரம் தனியாக ஒரு folderல் இருந்தது.

அடேயப்பா நூதன திருட்டு, எந்த அக்கௌன்ட்டையும் hack பண்ணி பெரிய amount எதையும் கொள்ளை அடிக்கலை, மேக்சிமம் 200 ரூபாய் எந்த அக்கௌன்ட்ல இருந்தும் ஆனால் கிட்டத்தட்ட ஒரு பத்தாயிரம் அக்கௌன்ட்ல இருந்தாவது பணம் வந்திருக்கும், அதுவும் வருஷத்துல நாளே நாட்கள்ல மட்டும்தான் மார்ச், ஜூன், செப் மற்றும் டிசம்பர் மாத கடைசி நாட்களில் மட்டும்தான், ஒரு வேலை quarterly வட்டியில் ஒரு பகுதி இந்த மட்டும் இந்த அக்கௌன்ட்டுக்கு வரும் மாதிரி பண்ணிருப்பானோ. செம brilliant....பெரிய திருட்டு கிடையாது, ஆனா திருட்டுகளின் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப பெருசு, ஒவ்வொரு பேங்க்கின் server sideல ஒருசில program ரன் பண்ணி இதை automate வேற பண்ணிருக்கான். கோடிகள்ல பணம் வச்சிருக்க எவனும் நூறு இருநூறு ருபாய் காணமல் போனதை complaint பண்ணிருக்க வாய்ப்பில்லை, முதல்ல கண்டு பிடிச்சிருக்கவே வாய்ப்பில்லை, அப்புறந்தான complaint பண்ணுவது. சில தருணங்கள்ள அம்மாதிரி சிறு அமௌண்ட் வெளியவும் போயிருக்கு, அது கண்டு பிடிக்கபட்ட பேங்க் சாப்ட்வேர் மேல் குறை கூறி திருப்பி செலுத்திய பணங்களாக இருக்கும்.

ஒவ்வொரு folderலும் ஒவ்வொரு வகையான ஃபோர்ஜெரிதனங்கள், ஆனால் எந்த ஒரு திருட்டையும் யாரும் கண்டு பிடிக்க வாய்ப்பே இல்லாமல் செய்திருக்கிறார்கள். பிரமிப்பு அகலாமல் ஒவ்வொரு folderஆ பார்க்கும் பொழுது சுய சரிதை போல் ஒரு டாகுமென்ட். எட்டு வருடங்களுக்கு முன்னர் போலி கிரெடிட் கார்ட்கள் மூலம் திருடியதில் இருந்து எழுதி இருக்கான் நாளும் மாசம் முன்னாடி முடிய எல்லாம் எழுதி இருக்கான். ஆரம்ப காலங்கள்ல இருந்தே எதுவுமே பெரிய திருட்டுகள் கிடையாது. சிறு துளி பெரு வெள்ளம்ன்றத நம்பி திருடிருக்கான்க இந்த ரெண்டு பேரும். கடைசி சில பக்கங்களை படித்தால் அவன் என்ன ஆனான் என்ற விவரம் தெரிய வாய்ப்பிருக்கு என்று இறுதி சில பக்கங்களுக்கு scroll செய்தான்.

நேற்றை போலவே இன்றும் ஒரு சில விஷயம் ஏற்கனவே நடந்தது போல் தோன்றியது. அந்த நாட்டுபுறத்தான follow பண்ணதுலருந்து ஒரே குழப்பமா இருக்கு. ஆள பாத்தா படிச்சவன் மாதிரி தெரியலை ஆனா கோடி கணக்கா சம்பாதிக்கிறான். பிறவி பணக்காரன் கூட கிடையாது. இன்னைக்கி வேணிகிட்ட பேசுனேன், வேகமா வந்து அவளையும் கூட்டிட்டு போக சொல்லுறா. நான் பண்ணுற வேலைக்கு அவளை பக்கத்துல வச்சிக்க முடியாது, இத அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலை.

[அடுத்த நாள்]
இன்னைக்கு நாட்டுபுறத்தான் அக்கௌன்ட்டுக்கு 300 கோடி ஒரே ட்ரான்ஸாக்சன்ல வந்தது. ஹர்ஷத் மேஹ்தா மாதிரி ஏதோ வேலை பண்ணுறான் ஆனா என்ன பண்ணுறான்னு புரியலை.

[அடுத்த நாள்]
இன்னைக்கும் காலைலருந்து சில விஷயங்கள் ஏற்கனவே நடந்தது போலவே இருக்கு. வேணி கால் பண்ணி பேசியது கூட ஏற்கனவே நடந்தது போல இருந்தது, அதுக்கு நான் எப்போதுமே அவள் ஞாபகமாகவே இருப்பதால் அப்படி தோணுது என்று அவள் சொன்னால். ஆனால் ஏதோ ரொம்ப வித்தியாசமாக இருந்தது. எப்படியும் ஒரு பெரிய அமௌண்ட் அடிச்சிட்டு வேற எங்கயாவது போய் வேணியோட செட்டில் ஆகணும். நாளைக்கு இதை பத்தி partnerட்ட பேசணும்.

[அடுத்த நாள்]
இன்னைக்கு partnerட்டயும், சில விஷயங்கள் ஏற்கனவே நடந்தது மாதிரி வர்ற ஞாபகங்கள பத்தி சொன்னேன் அவனும் இத ஒன்னும் பெருசா எடுத்துக்கல. அப்புறம் அந்த நாட்டுபுறத்தான பத்தியும் சொல்லி, அது மாதிரி பெருசா அடிச்சி செட்டில் ஆகலாம்ன்னு சொன்னேன், அதையும் அவன் பெருசா கண்டுக்கலை. நாளைக்கு கட்டாயம் இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்.

[அடுத்த நாள்]
டாக்டர் போய் பாத்தேன், இதுக்கு பேர் Deja Vu, சாதரணமா எல்லாருக்கும் இது மாதிரி வரும், ஒண்ணும் பயபடுறதுக்கு இல்லை, ஆனா உங்களுக்கு ஒவ்வொரு நாளும் நாலஞ்சு விஷயமாவது அப்படி தோணுறது கொஞ்சம் சந்தேகமா இருக்குன்னார். நல்லா தூங்க சொல்லிருக்கார்.  ஒரு வாரத்துக்கு மாத்திரை கொடுத்திருக்கார் அது முடிஞ்ச உடனே அடுத்த வாரம் வந்து பாக்க சொல்லிருக்கார். டாக்டர பாத்துட்டு வெளிய வரும் போது அந்த கால் வந்தது.......இந்த நம்பர் partner அப்புறம் வேணிய தவிர வேற யாருக்குமே தெரியாதே, வேற யாரா இருக்கும்.....

"ஹலோ யாரு......."

"நான் யாருன்றது இருக்கட்டும், நான் உன் கூட கொஞ்சம் நேரா பேசணும்..........."

"ஹலோ யாருன்னு பேர சொல்லுங்க ஃபர்ஸ்ட்"

"என் பேரு மட்டும் போதுமா அல்லது நீ ஒவ்வொரு பேங்க் அக்கௌன்ட்ல இருந்து பணம் அடிக்கிறத பத்தியும் சொல்லனுமா"

"ஏய் ஏய் நீ யாரு, நீ என்ன சொல்லுரியேன்னு புரியலையே"

"பதறாத, உன்கூட நேரா பேசணும், உன்னால எனக்கு ஒரு வேலை ஆகணும் ............நீ மட்டும் ஈவினிங் ஆறு மணிக்கு பார்க் ஹோட்டல் வா........"

"நான் நீ நினைக்கிற ஆள் கிடையாது, வேற யாரோன்னு நினைச்சு பேசுற....."

"ஏய்!!!!!!, ஈவினிங்..... ஆறு மணி......பார்க் ஹோட்டல்........, நீ வரல அப்புறம் நான் என்ன செய்வேன்னு சொல்ல தேவை இல்ல ......"

"............."

"ஈவினிங்..... ஆறு மணி......பார்க் ஹோட்டல்........பாப்போம்"

யாரா இருக்கும், நம்மள பத்தி எப்படி தெரிஞ்சிக்கிட்டான், இத partnerட்ட சொல்லலாமா வேணாமா, நம்ம ஹெல்ப் தேவைன்னு சொல்லுறான், போய்தான் பாப்போம், பேசுனத பாத்தா மாட்டி விடுறவன் மாதிரி தோணலை.....சீக்கிரமே போய் பாப்போம், ஏதும் பிரச்சினை இல்லன்னா மட்டும் ஆறு மணி முடிய வெயிட் பண்ணலாம்.

