Saturday, December 20, 2014

மேன் ப்ரபோசஸ் வுமன் டிஸ்போசஸ்

[இந்த குட்டி கதையை படித்து முடிக்க சராசரியாக 7 நிமிடங்கள் ஆகும்]

"உங்க toothpasteல உப்பு இருக்கா" ன்னு மைக் பிடிச்ச பொண்ணு டிவில கேட்டு கொண்டிருந்தாள், தி ஹிந்து கடைசிபக்கத்துக்கு முன் பக்கத்தை பிரித்துகொண்டே "ஆமா உப்ப வச்சி பல் விலக்குனவனெல்லாம் pasteக்கு மாத்திட்டு இப்ப உங்க paste ல உப்பு இருக்கான்னு கேக்குறானுங்க" என்று சொல்லி தன் குழந்தையிடம் இருந்த remoteஐ பிடுங்கி star sports channel க்கு தாவினான் முகிலன்.

அம்மா.............., அப்பாவ பாரும்மா 'மோட்டு பாட்லு'வ மாத்திட்டு கிரிக்கெட் பாக்குறார்ம்மா என்று குழந்தை கத்தியதை கேட்டு முகிலனிடமிருந்து remoteஐ பிடுங்கி(முகிலன் முறைப்பதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்) குழந்தையிடமே மறுபடியும் கொடுத்தால் அகல்யா.

இவன் முறைத்ததை சாவகசமாக கவனித்து விட்டு, ஆமா விளம்பரத்தை கிண்டல் அடிச்சிட்டு அதே pasteஅ தானே வாங்குறீங்கன்னு அவன் பதிலுக்கு காத்திராமல் kitchenக்குள் நுழைந்தால்.

"நான் ஒண்ணும் அதுக்காக கோவமா இல்ல" - முகிலன்

"தெரியும் தெரியும், எத்தன தடவ எவ்ளோ மோசமா தோத்தாலும் இந்த கிரிக்கெட்ல அப்படி என்னதான் இருக்கோ, அதான் இங்கிலாந்துல நடக்குற மேட்ச்சுக்கு காலைல 5:00 மணிக்கு அலாரம் வச்சி பாக்குரீங்கல்ல  அப்புறம் highlightsயும் பாக்கணுமா என்ன??" - அகல்யா

அய்யோ......, இங்கிலாந்துல நடந்தா 5 மணிக்கு பாக்க தேவைஇல்லை, ஆஸ்திரேலியால நடக்குறதுனாலதான் 5 மணிக்கு எந்திருக்கணும், கொஞ்சம் சிரிப்பு கலந்து நக்கலாக பதில் சொன்னான்.

"தெரியும் தெரியும், எல்லா timezoneஉம் எங்களுக்கும் தெரியும்...........,நீங்க  எல்லா timezone க்கும் whatsappல  மெசேஜ்அனுப்பி chat பண்ணுறதும் தெரியும்......, வீட்டுல ஒரு வேலைக்கு ஹெல்ப் பண்ணுறது இல்லை fullday facebook, whatsapp எதுலயாவது மெசேஜ் அனுப்புறது அல்லது அந்த laptopஅ தூக்கி வச்சிக்கிட்டு எதாவது வேலை செய்யுறது மாதிரி நடிச்சிக்கிட்டு அங்கயும் வெட்டி வேலை பாக்க வேண்டியது" - கடுப்புடன்அகல்யா.

ஒரு சின்ன கிண்டல் வேற ரூபத்துல பிரச்சனையை கொண்டு வருது என்பதை உணர்ந்து மௌனமே இங்கு சரியான ஆயுதம் என்று இருந்தான் முகிலன்.

உலக பிரச்சனைகளுக்கு வேண்டுமென்றால் மௌனம் சரியான தீர்வாக இருக்கலாம், ஆனால் வீட்டு பிரச்சனைகளுக்கு மௌனம் என்பது  எரியிற தீயில எண்ணைய ஊத்துற மாதிரி என்பதை முகிலன் அப்போது அறியவில்லை.

நான் காட்டுகத்தா கத்திட்டு இருக்கேன், நீங்க என்னன்னா அங்க இன்னும் மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, கத்தியவாறு இவன் phoneஐ பிடுங்கி பார்த்தாள் . நல்ல வேலையாக ஆபீஸ் team memberஇடம் இருந்து வந்த மெசேஜ் ஆக இருந்தததால் அந்த வினாடி தப்பித்தான் முகிலன்.

