Thursday, September 23, 2010

ரோஜர் ப்ளாக்குக்கு நன்றி.....


நன்றி ரோஜர் ப்ளாக்!!!!!!!!!!!

ரோஜர் ப்ளாக், இன்று டிவியில் காமன்வெல்த் போட்டி பற்றி இந்தியா சார்பாக பேசிய ஒரே ஆள். இவர் 1986ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 400 ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றவர்.

காமன்வெல்த் போட்டி ஆர்கனைசிங்க் கமிட்டிக்கு போதாத நேரம்....கட்டமைப்பு பணிகள் முடியல, பாதுகாப்பு குறைவு மற்றும் போதிய சுகாதாரம் இல்லாத குடியிருப்புகள், இப்படி பல விஷயத்துக்கு இடையில வந்த இன்னொரு கெட்ட நேரம்தான் போட்டி மைதானத்தின் ஓவர்ப்ரிட்ஜ் இடிந்து விழுந்த செய்தி.

பிபிசி, ஸ்கை நீயூஸ் எந்த சேனல் வச்சாலும் இதே நீயூஸ்தான். ஸ்காட்லாந்து, கனடா, நீயூசி, ஆஸி போன்ற நாடுகள் தங்கள் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று செய்திகள் வெளியிட்டன. அவங்க பேட்டி கொடுத்தது என்னமோ ஒரு தடவைதான் ஆனால் இந்த டிவி காரங்க இருக்காங்கலே இதே நீயூஸ ஓராயிரம் தடவை போட்டுருப்பாங்க. இவ்வளவு பேட்டி மற்றும் கேள்விக்கு, போட்டி நடத்தும் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரே பதில் என்னவோ கட்டுமானப்பணிகள் முடிவடைடந்துவிடும், திட்டமிட்ட படி போட்டி நடக்கும், அசராம இதே பதில சொல்றாங்கப்பா.

இப்படி ஒட்டு மொத்த மீடியாவும் இந்தியாவையும், காமன்வெல்த் போட்டி செயல்பாட்டு குழுவையும் வறுத்தெடுக்க இந்த ரோஜர் ப்ளாக் ஒருவர் தான் போட்டி நடத்துவதற்க்காக ஆதரவாக பேசினார். விளையாடு வீரர்களுக்கு தங்குமிடத்தை விட விளையாட்டு தான் முக்கியமாக இருக்க வேண்டும், எங்கதான் பாதுகாப்பு இருக்கு லண்டன்ல கூட பாதுகாப்பு இல்ல.........அதனால இந்த மாதிரியான காரணங்களை விடுத்து போட்டியில் கலந்து கொள்ள அனைத்து வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஒரு பக்கம் அவர் பேசியது சரியாகவே பட்டாலும், இன்னொரு பக்கம் நம்மளால வெறும் 56 நாடுகள் பங்கேற்க்கும் ஒரு போட்டி கூட நடத்த முடியலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு. உலக அரங்கில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கிட்டு இருக்குன்னு சொன்னா மட்டும் போதாது, அதற்கு இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி நிரூபிச்சுக்கனும். ஏழு வருசமா திட்டமிட்டு எழுபத்தியேழாயிரம் கோடி செலவழித்து ஒரு வேலைய சரியா செய்யலைன்றது கஷ்டமாத்தான் இருக்கு. இது ஒரு தனி நபரோட தப்பு கெடையாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், காண்ட்டிராக்டர்கள் மற்றும் பல பேரோட தப்பு(ஊழல், கடமையின்மை, பொறுப்பு இல்லாதது) சேர்ந்திருக்கு. மொத்தத்துல ஒரு மோசமான ப்ராஜக்ட்டுக்கு சிறந்த எடுத்துகாட்டு.
இப்படி ஒரு விஷயம் நடந்தது ஒரு வகையில நல்லதுதான், இதுல மட்டும் எவ்ளோ லெசன்ஸ் லேர்ண்ட்.......; நம்ம அரசியல்வாதிகள், கேள்வியே கேட்காத மக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கேட்கும் ஆக்கப்பூர்வமில்லாத கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லி பழகிவிட்டார்கள் இப்பதான் உலக நாடுகளின் கேள்வி மற்றும் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை, சொல்லட்டும் அட்லீஸ்ட் அவங்க வேலை என்னன்னாவது தெரிஞ்சுக்கட்டும். இந்த போட்டியின் விமர்சனங்களை ஒரு பாடமா எடுத்து இனிமேல் இது மாதிரி ஒரு மோசமான திட்டமிடல் இல்லாம பாத்துக்கலாம்.
பார்ப்போம், இந்திய விளையாட்டு வரலாறுல இது ஒரு கறுப்பு புள்ளியாக ஆகாம......எல்லா வேலைகளும் வேகமா முடிந்து போட்டி திட்டமிட்ட படி நடக்க வேண்டிக்கவும்(நம்மளால முடிஞ்சது...).

இந்த பதிவு போடும் முன்பு வந்த கடைசி செய்தி, இங்கிலாந்து அணி திட்டமிட்டபடி முதல் 22 வீரர்களை அனுப்பும்.

Sunday, September 5, 2010

லண்டனில் ஓர் இந்திய அலுவலக அனுபவம்....