[ஈவினிங் 5 மணி]
பார்க் ஹோட்டல் வாசல்ல நிக்கும் போது, ஒரு கை இடது தோல தட்டி திருப்பியது, திரும்பினா அந்த நாட்டுபுறத்தான்......இவன் எதுக்கு இப்ப இங்க, அதுவும் எதுக்கு நம்மள கூப்பிடுறான்....

"நீ அஞ்சு மணிக்கே வருவேன்னு தெரியும்........"

"அப்ப எனக்கு போன் பண்ணியது நீங்க தானா"

"இப்பதான் கண்டுபிடிச்சியா, நான் உன்னைய பெரிய அறிவாளின்னு நினைச்சேன்"

"எதுக்கு என்ன பாக்கணும்ன்னு சொன்ன.....சொன்னீங்க"

"பாத்தியா ஆள பாத்த உடனே மரியாதை குறையுது....வா உள்ள போய் உக்காந்து பேசலாம், பயபடாத ஹோட்டல் சுத்தி நம்ம ஆளுங்க தான் இருக்காங்க"

"எதுக்கு என்ன பாக்கணும்ன்னு சொன்ன.....சொன்னீங்க"


"நீ என்ன படிச்சிருக்க"

"cryptology......எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க"

"நீ எப்படி வேற அக்கௌன்ட் brake பண்ணி அதுல இருந்து பணம் transfer பண்ணிக்கிற"

"சார் நீங்க மட்டும் ஏதேதோ அக்கௌன்ட்ல இருந்து கோடி கோடியா அடிக்கிறீங்க, நாங்க ஜஸ்ட் நூறு இருநூறுதான்......"

"ஓ, அதுவும் தெரியுமா உனக்கு........"

"சொல்லுங்க சார் எதுக்கு இப்ப என்ட்ட பேசணும்ன்னு வர சொன்னீங்க"

"உன்னால எனக்கு ஒரு வேலை ஆகணும்.....இந்த வேலைய முடிச்சிட்டு நீ உன்னோட வேணியோட போய் செட்டில் ஆகலாம்"

"............."

"என்ன பாக்குற, உன்ன பத்தி எல்லாம் எனக்கு தெரியும், உனக்கு தேவை பணம்"

"சாருக்கு மட்டும் பணமே தேவை இல்லையோ, உங்களுக்கு என்ன வேணும்"

"ஹா ஹா, எனக்கும் பணம்தான்........ஆனா அதுக்கு முன்ன உன்னோட மூளைய யூஸ் பண்ணி எனக்கு ஒரு வேலை"

"புரியலையே"

"நீ பேசுன clock encryption, secure cipher text கூடத்தான் எனக்கும் புரியலை............"

"ஆனா எனக்கு பணம் வேணும்றது மட்டும் உங்களுக்கு புரியுதே"

"உன்னோட பணத்தேவை சாதாரணம் கிடையாது, நீ அளவுக்கு அதிகமா எதிர் பார்க்குற"

"அளவுன்றது எது.................உன் அறிவுக்கு உனக்கு கிடைக்குற பணமும்தான் அதிகம்"

"நல்லா பேசுற......ஆனா எனக்கு இருக்குறது பணம் பண்ணுற அறிவு......உனக்கு இருக்குறது எனக்கு தேவையான அறிவு"

[waiter வறு கடலையுடன் வருகிறார்]............................................................................... 


Wednesday, February 18, 2015

ராஜராஜ சோழனுடன் ஜாக்கிங்

இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 15 நிமிடங்கள் ஆகும்]

ராஜா ராஜா சோழன் கூட ஜாக்கிங் போனா எப்படி இருக்கும், அப்படித்தான் நேற்றைய காலை ஜாக்கிங்கும் இருந்தது முகிலனுக்கு. நேற்று காலை கூட முகிலன் இதை முழுசா நம்பல, ஆனால் இன்று இரவு ஆள் அரவம் இல்லாத அந்த parkல் இப்பொழுது அதே ராஜ ராஜ சோழனுக்காக காத்துட்டு இருக்கான்.

நேற்று காலை

"ஏம்ப்பா முகிலா இன்னைக்கு இவ்வளவு லேட்..............." காலை ஜாக்கிங்கில் பரிச்சயம் இல்லாத மனிதர்கள் பேசுவது அல்லது சிறு புன்னகை செய்வது இயல்புதான் ஆனா பேரையும் சொல்லி உரிமையா ஏன் லேட்ன்னு கேட்ட உடன் கொஞ்சம் jerk ஆகிட்டான். இருந்தாலும் கொஞ்சம் ஸ்பீட குறைச்சிக்கிட்டு "லேட் ஆயுடுச்சி சார் ன்னு மொக்கையா ஒரு பதில் சொன்னான்". "அப்பா எப்படி இருக்கார்ப்பா" என்ற அடுத்த கேள்வியில் மேலும் குழம்பியவனாய், "அவர் நல்லா இருக்கார் சார், ஆனா நீங்க யாருன்னு தெரியலையே" என்றான். நீ ஜாக்கிங் முடிச்சிட்டு வா, நான் அந்த பென்ச்ல உக்காந்துருக்கேன் என்று இவன் கேள்வியையே கண்டு கொள்ளாதவராய் trackல் இருந்து விலகி ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்சில் உக்காந்தார்.

இருக்கிற குழப்பத்தில் வழக்கமா ஓடுற distance கூட ஓடல, ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு அவர் இருந்த பெஞ்ச் பக்கத்தில் போய் நின்னான். முகிலன் இன்னொரு முறை நீங்கள் யார் என்று கேட்பதற்கு முன்னரே சொன்னார் "நான்தான் அருள்மொழிவர்மன்" கை குலுக்கி ஹலோ சொல்லும் போதே அடுத்த அதிர்ச்சி கொடுத்தார், "சன் ஆஃப் பராந்தக சுந்தர சோழன்".

மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான், பார்க்க தெளிவாதான் இருக்கார் அப்புறம் ஏன் இப்படி கீழ்பாக்கம் கேஸ் மாதிரி பேசுறார்........"புரியலையே சார் நீங்க யாரு"......

"மேற்க்கே சாலுக்கிய பகுதியையும் தெற்க்கே சிங்களத்தையும் வென்ற அதே ராஜ ராஜன்தான்பா."

அய்யோ நாம நேத்து ராத்திரி ஒன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையே........, அவனையே கிள்ளி பாத்துகிட்டான் நிச்சயம் கனவு இல்லை இது. அந்த பெஞ்சை விட்டு விலகி நடந்தான், விடாமல் தூரத்தி வந்த அருள்மொழிவர்மன் நீ நம்பித்தான் ஆகணும்ப்பா என்று பேச்சை தொடர்ந்தார்.......... நம்ம சந்ததியர் எப்படி இருக்கிரார்கள்ன்னு பாக்கலாம்ன்னு வந்தேன், டைம் மெஷினில் தான் வந்தேன்.

டைம் மெஷினா.......டைம் மெஷினில் வேற பீரியடுக்கு போற மாதிரி நிறைய கதைகள் படிச்சிருக்கான், ஆனா அந்த டைம் மெஷினில் ராஜராஜன் தன்னை பார்க்க வந்ததா கனவு கூட கண்டதில்லையே..... நம்பியும் நம்பாமலும், நீங்க எப்படி இங்கிலீஷ்லாம் பேசுறீங்க, tracksuit shoesலாம் போட்டுருக்கீங்க என்றான்.

"ஏன்ப்பா டைம் மெஷின்னு எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னன்னா tracksuitன்னு சின்னபிள்ள தனமா பேசிட்டு இருக்க". முகிலனுக்கு இந்த பதில கேட்ட உடனே கொஞ்சம் அசிங்கமாயிடுச்சு, ச்ச்ச 1200 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு ஆளு நம்மள இப்படி அசிங்க படுத்துறாரே............ஐயோ நம்மளை அறியாமல் நாமளே நம்ப ஆரம்பிச்சிட்டோமோ??