ஆனால் பிரச்சனை சிறியதாக இருக்கும் போதே அதை தீர்த்தாக வேண்டும் அல்லது அது நம் தலை மேல் ஏறி ஆடும் என்பதை தன் பத்து வருட வேலை அனுபவத்தில் அறியாதவனில்லை முகிலன். தான் படித்த அனைத்து மேலாண்மை மற்றும் நிர்வாக நூல்களின் ஐடியாகளை யோசிக்கலானான். முதல் முயற்சியாய் குழந்தையை நானே பள்ளியில் விடுகிறேன் என்று படித்து கொண்டிருந்த பேப்பரை அப்படியே மடித்து வைத்து விட்டு  bathroomல் நுழைந்தான்.
.
.
.
.

இன்னைக்கு breakfast smell சூப்பர் என்றவாறே டைனிங் டேபிளில் அமர்ந்தவனுக்கு kellogsஐ பார்த்த உடன், அவசரப்பட்டு ஒரு ஐடியா வீணாகிவிட்டதே என்று நொந்தவாறே நாலே ஸ்பூனில் சாப்பிட்டு முடித்தான்.

கணவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததையும், விக்கி விக்கி kellogs சாப்பிட்டதையும் சிறு புன்னகையுடன் ரசித்தாலும், இன்று அதிகமாகவே முகிலனை கடிந்து விட்டோமே என்று யோசித்த வினாடியில் முகிலன் தன் அனைத்து குடும்ப மேலாண்மை உத்திகளும் பயனளித்தாகவே எண்ணினான்.

 குழந்தையை பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு ஆபீஸ் வந்தடைந்தவன் முதல் வேலையாக flipkartல் ஒரு லேட்டஸ்ட்(ஏற்கனவே தனக்காக செலக்ட் செய்து வைத்திருந்த) அதிநவீன android phone sameday டெலிவரியில் ஆர்டர் செய்தான், இன்றைக்கு இந்த phoneஐ அகல்யாவுக்கு பரிசளித்து அவளையும் whatzsappல் அறிமுக படுத்தியது மாதிரி இருக்கும் நம்மள  பத்தி குறை சொல்லாத மாதிரியும் இருக்கும். எப்படியும் "இந்த புது போன் எனக்கெதுக்குங்க உங்க phoneஐ நான் வச்சிக்கிறேன், நீங்க இத use பண்ணுங்க" என்று கூறும்  அகல்யாவின் மனதை சரியாக படித்ததாய் எண்ணி தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

flipkartஐ நாள் முழுதும் தொடர்பு கொண்டு phoneஐ ஒரு வழியாக டெலிவரி பெற்று கொண்டு வீட்டுக்கு சென்று அகல்யாவிடம் surprise giftஆக கொடுத்தான். அகல்யாவும் குழந்தையும் இரு குழந்தைகளாய் அந்த phoneஐ ஆர்வமுடன் பிரித்து விளையாட ஆரம்பித்த சந்தோசத்தில் சீக்கிரமே தூங்கி போனான்.

காலை எழுந்து தன்னுடைய phoneல் whatsapp notification 350msg  என்று இருந்ததை பார்த்தவனுக்கு தலை சுற்றியதில் காரணம் இல்லாமல் இல்லை, எல்லாம் தன் மனைவி அகல்யா அனுப்பி இருந்ததே. நைட் 1மணி முடிய மெசேஜ் பண்ணி இருக்கிறாள், இதில் மொக்க மொக்க ஜோக்கை இவனுக்கு forward வேற பண்ணி இருக்கிறாள்.

"அகல்யா, அகல்யா ......நேரம் ஆயிடுச்சு பாரு எந்திரி..... குழந்தயை ஸ்கூலுக்கு அனுப்பனும் டைம் ஆகுது எந்திரி " - கெஞ்சலாக எழுப்பினான் முகிலன்

நேத்து படுக்க கொஞ்சம் லேட் ஆயுடுச்சுங்க......... குழந்தையும்தான்......., உங்க phoneல game விளையாடிட்டு இருந்தால அதுனாலதான். அவங்க missக்கு whatsappல இன்னைக்கு இவ லீவுன்னு சொல்லி மெசேஜ் அனுப்பிறேன். அப்புறம் கணேஷ்பவனில் whatsappலயே breakfast ஆர்டர் பண்ணிரலாமாம், நானே ஆர்டர் பண்ணிறேன் நீங்க வேகமாய் போய் குளிச்சிட்டு வாங்க என்று இவன் பதிலுக்கு கவனிக்காதவலாய் மெசேஜ் பண்ண ஆரம்பித்து விட்டாள்.