லண்டன்..... அகன்ற சாலைகள், ஒழுங்கு முறையான நெரிசல் இல்லா போக்குவரத்து, மாசு படியா கட்டிடங்கள், தூய்மையான நடைபாதைகள், நரகல் இல்லா ரயிலடிகள். மொத்தத்தில் அழகிய நகரம், இந்திய தூதரகம் காணும் வரை.

லிவர்பூல் ஸ்டேசனிலிருந்து மோனுமெண்ட் வழியாக டெம்பிள் ஸ்டேசன் சென்று, வழிகாட்டி காட்டிய பாதையில் 100மீ நடந்து இந்திய தூதரகம் செல்லும் வரை லண்டன் அழகாகவே என் கண்ணில் பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் லண்டன் இந்திய தூதரகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை வானிலை சூழ்னிலை தவிர, அங்கே வெயில் இங்கே பனி. தெளிவான அறிவிப்பு பலகை இல்லாத இரண்டு மணி நேர க்யூ(ஒரு ஆங்கிலேயன் ரெண்டு மணி நேரம் நின்ற பின் அவனுடைய விண்ணப்பம் அங்கே வாங்கப்படமாட்டாது வேறு இடத்திற்க்கு செல்ல சொன்னார்கள்). ஆங்கிலேயர்களை
அறுபத்தி மூன்று வருடம் கழித்து இப்படி கூட பழி வாங்கலாம் போல.

சாப்பிட்டு/குடித்து தூக்கியெரிந்த காலி ப்ளேட் மற்றும் கேண்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன, ஈரத்தரையில் ஈரம் படாமல் உட்காருவதற்காக விரிக்கப்பட்ட அன்றைய நாளிதழ்கள்(இலவச) குப்பை தொட்டியில் இடாமல் சிதறிக்கிடந்தன, நூற்றுக்கணக்கான மக்கள் கூடுமிடத்தில் ஒரு கூரை மற்றும் இருக்கை கூட இல்லை, லண்டனில் வருடத்திற்கு நாலு பேர் கூட வராத பார்க்குக்கு கூட நாற்பது இருக்கைகள் இருக்கும். இந்த க்யூ தாண்டி முன்னேறி அலுவலகம் உள்ளே சென்றால் அங்கே மதுரை(இந்த ஸ்டேஜ் வரை வந்தது மதுரை அலுவலகத்தில் மட்டும்தான், சென்னை அலுவலகத்தில் முதல் க்யூவோடு திரும்பி விட்டேன்.) பாஸ்போர்ட் அலுவலகத்தைவிட பெரிய கூட்டம்(க்யூ கிடையாது). இந்தி தெரியாத இந்தியனாக சமாளித்து(வழிந்து) என்னுடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தாகி விட்டது. அவர்கள் பேசிய இந்தியில் நான் புரிந்தது, "அரை மணி நேரத்தில் ஆபீஸர் வந்து விண்ணப்பத்தை சரி பார்ப்பார்". வந்தாரு சரி பார்த்தாரு, மறுபடியும் நான் வழியும் படி ஏதோ இந்தியில் சொன்னாரு, என் பின்னால் இருந்த மொழிபெயற்பாளர்(இந்தி அறிந்த தமிழன்) மூலம் நான் புரிந்து கொண்டது மீண்டும் மூன்று மணிக்கு வர சொன்னார்களென்று. வெளியே வந்து நானும் நாளிதழ் விரித்து அமர்ந்து ஐந்து மணி நேர பொழுதை போக்கினேன். என்னருகில் அமர்ந்திருந்த இளைஞன் இந்தியில் பேச ஆங்கிலத்தில் பதிலளித்து நான் தமிழனென்று பறைசாற்றினேன். இருந்தும் தொடர்ந்து அரை மணி நேரம் என்னிடம் பேசியது ஆச்சரியமாக இருந்தது.

அரை மணி நேரத்தில் விடை புரிந்தது, புது பாஸ்போர்ட் 100 பவுண்டு, பாஸ்போர்ட் சமர்ப்பித்து சான்று வாங்க 200 பவுண்டு, மற்ற வேலைகளுக்கு வேலையை பொறுத்து சர்வீஸ் கட்டணமாம். இந்தியாவில்கூட அனைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ப்ரோக்கர் தொல்லை ஒழிக்கப்பட்டுவிட்டது. அடுத்த பத்து நிமிடம் அவர் கேட்ட எந்த கேள்விக்குமே சரியாக பதில் சொல்லாததால் அவராகவே சென்று விட்டார். இனியும் அங்கு வெயிட் செய்வது சரியல்ல என்று எழுந்து சாப்பிட சென்று விட்டேன், மறக்காமல் நான் விரித்த மற்றும் என்னருகே விரித்திருந்த நாளிதழ்களை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு.

சரியாக மூன்று மணிக்கு வந்து மேலும் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து என்னுடைய சான்றிதழ் பெற்று வெளியே வந்து அன்றைய அனுபவம் மனதிலிருந்து அகலும் வரை தேம்ஸ் நதிக்கரையில் நடையாய் நடந்து மீண்டும் லிவர்பூல் ஸ்ட்டிராட்போர்டு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.