நீங்க சொல்லுறத நம்பும்படியா இல்லையே என்றான் முகிலன்; "நான் உன்னோட futureக்கும் போயிட்டு தான் வந்துருக்கேன், அதுல நாளைக்கு நடக்க போற ஒரு விஷயத்த சொன்னா நம்புவியா"??

இதில் கொஞ்சம் logic இருப்பதாய் நினைத்து சரி சொல்லுங்க பாப்போம் என்றான்.

"நீ நாளை முதல் ABC Corp க்கு வேலைக்கு செல்வாய். அவ்வாறு நடந்தால் நாளை இரவு இதே பார்கில் இருப்பேன் வந்து பார்" சொல்லி விட்டு விறு விறு என்று ஓடி மறைந்தார்.

இவ்வளவு நேரம் நடந்த விஷயங்களில் குழம்பி இருந்தாலும், கடைசியாய் சொன்ன விஷயம் இம்மியளவு கூட நடக்க வாய்ப்பு இல்லாதலால், ஏதோ புத்தி பிசகிய ஒருவன் நம் காலை ஜாக்கிங்கை கெடுத்து விட்டான் என்று குழப்பமின்றி நடக்க ஆரம்பித்தான்.

வீடு வரை நடந்து வரும் போது பல யோசனைகள், யாரோ ஒருவன் எப்படி நம்முடைய பெயர்  அழைக்க முடியும். அதுவும்  உருவத்தையும் பேசிய தெளிவையும் வைத்து பார்க்கும் பொழுது பைத்தியம் போல் தெரியவில்லையே. ஆனால், அவர் சொல்வது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. XYZ Corpல் வேலைக்கு சேர்ந்து இந்த 12 வருடத்தில் வேறு எந்த ஒரு வேலைக்கும் விண்ணப்பித்தே இல்லை, அதுவும் இந்த ABC Corp  தன் XYZ Corp ன் போட்டி கம்பெனி என்ற காரணத்தினால் இந்த கம்பெனிக்கு மாறும் எண்ணம் இருந்ததே இல்லை.

காலை பார்க்கில்  நடந்த விஷயங்களை வீட்டில் அகல்யாவிடம் கூட சொல்ல வில்லை, சொன்னால் என்ன நினைப்பாள்.......இவருக்கு மூளை குழம்பிடுச்சின்னு சொல்லி ஊர்ல இருந்து எல்லாரையும் வர வச்சிருவா. இருந்தாலும் கேட்டே விட்டாள் அவள் "என்னங்க லூசு மாதிரி எங்கயோ பாத்துட்டு ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க....."; வேறு வழி இல்லாமல் நடந்ததை சொன்னான் முகிலன். "நினைச்சேன், நீங்க book exhibitionல இருந்து இவ்ளோ சுஜாதா புக்ஸ் வாங்கிட்டு வந்து படிக்கும் போதே இப்படி ஏதாவது ஆகும்ன்னு நினைச்சேன்". மனைவியின் இந்த பதிலை எதிர் பார்க்காத முகிலன் அவசரமாக இட்லியை முழுங்கி விட்டு ஆபீஸ்க்கு கிளம்பி ஓடினான்.

ஆபிஸ் வந்தது முதல் அதிக வேலை, நேற்று இரவு ரிலீஸ் செய்த சாப்ட்வேரில் நிறைய பிரச்சனைகள் இருந்தது என்று ஏகப்பட்ட மீட்டிங்கள், மீண்டும் ஒரு சாப்ட்வேர் இன்றே ரிலீஸ் செய்யணும்னு நிக்கிறான் அமெரிக்காகாரன். "டேய் ஒருமாசம் டைம் எடுத்து ரிலீஸ் பண்ணுன சாப்ட்வேர்க்கே ஓர் ஆயிரம் பிரச்சனை, இதுல எப்படிடா உடனே ரிலீஸ் பண்ணுறது" ஒரு வழியா அவன சமாளிச்சு ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் காலையில் இருந்து வந்த மெயில் ஒன்றும் படிக்கலை, சரி பரவாயில்லை, நாளை காலை பார்க்கலாம் என்று close பண்ணும் பொழுது ஒரு subject lineஐ படிக்கும் போதே கால்கள் வலுவிழந்தன. "Welcome to ABC Corp"............ பதட்டத்தை சரி செய்து கொண்டு, மீண்டும் இடத்தில் உட்கார்ந்து மெயிலை ஓபன் பண்ணி படிக்க படிக்க தலை கிர்ரென்று சுத்தியது.

"Dear Employees,

As per the ABC Corp's acquisition of XYZ Corp, ......................."

அப்படி என்றால் நான் நாளை முதல் ABC Corp employee, அதை விட முக்கியம் இன்று காலை நம்மிடம் பேசியது ராஜராஜ சோழனே. இதை நினைக்க நினைக்க படபடப்பு  கூடியது முகிலனுக்கு. வேண்டாம் இதை அகல்யாவிடம் சொல்லவே வேண்டாம், சொன்னால் கட்டாயம் மயக்கம் போட்டு விடுவாள். அன்று இரவு, மறுநாள் காலை பார்க், ஆபீஸில் நேரத்தை கடத்துவது யுகத்தை கடத்துவது போல் இருந்தது முகிலனுக்கு. சாயந்திரம் ஐந்து மணிக்கே பார்க்கிற்கு வந்து விட்டான், ஒவ்வொரு பெஞ்சா மாறி மாறி உக்காந்து ராஜராஜ சோழனை எதிர்பார்த்து இருந்தான் முகிலன்.

இப்பொழுது(இன்று இரவு) 

சரியாக ஏழரை மணிக்கு ராஜராஜன் வந்தார். முகிலன் அவரிடம் சார், உங்களை சார்ன்னு கூப்பிடலாமா அல்லது அரசேன்னு கூப்பிடவா. வேணாம்பா சும்மா சார்ன்னு கூப்பிடு.....நீங்கள்லாம் இப்ப குடியரசுல இருக்கீங்க, நானெல்லாம் உங்களுக்கு அரசன் கிடையாது.

தொடர்ந்து நிறைய கேள்விகள், சார் எப்படி அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை வென்றீர்கள், அந்த காலத்துலயே எப்படி அவ்வளவு பெரிய கோபுரத்தை கெட்டுனங்க, அது சரி டைம் மெஷினே கண்டு பிடிச்சிருக்கீங்க அப்புறம் கோபுரம் எல்லாம் ஈஸி தான். எதுக்கு இப்ப இங்க வந்தீங்க, எதுக்கு குறிப்பா என்னை செலெக்ட் பண்ணீங்க?? எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து, முகிலனின் படபடப்பு குறைய காத்திருந்தார்.

முதல்நாள் பேசியது போலே தெளிவான குரலில் பேச ஆரம்பித்தார், உன்னையும் இந்த இடத்தையும் தேர்ந்தெடுத்தது முறையில்லா வரிசை முறைப்படியே முடிவெடுத்தோம். முகிலனின் முகத்தில் குழப்ப ரேகையை படித்தவராய், அதான்ப்பா ரேன்டம் நம்பர் மூலமே உன்னை பார்க்கலாம் என்று தேர்ந்தெடுத்தோம். என்னை பொறுத்த வரை அந்த காலம், இந்த காலம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை எல்லாமே நிகழ் காலம்தான். அனைத்து நிகழ்வுகளும் நிகழ் காலம்தான், மனிதன் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயற்கையின் வேகத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறான், அதே மனிதன் இயற்க்கை வேகத்தை மீறி முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்ல முடிந்தால் அவன் தான் காலம் வென்ற கால இயந்திரம் ஆவான். முகிலனுக்கு ராஜராஜனுடன் இருக்கிறோம் என்பதில் இருந்த குழப்பத்தை விட அவர் சொன்ன தியரி ரொம்ப குழப்பமாக இருந்தது. மேலும் அவரே தொடர்ந்தார், அதாவது நாம் இப்பொழுது ஒரு பத்து நிமிடமாக பேசி கொண்டிருக்கிறோம், முதல் நிமிடம் பேசிய விஷயங்கள் இறந்த காலம் என்பாய் நீ, ஆனால் அந்த முதல் நிமிடமும் நிகழ் காலமே எனக்கு, ஏனென்றால் அந்த நிமிடங்கள் எங்கும் செல்ல வில்லை அது அங்கேயேதான் இருக்கிறது. அதை உணர்வதற்குரிய வாய்ப்பு நமக்கு அந்த தருணம் மட்டுமே தர பட்டது, அந்த வாய்ப்பை தேவையான நேரத்தில் பெற முடிந்தால் அவன்தான் கால இயந்திரம். சுருக்கமாக சொன்னால் நிகழ்வுகளை அழிக்க முடியாது, அதை மறைக்க மட்டுமே முடியும், அந்த மறைக்கும் பொருள் தான் காலம்.