கணேஷ் பவனில் இருந்து வந்த பையனுக்கு பில்லையும் டிப்ஸையும் கொடுத்தனுப்பினான். "ஏங்க அந்த பையனோட friend request accept பண்ணுவீங்களாம், அவன் facebookலயும் ஆர்டர் எடுப்பானாம்" - பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே அகல்யா கூறினாள்.

சாப்பிட்டுக்கொண்டே அகல்யாவிடம் மெதுவாக ஆரம்பித்தான், "என்னம்மா phone எப்படி இருக்கு use பண்ணுறதுக்கு ஈசியா இருக்கா, menuல்லாம் பழக்கமில்லாம கஷ்டமா இருக்குமில்ல?"

"இது என்னங்க பெரிய ராக்கெட் சயின்ஸா, நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஈஸியா புரிஞ்சிடுச்சு....." - அகல்யா சொல்வதை கேட்டு லேசா தலை சுற்ற ஆரம்பித்தது.

"என்னோட whatsapp friend ஒருத்தி 2.75ghz, 3gb ram configurationல lollypop வெர்சன்ல ஒரு மாடல் வச்சிருக்கலாம் ரொம்ப பீத்திக்கிறா, நீங்க ஆபீஸ்ல போய் ஒரு லேட்டஸ்ட் போன் search பண்ணி உடனே வாங்குறீங்க.....உங்க phone வேற ரொம்ப பழசாயுடுச்சு, நீங்க இத வச்சிக்கோங்க அந்த லேட்டஸ்ட் phoneஐ நான் வச்சிக்கிறேன்......ம் அப்புறம் உங்க அந்த பழைய phoneஐ exchange ஆபர் ல கொடுத்துறாதீங்க அத நம்ம பாப்பாவுக்கு gamesக்கு கொடுத்துறலாம்" - அகல்யா

இவன் தலை கிறுகிறு என்று சுத்தி நின்றதை கவனிக்க நேரமில்லாமல் ஏதோ ஒரு மொக்க வீடியோவை forward பண்ணி அது முகிலனுக்கு டெலிவர் ஆவதையும் இவன் phoneஐ பிடுங்கி confirm பண்ணிக்கொண்டால்.

"நீயல்லாம் எங்க ஆபீஸ்ல வேலை பாத்திருந்தா இந்த நேரம் சீனியர் மேனேஜர் ஆகி இருப்படி" - என்று மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் ஆபீஸ்க்கு கிளம்பினான் முகிலன்.








Saturday, November 1, 2014

வதந்தி எனும் காட்டுத்தீ

[இந்த  பதிவை படித்து முடிக்க சராசரியாக இரண்டரை நிமிடங்கள் ஆகும், படித்த படி நடக்க அதை விட குறைவான நேரமே தேவை படும்.]

இறுதி எண்பதுகளிலும், தொண்ணுறுகளின் ஆரம்பத்திலும்......அதாவது தூர்தர்ஷன் கோலோச்சிய காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையில் சிறு சிறு கார்ட்டூன் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடையே பரப்புவார்கள்; மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை குறைப்பது, தண்ணீரை சேமிப்பது, கிராம தூய்மையின் முக்கியம் இவ்வாறு மேலும் பல.

இவற்றில் ஒரு கார்ட்டூன், ஒரு சிறுவன் தன்னுடைய வீட்டில் பலூன் ஊதி விளையாடும் பொழுது, பலூன் வெடித்து விடும்; அதை வெளியே கேட்ட ஒரு நபர் அந்த வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக மற்றொருவரிடம் சொல்லுவார் பின் அவ்விஷயத்தை கேட்ட அந்த நபர் மற்றொருவரிடம் அந்த தெருவில் ஏதோ வெடிகுண்டு வெடித்ததாக தனது நண்பர்களிடத்தில் சொல்லுவார். அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இந்த விஷயத்தை இன்னும் பெரிது படுத்தி, ஒரு ஊரையே அழிக்க கூடிய குண்டு வெடித்ததாகவும், ஊரில் பெரிய கலவரம் நடப்பதாகவும் பலவாறாக வதந்திகளை பரப்புவார்கள். வதந்தியால் விளையும் கெடுதலை மக்களுக்கு உணர்த்துவதற்காக அமைந்த ஒரு சிறு விளக்கப்படம். இந்த கார்ட்டூன் இப்பொழுதும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தகவல் தொடர்பு உள்ளது. வெறும் வாய் வழியாகவே வதந்தி இவ்வளவு வேகமாக பரவ முடியும் போது, இன்றைய மக்கள் தொடர்பு சாதனங்களான whatzapp, facebook, twitter etc இந்த வதந்திகளை ஒளியின் வேகத்தை விட வேகமாக பரப்புகின்றன.