என்ன சார், ஏதோ எல்லா விசயங்களும் protected folderல தான் இருக்கும், சூப்பர் யூசர் அட்மின் மட்டும் வாங்கிட்டா போதும் திருப்பி திருப்பி dataவ பாத்துக்கலாம்னு மாதிரி சிம்பிளா சொல்றீங்க. நீங்க சொல்லுறத பாத்தா, எதிர் காலம்ன்றதும் இப்பயே நடந்துகிட்டேதான் இருக்கு நாம தான் இன்னும் அந்த காலத்தை பார்க்க தகுதி பெறலைன்னு சொல்றீங்க கரெக்டா??

மிகவும் சரி.....என்னிடம் அந்த காலங்களுக்கு செல்ல வேண்டிய password இருக்கிறது.

ஓ, அப்படின்னா மார்ச் 29 2015 ஆம் தேதி நடக்க போறத கூட இப்ப தெரிஞ்சிக்கலாமா சார்??  2015 என்னப்பா 2800ல நடக்க போற விஷயத்தை கூட தெரிஞ்சிக்கலாம், ஆனா எதுக்கு 29 மார்ச்ன்னு  அந்த ஒரு தேதிய முக்கியமா கேக்குறப்பா?? சார், அது வந்து கிரிக்கெட் வேர்ல்ட் கப் பைனல் நடக்குற நாள், அன்னைக்கு மேட்ச்ல யார் ஜெயிச்சி கப் வாங்குறாங்கன்னு தெரிந்ச்சிகலாம்ன்னு தான்........என்று வழிந்துகொண்டே இழுத்தான் முகிலன்.

ரிசல்ட் தெரிஞ்சிகிறது என்ன, நீ ஏன் கூட வந்து அந்த மேட்சே பார்க்கலாம். முகிலனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை, "நானும் டைம் மெஷினில் பயணிக்கலாமா, அதுவும் நடக்க போற வேர்ல்ட் கப்பே பாக்கலாமா", கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சரி என்றான். நீ உட்கார்ந்திருக்கும் அதே பொசிசனில் உன் இடது உள்ளங்கையை என் வலது உள்ளங்கையில் வைத்து இந்த 18 மந்திரங்களையும் சொல் அதன் பின் இரண்டாவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா மெல்பெர்ன் மைதானத்தில் நாம் இருவரும் மேட்ச் பார்த்து கொண்டிருப்போம்.

முகிலனுக்கு தலை கால் புரியவில்லை, மனதிலே ஆயிரம் எண்ணங்கள், இன்றே 45 நாட்கள் கழித்து நடக்க இருக்கும் ஃபைனல் பார்க்கலாம். திரும்பி வந்து நண்பர்களிடத்தில் யார் கப் வெல்வார்கள் என்று பெட் கட்டலாம், அய்யோ யாரும் புக்கிகள் இந்த விஷயமறிந்து நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தால்..., யாரிடமும் சொல்ல கூடாது, அகல்யாவிடம் மட்டும் சொல்லலாமா??, வேண்டாம், அவளிடம் சொல்வதும் ஒண்ணுதான் facebook அல்லது whatsappல் போடுவதும் ஒண்ணுதான்........  "ம்ம் கவனம், நான் சொல்வதை தவறில்லாமல் திரும்ப சொல்" என்ற ராஜராஜ சோழனின் குரலால் நினைவலையில் இருந்து  திரும்ப வந்தான்.

மந்திரத்தை சொல்வதற்கு தயாராகி கொண்டான், கண்களை மூடி கொண்டு, அவர் சொல்வதை அப்படியே சொல்லி கொண்டிருந்தான்.........இருந்தாலும் மனக்குரங்கு திரும்ப வேறு எண்ணங்களை எண்ண ஆரம்பித்தது......ஐயோ அகல்யாட்ட கூட சொல்லாம கிளம்பிட்டோமே, ஒரு வேலை திரும்ப வர முடியலைன்னா.....ச்சீ ச்சீ அப்படில்லாம் நடக்காது இவர் ராஜா நம்மள அப்படிலாம் விட்டுற மாட்டாரு, சரி ஒரு வேலை இப்ப அகல்யா call பண்ணா நமக்கு ரிங் வருமா, ஆஸ்திரேலியால airtel எடுக்குமா, ஒரு வேலை அங்க போலீஸ் யாரும் பாஸ்போர்ட் விசா கேட்டாங்கன்னா என்ன பண்ணுறது....ஐயோ இதை எதையும் யோசிக்காம மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்சிடோமே........இவன் கவனத்தை திருப்ப கைகளில் நறுக்கென்று கிள்ளியது போல் இருந்தது, ரோலர் கோஷ்டரில் சுத்தி பாதியில் தள்ளி விட்டது போல் இருந்தது....மெதுவாக கண்ணை திறந்தான் flood lights கண்ணைக்கூசியது, ஐயோ பிட்ச்சில் மல்லாக்க படுத்து கிடக்கிறோமோ, ச்சீ அம்பயர் பாக்குறதுக்கு முன்னாடி எந்திருச்சி ஓடிருவோம், என்ன ராஜராஜன் வெள்ளை கோர்ட் போட்டு நிக்கிறாரு....யோசித்து கொண்டே எழுந்திருக்கும் போதே அகல்யா தோளில் தட்டி எழுந்திரிக்க விடாமல் தடுத்தாள் .........இவ எப்படி ஆஸ்திரேலியா வந்தாள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அழுகையுடன் அவள் முப்பாத்தம்மனுக்கு நன்றி சொல்லிகொண்டிருந்தால். ஓ அது flood lights இல்லை, ICUல் சைடில் இருக்கும் விளக்குகள், சுற்றி இரண்டு நர்ஸ்கள் வெள்ளை அங்கி அணிந்தது டாக்டர்...................

"எப்படிங்க இருக்கு இப்ப உடம்புக்கு, ஒரு  வாரமா வேண்டாத தெய்வமில்லை, அந்த ஆத்தா கருணை தான் உங்கள காப்பத்திருக்கு. கோமாவிலிருந்து எந்திரிக்க வச்ச அந்த ஆத்தா மகிமையே தனி தான். இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சா இருந்தா என்ன......, மேட்ச் பாக்கணும் அதனால ஆபீஸ் வர முடியாதுன்னு சொல்லிருக்கணும் அல்லது வேலை தான் முக்கியம்ன்னா, போய் வேலையை பார்க்க வேண்டியதுதான.........அது விட்டுட்டு மேனேஜரை திட்டிகிட்டே ஸ்கோரும் கேட்டுட்டு வண்டிய ஓட்டிட்டு போனா இப்படிதான் தண்ணி லாரில விட்டுட்டு........." அதுக்கு மேல அவளால பேச முடியாம அழுக ஆரம்பிச்சிட்டா.

அடுத்த ஒருவாரம் ஹாஸ்பிடல் லைஃப், சொந்த பந்தங்கள், நண்பர்கள் வருவதும் விசாரித்து விட்டு செல்வதுமாய் இருந்தது. உடம்பும் நல்லா தேறி இருந்தது, நாளைக்கு டிஸ்சார்ஜ்........அலுவலக நண்பன் முகேஷ் வந்து இன்சூரன்ஸ் ஃபார்ம்ஸ், பில்ஸ் எல்லாம் வாங்கி சென்றான். பரவாயில்லை மாப்ள மெடிக்கல் லீவ் இன்னும் extend பண்ணிக்கோ, மெதுவா ஆபீஸ் வா என்று சொல்லி கெளம்பினான், செல்லும் போது ஏதோ ஞாபகம் வந்தவனாய், டேய் மாப்ள நம்ம கம்பெனியை  நேத்து ABC corp வாங்கிட்டாங்க டா............

Friday, January 16, 2015

1000 ரூபாய் நாணயம்

[இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 13 நிமிடங்கள் ஆகும்]

அமெரிக்காவில் பிறந்ததனால் பாதி அமெரிக்கனாகவும், பெர்மனெண்ட் ரெசிடென்ட்சிப் வாங்கியும் இன்னும் இந்திய பாஸ்போர்ட் கேன்சல் பண்ணாத பெற்றோரால் மீதி இந்தியனாகவும் இருக்கும் இனியனுக்கு, தான் அமெரிக்க இந்தியனாக இருப்பதில் இந்த முப்பத்தேழு வருடத்தில் முதல் முறையாக பெருமையாக இருந்தது.

பள்ளிக்கரணையில் இருக்கும் "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில்" இருந்து சிறப்பு வேலை அழைப்பு வந்ததற்கு, தன் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி அனுபவம் மட்டும் காரணமில்லை, இந்திய விசா ஈசியாக  கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இல்லையன்றால் தன்னை விட திறமையான சீனாவை சேர்ந்த தன் ப்ராஜெக்ட் பார்ட்னெருக்கு அல்லவா இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முதல் பயணம் ஏர் இந்தியா விமானத்தில்; வெளிப்புறம் முழுவதும் உள்ளயே தெரியும் படியாக இருக்கும் ஷீத்ரூ விமானம். மெல்லிய கண்ணாடி நுண்ணிளைகளால் வடிவமைக்கப்பட்ட ஃப்யூஸ்லேஜ். மேககூட்டங்களுக்கு நடுவில் அந்தரத்தில் தனியாக பறப்பது போன்ற ஓர் உணர்வு. Detroitல் இருந்து கிளம்பிய ஆறாவது மணி நேரத்தில் இந்திய எல்லை பரப்புக்குள் நுழைந்தது விமானம். கால்களுக்கிடையில் கீழே பார்த்தால் அடர்ந்த காடுகள், ஒவ்வொரு இரண்டு மூன்று நிமிடம் கடக்கும் போதும் பசுமை காடுகளுக்கிடையில் தெரியும் சிற்சில கான்க்ரீட் காடுகள்;

செங்கல்பட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கியதும் தாய் மண்ணில் கால் வைக்கும் பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே அம்மாதிரி எந்தவித சிலிர்ப்பும் இல்லை. "ஒரு வேலை நாம் அரை இந்தியன் கூட கிடையாதோ" என்று நினைக்க தோன்றியது. "இது என்ன பிதற்றல்", இறங்கும் இடத்துக்கு ஏற்றார்போல வெப்பநிலையை விமானத்துகுள்ளும் கொண்டிருந்ததால் எந்த சிலிர்ப்பும் இல்லை என்று அறிவியல் அறிவு சமாதானபடுத்தியது.

ஒரு மாத வேலை மட்டுமே ஆதலால் அதிக லகேஜ் இல்லை. இங்கிருந்து ஹோட்டலுக்கு செல்லுவதற்கு எந்த ரயில் செல்லும் என்று கைபேசியின் இயங்கு ஸ்க்ரீனில் தேட ஆரம்பித்தவுடன் ஒரு புது மெசேஜ், "உங்கள் விமான டாக்ஸி 400மீ தூரத்தில் உங்களுக்காக வெயிட் செய்கிறது". திரையில் வந்த திசையில் நடந்த்ததில் சரியாக 400மீ தூரத்தில் ஒரு பெரிய ட்ரோன் ரக இருவர் அமரும் விமானம். ஏறி உட்கார்ந்ததும் இன்னொரு மெசேஜ், "செக்குடு இன்டு  தாய்வீடு இன்ன்". எனது புன்னகையை படித்தவாராய் பைலட், "சார் உங்கள் செக்குடு டைம் இங்கிருந்தே கணக்கிடப்படும்" என்றார். இம்முறை ஒரு பெரிய புன்னகை செய்தேன், "நீங்கள் டிப்ஸ் மட்டும் ரூ1000 தந்தால் போதும் சார் டாக்ஸி பில் ஹோட்டல் பில்லோடு சேர்த்து கொள்ளப்படும்" என்றார், அதோடு என் இதழ்கள் புன்னகை பூக்கவில்லை.

இரவு நல்ல தூக்கம்; காலை ஹோட்டலில் இருந்து ரயிலில் வேளச்சேரி ஸ்டேஷன் வந்து இறங்கி அங்கிருந்து மிதிவண்டி மூலம் ஆராய்ச்சி கூடம் வந்தாகிவிட்டது. "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி" இருப்பது வேளச்சேரி முதல் தாம்பரம் வரை உள்ள மெட்ராஸின் நீளமான பசுமை சாலையில். இச்சாலையின் இடையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் நன்மங்கலம் காப்பு காடு, இதை தவிர சிறு சிறு குடி இருப்புகள் இருந்தாலும் இயற்க்கை மாறாமல் பாதுகாக்கப்படும் சிறப்பு பகுதி. அனைத்து மோட்டார் வாகனங்களும் தடை செய்யப்பட்ட பகுதி. மூவாயிரம் அடி உயரத்தில் செல்லும் புல்லெட் ரயில் தவிர அந்த பாதையில் மிதிவண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. மெட்ராஸில் மக்கள் தொகையை விட மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகம் என்று படித்ததற்கு விளக்கம் இப்போது கிடைத்தது. அவசர நேரங்களில் இயங்கும் இருவர் செல்லும் விமானம் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும்  அனுமதி இல்லை.

நுழைந்த நொடி முதலே வேலை; புது டீம், புது வேலை, அறிமுகம் என்று எந்த சிறு வினாடியையும் வீணடிக்கவில்லை. ஒரு விதத்தில் எல்லோருமே அறிமுகமானவர்கள் தான். இந்த பத்து ஆண்டுகளில் சில கருத்தரங்குகளில் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம். ஆதலால் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாய் இருந்தனர். ஒரு விதத்தில் இயற்கையை கொண்டு இயற்க்கை சீரழிவை தடுக்கும் திட்டம்; இது காற்றின் திசை மற்றும் வேகங்களை ஆராய்ச்சி செய்யும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி கூடம்; கடந்த 200 ஆண்டுகள் dataவை கொண்டு ஆராய்ச்சி செய்யும் கூடம். உலகின் அதி உயர காற்று பிடிப்பான்கள், கடலுக்கடியில் காற்றின் தீவிரம் ஆராயும் அதி நவீன கருவிகள். மற்றும் உலகின் தலை சிறந்த காற்று ஆராய்வாளர்கள் மத்தியில் வேலை செய்வது மிகவும் சந்தோசமாக இருந்தது இனியனுக்கு.

இந்த இரண்டு வாரங்களில் ஹோட்டல், ஆராய்ச்சி கூடம் இதை தவிர வேறு எங்கும் வெளியே செல்லவில்லை. வேலையும் சரியாக இருந்தது. இடையிடையே அம்மா போனுக்கு பதில் சொல்வதை தவிர, அம்மாவின் பெரும்பாலான விசாரிப்புகள் வேளச்சேரி, OMR சாலை பற்றியே இருக்கும். ஆனால் அவள் காட்சிபடுத்திய எதுவுமே இங்கு இல்லை என்று கூறும்போது ஒரு சிறு கவலை அவள் முகத்தில் தெரியும். ஆனாலும் அடுத்த வினாடியே அவளுக்கு ஞாபகத்தில் இருக்கும் தி.நகர் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுவாள். பிராண்டிங் என்ற காரணத்தை சொல்லி சென்னையை மெட்ராஸ் என்று மாற்றியதில் இந்த மக்களே ஏற்றுக்கொண்டு விட்டாலும் அம்மாவால் மட்டும் ஒத்து கொள்ளமுடியவில்லை. அவள் இங்கு இருந்த போதே இந்த ஆராய்ச்சி கூடம் இதே இடத்தில் இருந்தது என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை.