கடந்த வாரத்தில், ஒரு ஆடியோ பதிவு மற்றும் ஒரு பெண்ணின் போட்டோ.......... துரைப்பாக்கத்தில் திருட்டு சம்பவத்தில் அந்த பெண் ஈடுபடுவதாக வேகமாக பரவியது(இந்த பதிவு எழுதும் பொழுது அந்த ஆடியோ பதிவிக்காக மன்னிப்பு கேட்டு மறு பதிவும் வந்தது ஒரு ஆறுதல் விஷயம்). இவ்வாறான வதந்திகளுக்கு காரணம் என்னவென்றால், செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற ஒரு வேகம் தான். ஒரு சிறு send button அல்லது ஒரு like அல்லது share buttonகள் இதை நமக்கு மேலும் எளிமை ஆக்கிவிடுகிறது.

இந்த வேகம் தனி மனிதனிடத்தில் மட்டும்தான் இருக்கிறதா, இல்லை சமுயாத பொறுப்புணர்வு உள்ள பத்திரிகையிலும்(தனி மனிதனை விட அதிகமாக கட்டாயம் அதிகம் இருக்கணும்) இதே வேகம் உள்ளது. மேல் சொன்ன அதே பதிவு மறுநாள் ஒரு தமிழ் நாளிதழிலும் வந்தது(அவ்விசயத்தையும் whatzapp அனுப்பினோம், பத்திரிகைகாரன் பொய் சொல்ல மாட்டன் என்று நினைத்து) . இது மட்டுமல்ல, சமீபத்திய ஒரு ஜாமீன் வழக்கின் தீர்ப்பை முழுதாக சொல்வதற்குள், செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் தவறான செய்தியை பரப்பின அனைத்து செய்தி நிறுவனங்களும்(பின் அச்செய்திகளுக்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை)

செய்தி நிறுவனங்களின் அலட்சியத்தின் இன்னொரு எடுத்துகாட்டு http://www.thenewsminute.com/news_sections/1818. சரி அத விடுங்க அவங்க என்னவேனா பண்ணட்டும், நாம நம்ம sideல இருந்து இந்த மாதிரி வதந்திகளை பரப்பாமல் இருக்க சில விசயங்களை follow பண்ணாலே போதும், எந்த ஒரு விசயத்தின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அதை பரப்பாமல் இருக்கலாம், ஒரு தப்பான விஷயத்தை பகிர்வதை விட நமக்கு  தெரியாத ஒரு நல்ல விஷயத்தை பகிராமல் இருப்பதே மேல்.





Saturday, October 25, 2014

விமர்சனங்கள் (விமர்சகர்கள்)

 [இந்த பதிவை படித்து ரசிக்க சராசரியாக 2.5 நிமிடங்கள் ஆகும்]

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் மிகவும்  விமர்சிக்கப்பட்ட(கேலி செய்யப்பட்ட) இரு வெவ்வேறு நபர்கள்,
 நீயா நானா கோபிநாத்
அஞ்சான் டைரக்டர் லிங்குசாமி

தனது talk show ல் மருத்துவ தொழிலிலை மிகவும் கேவலமான கருத்து தெரிவித்ததர்க்க்காக கோபிநாத்தையும், ஓடாத ஒரு படத்தை பற்றி படம் வருவதற்கு முன்னரே கொடுத்த பில்ட் அப் க்காக லின்குசாமியையும் எவ்வளவு ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டிருக்காங்க.

சமூக வலைத்தங்கள் தங்கள் பணியை வெகு சிறப்பாக செய்து  இந்த கேலி கிண்டல்களை வலைத்தளங்களில் பரப்பின. ஆனால் ஏனோ லிங்குசாமியின் கிண்டல் பதிவுகளை போல் கோபிநாத் பற்றிய ஆடியோ பதிவை ரசிக்க முடியவில்லை.