இந்த மாதிரி வேலை அதிகம் உள்ள நாட்களில், Detroitல் இருந்த போது Erie lakeன் கரையில் நடந்தால் சில மணி துளிகளில் அலுப்பு தீரும். அதே போல் இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று வாட்ச்மேனை கேட்ட உடன் சிரித்து கொண்டே சார் கொஞ்சம் வெளிய போய் பாருங்க என்று சொன்னார். வெளியே வந்து இடது பக்கம் திரும்பி 200மீ நடந்தால் ஒரு சிறு நடை மேடை, அதை தாண்டினால் பறவைகள் சரணாலயம் என்று ஓர் பேர் பலகை. ID கார்டுடன் சென்றதால் அனுமதி இலவசம். ஏரிக்கு நடுவே 500மீ நடந்த உடன் அவ்வளவு பறவைகள், இது வரை இவ்வளவு விதமான பறவைகளை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை. க்ர்ரீச் கீச் கீம் என்று ரீங்கார சத்தம் மட்டுமே. 45சதுர கிமீ அளவு பரப்பளவில் இருக்கும் சதுப்புநிலபகுதி அதில் பார்வையாளர்கள் நடந்து செல்ல ஏதுவாக குறுக்கு நெடுக்காக 13கிமீ நீளத்துக்கு இரண்டு பாதைகள். வேலை அலுப்பு இருக்கிறதோ இல்லையோ அன்று முதல் தினமும் ஒரு மணி அங்கேயே பொழுதை போக்கினார் இனியன்.

மூன்றாவது ஞாயிறு இன்று, அடுத்த ஞாயிறு மீண்டும் அமெரிக்கா; இது வரை எங்கும் வெளியே செல்லவில்லை, இன்றும் வெளியே செல்லும் எண்ணமில்லை. உடன் வேலை செய்யும் ஜெர்மன் இஞ்சினியர்கள் அனைவரும் தி.நகர் ஷாப்பிங் சென்று விட்டார்கள். அறுபது வயது அம்மாவை தவிர தனக்கென்று வேறு யாரும் இல்லை. அவளுக்கும் இது போன்ற ஷாப்பிங் பரிசு பொருள்களில் ஈடுபாடு இல்லை. வேறு ஏதாவது வித்தியாசமான அல்லது பாரம்பரியமான பரிசு பொருள் கொண்டு செல்ல விரும்பினார்.

ஹோட்டலில் இருந்து மிதி வண்டியில் ரயில் நிலையம் முடிய வந்து வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒரு பழைய பாதையில் நடக்க ஆரம்பித்தார், இன்றைய பிளாஸ்டிக் சாலைகளுக்கிடையில் இந்த ஒதுக்கப்பட்ட சாலை கொஞ்சம் குப்பை கூளங்களுடன் வித்தியாசமாக இருந்தது. அப்படி ஒரு குப்பையை தாண்டி நடக்கும் போது ஓரமாக ஒரு மெல்லிய வெளிச்சம், குப்பையை ஒதுக்கி எடுத்தால் அது ஒரு ஆயிரம் ரூபாய் நாணயம். அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்த நாணயத்தை எடுத்து தன் கைகுட்டையில் சுத்தம் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டார். அம்மாவின் coin கலெக்ஷனில் இந்த 1000ரூ நாணயம் இருக்க வாய்ப்பில்லை. இதையே பரிசாக கொடுத்தால் ரொம்ப சந்தோசபடுவாள். மேலும் நடந்து கொண்டே யோசிக்க ஆரம்பித்தார், தான் இதுவரை படித்த இந்தியாவிற்கும் இங்கே காண்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை.  இயற்கையும் செயற்கையும் சம விகிதத்தில் கலந்து செய்த இன்றைய இளைஞர்களின் கனவு தேசம். பத்து ட்ராக்குகளில் செல்லும் பறக்கும் ரயில்கள். இன பாகுபாடு இல்லாமல் எல்லா நாட்டவரும் வாழக்கூடிய சூழ்நிலை. வானுயர வளர்ந்த கட்டிடங்கள், தன் கழிவுகளை தானே சுத்தம் செய்து மறுசுழற்சி செய்யும் தன்னிறைவு பெற்ற கட்டிடங்கள். இவை அனைத்திற்கும் வெகு அருகாமையில் விவசாயமும் நடந்தன. உலகின் 60% சதவிகித உணவு தேவையை இந்தியாதான் பூர்த்தி செய்கிறது.

மெதுவாக நடந்தாலும் எண்ணங்கள் வெகு வேகமாக பின்னோக்கி சென்றன. தன் இரண்டாவது வயதில் ஒரு முறை இந்தியா வந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், தனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதுகளில் அப்பா சொன்ன இந்தியா இப்போது இல்லை. அக்காலங்களில் வளரும்  நாடுகளின் பட்டியல்களின் முதல் நாடாக இருந்தது. ஆனால் அதற்காக நாற்பது ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பெண்கள் பாதுகாப்பில் கடைசி, ஊழலில் முதலிடம், பிச்சைகாரர்களை கூட ஒழிக்க முடியாத நாடக இருந்தது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் உலகில் நடந்த பல இயற்கை மாற்றங்களும் இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாயின. வட அரை கோளத்தில் இருக்கும் மேலை நாடுகள் பல அழிந்தே விட்டன, மீதமிருக்கும் சில நாடுகளும் எந்தவித கனிம வளங்களும் இல்லாமல் மத்தியதர நாடுகளின் உதவியால் வாழ்ந்து கொடிருக்கின்றன. தண்ணீருக்காக நடக்க விருந்த நான்காம் உலக போரை இந்தியா வெகு சாமர்த்தியமாக நடக்காமல் சமாளித்து உலகின் எழுபது சதவிகித நாடுகளை தனது நட்பு நாடாக்கிகொண்டது. மேலும் சில நல்ல கொள்கை முடிவுகளால் இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றிகொண்டது. இருந்தும் கணிப்பொறி தவிர வேறு எந்த துறைகளிலும் கவனம் செலுத்ததால், அனைத்து ஆராய்ச்சி துறைகளுக்கும் மேலை நாடவர்களையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது. ஆதலால்தான் முடிந்த அளவுக்கு இந்திய வம்சாவளியினர்க்கே வாய்ப்புகளை வழங்குகிறது.

அரை  மணி நேர நடையில் வெகு தூரம் நடந்திருந்தேன், இருட்டியும் விட்டது. வரும்போது இருந்த அமைதி இப்போது இல்லை, பரிச்சயம் இல்லாத மனிதர்கள் சிறு சிறு கூடாரங்கள் அடித்து கொண்டிருந்தனர். கூடாரத்தில் வெளியில் உட்கார்ந்திருந்த இருவர் தன்னை காட்டி ஏதோ சைகையில் பேசியது போல இருந்தது, அனிச்சையாக கால்கள் வேகமாக நடந்தன, முகத்தில் முத்து முத்தாக இருந்த வேர்வை துளிகள் மனதில் இருந்த பயத்தை வெளி காட்டியது. ஓட்டமும் நடையுமாக வந்து ரயில்வே ஸ்டேஷனின் மறு முனையை அடைந்த உடன் தான் நிம்மதியாக இருந்தது. ரூமுக்கு வந்தவுடன் முதல் வேலையாக அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த அனுபவத்தை சொன்னனேன். "பிச்சைகாரர்களாக இருக்கும், இதுக்கு போய் பயபடுவார்களா" என்று கூறி சிரித்தாள். மேலும் அவள் சிரிப்பில் தான் காட்சி படுத்திய ஒரு விஷயமாவது இருக்கிறது என்ற பெருமை இருந்ததாக தெரிந்தது.

அடுத்த ஒரு வாரமும் சரியான வேலை, அடுத்த இருபது ஆண்டுகளில் வங்காள விரிகுடாவை தாக்கவிருக்கும் மூன்று சுனாமிகளுக்கும் தடுப்பு திட்ட வடிவம் முழுமையடைதிருந்தது. கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் எவ்விதமான மரங்கள் நடப்பட வேண்டும் அதை எவ்வளவு உயரம் செங்குத்தாக வளர்க்க வேண்டும், எவ்வளவு கான்க்ரீட் தூண்கள் அமைக்க வேண்டும், இவைகளால் சுனாமியின் தாக்கம் எவ்வளவு மட்டுப்படும் போன்ற விசயங்களுடன் கூடிய ரிப்போர்ட் சமர்ப்பித்தாகிவிட்டது. நாளை மீண்டும் டெட்ராய்ட் அமெரிக்கா.

காலை ஹோட்டல் மாடியில் அதே விமான டாக்ஸி மற்றும் அதே பைலட். ஏர்போர்ட்டில் இறங்கிய வினாடி "செக்குடு அவுட் ஃப்ரம் தாய் வீடு இன்ன்" மெசேஜுடன் 1லட்சம் INR க்ரெடிட்டர்டு என்ற செய்தியும் வந்தது. பைலட்டுக்கு நன்றியுடன் ஒரு புன்முறுவல் செய்தார். கோர்ட்டை மாட்டியபடியே   ஏர்போர்ட் வாசல் நோக்கி நடந்தவர் ஏதோ யோசித்தவராய் பின்னோக்கி வந்தார். தன் கோர்ட் பையில் இருந்து அந்த 1000ரூ நாணயத்தை எடுத்து வாசலில் அமர்ந்திருந்த பிச்சைகாரர் ஒருவரிடத்தில் போட்டு விட்டு விறு விறுவென உள்ளே சென்றார்.






Saturday, December 20, 2014

மேன் ப்ரபோசஸ் வுமன் டிஸ்போசஸ்

[இந்த குட்டி கதையை படித்து முடிக்க சராசரியாக 7 நிமிடங்கள் ஆகும்]

"உங்க toothpasteல உப்பு இருக்கா" ன்னு மைக் பிடிச்ச பொண்ணு டிவில கேட்டு கொண்டிருந்தாள், தி ஹிந்து கடைசிபக்கத்துக்கு முன் பக்கத்தை பிரித்துகொண்டே "ஆமா உப்ப வச்சி பல் விலக்குனவனெல்லாம் pasteக்கு மாத்திட்டு இப்ப உங்க paste ல உப்பு இருக்கான்னு கேக்குறானுங்க" என்று சொல்லி தன் குழந்தையிடம் இருந்த remoteஐ பிடுங்கி star sports channel க்கு தாவினான் முகிலன்.

அம்மா.............., அப்பாவ பாரும்மா 'மோட்டு பாட்லு'வ மாத்திட்டு கிரிக்கெட் பாக்குறார்ம்மா என்று குழந்தை கத்தியதை கேட்டு முகிலனிடமிருந்து remoteஐ பிடுங்கி(முகிலன் முறைப்பதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்) குழந்தையிடமே மறுபடியும் கொடுத்தால் அகல்யா.

இவன் முறைத்ததை சாவகசமாக கவனித்து விட்டு, ஆமா விளம்பரத்தை கிண்டல் அடிச்சிட்டு அதே pasteஅ தானே வாங்குறீங்கன்னு அவன் பதிலுக்கு காத்திராமல் kitchenக்குள் நுழைந்தால்.

"நான் ஒண்ணும் அதுக்காக கோவமா இல்ல" - முகிலன்

"தெரியும் தெரியும், எத்தன தடவ எவ்ளோ மோசமா தோத்தாலும் இந்த கிரிக்கெட்ல அப்படி என்னதான் இருக்கோ, அதான் இங்கிலாந்துல நடக்குற மேட்ச்சுக்கு காலைல 5:00 மணிக்கு அலாரம் வச்சி பாக்குரீங்கல்ல  அப்புறம் highlightsயும் பாக்கணுமா என்ன??" - அகல்யா

அய்யோ......, இங்கிலாந்துல நடந்தா 5 மணிக்கு பாக்க தேவைஇல்லை, ஆஸ்திரேலியால நடக்குறதுனாலதான் 5 மணிக்கு எந்திருக்கணும், கொஞ்சம் சிரிப்பு கலந்து நக்கலாக பதில் சொன்னான்.

"தெரியும் தெரியும், எல்லா timezoneஉம் எங்களுக்கும் தெரியும்...........,நீங்க  எல்லா timezone க்கும் whatsappல  மெசேஜ்அனுப்பி chat பண்ணுறதும் தெரியும்......, வீட்டுல ஒரு வேலைக்கு ஹெல்ப் பண்ணுறது இல்லை fullday facebook, whatsapp எதுலயாவது மெசேஜ் அனுப்புறது அல்லது அந்த laptopஅ தூக்கி வச்சிக்கிட்டு எதாவது வேலை செய்யுறது மாதிரி நடிச்சிக்கிட்டு அங்கயும் வெட்டி வேலை பாக்க வேண்டியது" - கடுப்புடன்அகல்யா.

ஒரு சின்ன கிண்டல் வேற ரூபத்துல பிரச்சனையை கொண்டு வருது என்பதை உணர்ந்து மௌனமே இங்கு சரியான ஆயுதம் என்று இருந்தான் முகிலன்.

உலக பிரச்சனைகளுக்கு வேண்டுமென்றால் மௌனம் சரியான தீர்வாக இருக்கலாம், ஆனால் வீட்டு பிரச்சனைகளுக்கு மௌனம் என்பது  எரியிற தீயில எண்ணைய ஊத்துற மாதிரி என்பதை முகிலன் அப்போது அறியவில்லை.

நான் காட்டுகத்தா கத்திட்டு இருக்கேன், நீங்க என்னன்னா அங்க இன்னும் மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, கத்தியவாறு இவன் phoneஐ பிடுங்கி பார்த்தாள் . நல்ல வேலையாக ஆபீஸ் team memberஇடம் இருந்து வந்த மெசேஜ் ஆக இருந்தததால் அந்த வினாடி தப்பித்தான் முகிலன்.

ஆனால் பிரச்சனை சிறியதாக இருக்கும் போதே அதை தீர்த்தாக வேண்டும் அல்லது அது நம் தலை மேல் ஏறி ஆடும் என்பதை தன் பத்து வருட வேலை அனுபவத்தில் அறியாதவனில்லை முகிலன். தான் படித்த அனைத்து மேலாண்மை மற்றும் நிர்வாக நூல்களின் ஐடியாகளை யோசிக்கலானான். முதல் முயற்சியாய் குழந்தையை நானே பள்ளியில் விடுகிறேன் என்று படித்து கொண்டிருந்த பேப்பரை அப்படியே மடித்து வைத்து விட்டு  bathroomல் நுழைந்தான்.
.
.
.
.

இன்னைக்கு breakfast smell சூப்பர் என்றவாறே டைனிங் டேபிளில் அமர்ந்தவனுக்கு kellogsஐ பார்த்த உடன், அவசரப்பட்டு ஒரு ஐடியா வீணாகிவிட்டதே என்று நொந்தவாறே நாலே ஸ்பூனில் சாப்பிட்டு முடித்தான்.

கணவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததையும், விக்கி விக்கி kellogs சாப்பிட்டதையும் சிறு புன்னகையுடன் ரசித்தாலும், இன்று அதிகமாகவே முகிலனை கடிந்து விட்டோமே என்று யோசித்த வினாடியில் முகிலன் தன் அனைத்து குடும்ப மேலாண்மை உத்திகளும் பயனளித்தாகவே எண்ணினான்.

 குழந்தையை பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு ஆபீஸ் வந்தடைந்தவன் முதல் வேலையாக flipkartல் ஒரு லேட்டஸ்ட்(ஏற்கனவே தனக்காக செலக்ட் செய்து வைத்திருந்த) அதிநவீன android phone sameday டெலிவரியில் ஆர்டர் செய்தான், இன்றைக்கு இந்த phoneஐ அகல்யாவுக்கு பரிசளித்து அவளையும் whatzsappல் அறிமுக படுத்தியது மாதிரி இருக்கும் நம்மள  பத்தி குறை சொல்லாத மாதிரியும் இருக்கும். எப்படியும் "இந்த புது போன் எனக்கெதுக்குங்க உங்க phoneஐ நான் வச்சிக்கிறேன், நீங்க இத use பண்ணுங்க" என்று கூறும்  அகல்யாவின் மனதை சரியாக படித்ததாய் எண்ணி தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

flipkartஐ நாள் முழுதும் தொடர்பு கொண்டு phoneஐ ஒரு வழியாக டெலிவரி பெற்று கொண்டு வீட்டுக்கு சென்று அகல்யாவிடம் surprise giftஆக கொடுத்தான். அகல்யாவும் குழந்தையும் இரு குழந்தைகளாய் அந்த phoneஐ ஆர்வமுடன் பிரித்து விளையாட ஆரம்பித்த சந்தோசத்தில் சீக்கிரமே தூங்கி போனான்.

காலை எழுந்து தன்னுடைய phoneல் whatsapp notification 350msg  என்று இருந்ததை பார்த்தவனுக்கு தலை சுற்றியதில் காரணம் இல்லாமல் இல்லை, எல்லாம் தன் மனைவி அகல்யா அனுப்பி இருந்ததே. நைட் 1மணி முடிய மெசேஜ் பண்ணி இருக்கிறாள், இதில் மொக்க மொக்க ஜோக்கை இவனுக்கு forward வேற பண்ணி இருக்கிறாள்.