ஏனென்றால், லிங்குசாமியின் படைப்புகளை அந்த பதிவுகள் விமர்சிக்க வில்லை, மாறாக அவரின் பேட்டியை(மொத்த வித்தையை இறக்குனதை......) மட்டுமே விமர்சித்தன. அவரின் பழைய படங்களை பற்றியும் இந்த அஞ்சான் படத்தை பற்றியும் கூட ஒரு கருத்தும் சொல்லவில்லை, கிண்டல் பதிவுகளின் குறிக்கோள் அவருடைய பேட்டியை மட்டுமே தாக்குவதாக இருந்ததது.

ஆனால், கோபிநாத் பற்றிய ஒரு ஆடியோ பதிவு (ஒரு டாக்டர் தயாரித்தது ) , கோபிநாத் என்ற ஒரு தனி நபரையும் அவர் சார்ந்த விஜய் டிவியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்க பட்டது. இது மருத்துவ தொழிலை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக இது பதில் பதிவா?? ஏன் இவ்வாறு வேறு எந்த தொழிலையும் யாரும் விமர்சித்து கருத்து சொன்னது இல்லையா, போலீஸ் தொழிலையும், கால் சென்டர் வேலையும் இது வரைக்கும் talk show ல் விமர்சித்தது விட இது ஒன்றும் மோசமாக விமர்சிக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு போலீஷோ அல்லது கால் சென்டர் employeeஓ கீழ்த்தரமான மறுப்பு விமர்சனம் கொடுத்ததும்  இல்லை. அந்த ஒரு ஆடியோ பதிவு மட்டும் இல்லை, இது போன்ற நிறைய வீடியோ பதிவுகள் youtubeலும்(ஆனால் அது எல்லாம் கொஞ்சம் நாகரிகமாகவே இருந்தது). இதை எல்லாம் வச்சி பார்க்கும் போது டாக்டர்ஸ் இந்த நிகழ்ச்சிய இவ்ளோ நாள் ரொம்ப பர்சனல்லா ரசிச்சி பாத்திருபாங்கன்னு நினைக்கிறேன்.

Talk showவ, ஷோவா மட்டுமே பாத்திருந்தா இவ்வளவு காட்டம் இருந்திருக்காது, அத விட்டுட்டு கோபிநாத்தை ஒரு புரட்சியாளனாகவும், தலைவனாகவும், இவ்வளவு நாள் கொண்டாடிட்டு நமக்கு எதிரா ஒரு கருத்து சொன்னா இப்படிதான் கோபம் வரும். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு டாக்டர் விஜய் டிவி யின் எல்லா ப்ரோக்ராமையும் விடாம பாக்குறதுக்கு டைம் இருந்த்துருக்குமா?? ஏன்னா அந்த ஆடியோ பதிவு ஒரு ப்ரோக்ராம் விடாம எல்லாத்தையும் பாத்திருந்தா மட்டும்தான் இவ்வளவு விமர்சிக்க முடியும்.

இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் லிங்குசாமியை விமர்சித்தது அனைவரும் engineerகள்(கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பவர்கள்), கோபிநாத்தை விமர்சித்தவர்கள் டாக்டர்கள். ஒரு வேலை இதை அந்த டாக்டர் ஒரு engineerட்ட outsource பண்ணிருந்தா நகைச்சுவையாகவோ நாகரிகமாகவும் விமர்சித்திருந்திருக்கலாம்.

இந்த பதிவு வெறும் நகைச்ச்வைக்காக எழுதப்பட்ட என் தனிபட்ட  கருத்து மட்டுமே(குறிப்பாக டாக்டர்களை கிண்டல் அடிப்பதற்காக அல்ல ), அப்புறம் யாரவது ஒரு டாக்டர் இத படிச்சிட்டு blog எழுதும் மொத்த எஞ்சினியர் சமுதாயத்தையும் கிண்டல் அடிச்சி நீங்க கட்டுன பாலம் ஒழுங்கா நிக்குதா, கட்டிடம் இடியாம நிக்குதா, அல்லது  SW defect இல்லாம இருக்கன்னு மறு பதிவு போட்டுற போறாங்க.











Sunday, September 21, 2014

ஓர் இரவு வாழ்க்கை...