"அகல்யா, அகல்யா ......நேரம் ஆயிடுச்சு பாரு எந்திரி..... குழந்தயை ஸ்கூலுக்கு அனுப்பனும் டைம் ஆகுது எந்திரி " - கெஞ்சலாக எழுப்பினான் முகிலன்

நேத்து படுக்க கொஞ்சம் லேட் ஆயுடுச்சுங்க......... குழந்தையும்தான்......., உங்க phoneல game விளையாடிட்டு இருந்தால அதுனாலதான். அவங்க missக்கு whatsappல இன்னைக்கு இவ லீவுன்னு சொல்லி மெசேஜ் அனுப்பிறேன். அப்புறம் கணேஷ்பவனில் whatsappலயே breakfast ஆர்டர் பண்ணிரலாமாம், நானே ஆர்டர் பண்ணிறேன் நீங்க வேகமாய் போய் குளிச்சிட்டு வாங்க என்று இவன் பதிலுக்கு கவனிக்காதவலாய் மெசேஜ் பண்ண ஆரம்பித்து விட்டாள்.

கணேஷ் பவனில் இருந்து வந்த பையனுக்கு பில்லையும் டிப்ஸையும் கொடுத்தனுப்பினான். "ஏங்க அந்த பையனோட friend request accept பண்ணுவீங்களாம், அவன் facebookலயும் ஆர்டர் எடுப்பானாம்" - பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே அகல்யா கூறினாள்.

சாப்பிட்டுக்கொண்டே அகல்யாவிடம் மெதுவாக ஆரம்பித்தான், "என்னம்மா phone எப்படி இருக்கு use பண்ணுறதுக்கு ஈசியா இருக்கா, menuல்லாம் பழக்கமில்லாம கஷ்டமா இருக்குமில்ல?"

"இது என்னங்க பெரிய ராக்கெட் சயின்ஸா, நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஈஸியா புரிஞ்சிடுச்சு....." - அகல்யா சொல்வதை கேட்டு லேசா தலை சுற்ற ஆரம்பித்தது.

"என்னோட whatsapp friend ஒருத்தி 2.75ghz, 3gb ram configurationல lollypop வெர்சன்ல ஒரு மாடல் வச்சிருக்கலாம் ரொம்ப பீத்திக்கிறா, நீங்க ஆபீஸ்ல போய் ஒரு லேட்டஸ்ட் போன் search பண்ணி உடனே வாங்குறீங்க.....உங்க phone வேற ரொம்ப பழசாயுடுச்சு, நீங்க இத வச்சிக்கோங்க அந்த லேட்டஸ்ட் phoneஐ நான் வச்சிக்கிறேன்......ம் அப்புறம் உங்க அந்த பழைய phoneஐ exchange ஆபர் ல கொடுத்துறாதீங்க அத நம்ம பாப்பாவுக்கு gamesக்கு கொடுத்துறலாம்" - அகல்யா

இவன் தலை கிறுகிறு என்று சுத்தி நின்றதை கவனிக்க நேரமில்லாமல் ஏதோ ஒரு மொக்க வீடியோவை forward பண்ணி அது முகிலனுக்கு டெலிவர் ஆவதையும் இவன் phoneஐ பிடுங்கி confirm பண்ணிக்கொண்டால்.

"நீயல்லாம் எங்க ஆபீஸ்ல வேலை பாத்திருந்தா இந்த நேரம் சீனியர் மேனேஜர் ஆகி இருப்படி" - என்று மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் ஆபீஸ்க்கு கிளம்பினான் முகிலன்.








Saturday, November 1, 2014

வதந்தி எனும் காட்டுத்தீ

[இந்த  பதிவை படித்து முடிக்க சராசரியாக இரண்டரை நிமிடங்கள் ஆகும், படித்த படி நடக்க அதை விட குறைவான நேரமே தேவை படும்.]

இறுதி எண்பதுகளிலும், தொண்ணுறுகளின் ஆரம்பத்திலும்......அதாவது தூர்தர்ஷன் கோலோச்சிய காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையில் சிறு சிறு கார்ட்டூன் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடையே பரப்புவார்கள்; மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை குறைப்பது, தண்ணீரை சேமிப்பது, கிராம தூய்மையின் முக்கியம் இவ்வாறு மேலும் பல.

இவற்றில் ஒரு கார்ட்டூன், ஒரு சிறுவன் தன்னுடைய வீட்டில் பலூன் ஊதி விளையாடும் பொழுது, பலூன் வெடித்து விடும்; அதை வெளியே கேட்ட ஒரு நபர் அந்த வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக மற்றொருவரிடம் சொல்லுவார் பின் அவ்விஷயத்தை கேட்ட அந்த நபர் மற்றொருவரிடம் அந்த தெருவில் ஏதோ வெடிகுண்டு வெடித்ததாக தனது நண்பர்களிடத்தில் சொல்லுவார். அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இந்த விஷயத்தை இன்னும் பெரிது படுத்தி, ஒரு ஊரையே அழிக்க கூடிய குண்டு வெடித்ததாகவும், ஊரில் பெரிய கலவரம் நடப்பதாகவும் பலவாறாக வதந்திகளை பரப்புவார்கள். வதந்தியால் விளையும் கெடுதலை மக்களுக்கு உணர்த்துவதற்காக அமைந்த ஒரு சிறு விளக்கப்படம். இந்த கார்ட்டூன் இப்பொழுதும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தகவல் தொடர்பு உள்ளது. வெறும் வாய் வழியாகவே வதந்தி இவ்வளவு வேகமாக பரவ முடியும் போது, இன்றைய மக்கள் தொடர்பு சாதனங்களான whatzapp, facebook, twitter etc இந்த வதந்திகளை ஒளியின் வேகத்தை விட வேகமாக பரப்புகின்றன.

கடந்த வாரத்தில், ஒரு ஆடியோ பதிவு மற்றும் ஒரு பெண்ணின் போட்டோ.......... துரைப்பாக்கத்தில் திருட்டு சம்பவத்தில் அந்த பெண் ஈடுபடுவதாக வேகமாக பரவியது(இந்த பதிவு எழுதும் பொழுது அந்த ஆடியோ பதிவிக்காக மன்னிப்பு கேட்டு மறு பதிவும் வந்தது ஒரு ஆறுதல் விஷயம்). இவ்வாறான வதந்திகளுக்கு காரணம் என்னவென்றால், செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற ஒரு வேகம் தான். ஒரு சிறு send button அல்லது ஒரு like அல்லது share buttonகள் இதை நமக்கு மேலும் எளிமை ஆக்கிவிடுகிறது.

இந்த வேகம் தனி மனிதனிடத்தில் மட்டும்தான் இருக்கிறதா, இல்லை சமுயாத பொறுப்புணர்வு உள்ள பத்திரிகையிலும்(தனி மனிதனை விட அதிகமாக கட்டாயம் அதிகம் இருக்கணும்) இதே வேகம் உள்ளது. மேல் சொன்ன அதே பதிவு மறுநாள் ஒரு தமிழ் நாளிதழிலும் வந்தது(அவ்விசயத்தையும் whatzapp அனுப்பினோம், பத்திரிகைகாரன் பொய் சொல்ல மாட்டன் என்று நினைத்து) . இது மட்டுமல்ல, சமீபத்திய ஒரு ஜாமீன் வழக்கின் தீர்ப்பை முழுதாக சொல்வதற்குள், செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் தவறான செய்தியை பரப்பின அனைத்து செய்தி நிறுவனங்களும்(பின் அச்செய்திகளுக்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை)

செய்தி நிறுவனங்களின் அலட்சியத்தின் இன்னொரு எடுத்துகாட்டு http://www.thenewsminute.com/news_sections/1818. சரி அத விடுங்க அவங்க என்னவேனா பண்ணட்டும், நாம நம்ம sideல இருந்து இந்த மாதிரி வதந்திகளை பரப்பாமல் இருக்க சில விசயங்களை follow பண்ணாலே போதும், எந்த ஒரு விசயத்தின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அதை பரப்பாமல் இருக்கலாம், ஒரு தப்பான விஷயத்தை பகிர்வதை விட நமக்கு  தெரியாத ஒரு நல்ல விஷயத்தை பகிராமல் இருப்பதே மேல்.