[இந்த பதிவ படித்து முடிக்க சராசரியாக நாலு நிமிடங்கள் ஆகும் ]



நடுநிசி இரவு பன்னிரெண்டு மணி, ஆள் அரவம் இல்லாத அந்த அறையில் யாரோ தன்னை பேர் சொல்லி அழைப்பது போல் கேட்டது.

ராம்,
டேய் ராம்,
டேய் ராம் எந்திரிடா...........

சரி சரி இது ஏதோ, ராஜா ராணி....., ஒரு ஊர்ல ஒரு பெரிய........ இப்படி ஏதோ ராமு, சோமு கதைன்னு நினைக்க வேண்டாம். இது மின்னணு உபகரணங்களில் இருக்கும் வன்பொருள், மென்பொருள்களுக்கு இடையில் நடக்கும் சிறு உரையாடல்.

அய்யோ......தமிழ் பதிவுன்னு சொல்லிட்டு இப்படி எழுதுனா எப்படி புரியும் உங்களுக்கு? இதோ தமிழ்லேயே சொல்லுறேன். electronic gadgetsல்  இருக்கும் hardware மற்றும் software பேசிக்கொள்ளும் சிறு உரையாடல்.

RAM,
டேய் RAM,
டேய் RAM எந்திரிடா........

RAM :  என்னடா EEPROM, என்னைய கொஞ்ச நேரம் கூட தூங்க விட மாட்டியா? நான் உன்ன மாதிரி ஒண்ணும் வெட்டி பய கிடையாது, நேத்து fulla ஒரே வேலை.....இந்தா beer அடிச்சிட்டு தூங்கிட்டு இருக்கானே இந்த நாதாரி ஒரு program கூட விடாம எல்லாத்தையும் download பண்ணி வச்சிக்கிட்டு எல்லா programயும் நோண்டிட்டே இருக்கான். இதுல இடைல whatsapp, facebook சாட்டிங் வேற. ஒரு நிமிஷம் என்ன தூங்க விட மாட்டேங்குறான்.

EEPROM alias NVM  : சரி சரி அப்படியே சைக்கிள் கேப்ல உன் புகழ் பாடுற பாத்தியா!!! charge போயிட்டாவது நீ தூங்கிக்கலாம், ஆனா என்ன பாரு இந்த phoneஐ தூக்கி கட்டைல போறது முடிய நான் வேலை பாத்தாகணும்.

ROM alias FLASH : டேய் மாப்பிளைகளா, என்ன ஓவரா உங்க புகழாவே பாடிட்டு இருக்கீங்க, நான் இல்லன்னா அப்புறம் உங்களுக்கு எதுடா வேலை!!! எல்லா programயும் ஸ்டோர் பண்ணிட்டு நான் எவ்ளோ அமைதியா வேலை செய்றேன்.

ROM : இதுல இந்த பய புள்ள திடீர்னு எதாவது OS version மாத்துரேன்னு புது OS install பண்ணுவான் அப்புறம் factory reset பண்ணுறேன்னு எதாவது சொதப்பிட்டு திருப்பி flash பண்ணுவான்.

NVM : ஆமா அப்போ configuration சொல்லிட்டு எனக்கும்தான் வேலை இருக்கும்.


RAM: ஹலோ, எங்களையும் தான் download speed சரியல்லைன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. நான் மட்டும் speedஆ ரைட் பண்ணலைன்னா உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.


(அப்போ அங்க இன்னொரு சத்தம் கொஞ்ச கட்ட குரல்ல......என்னடா அங்க சத்தம் .....................பேசினது வேறு யாரும் இல்ல நம்ம CPU தான்)

RAM/ROM/NVM (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டிருந்தோம்........

RAM : ஆமா CPU ன்னா இவர் மட்டும் என்ன கொம்பா?? இவனும் நம்மள மாதிரி வெறும் memory தாண்டா!!! program counter, stack , ALU, registers அப்படின்னு வேற வேற பேர் வச்சிட்டு இருக்கான், ஆனா எல்லாமே memory தான்.

(CPU யோட கட்ட குரல் நம்ம ANDROID யும் எழுப்பி விட்டுருச்சு)

ANDROID: சரியா சொன்னடா, நீங்கல்லாம் வெறும் memory தான். உங்களுக்கு dataவ கொடுத்து உங்கள வேலை செய்ய வைக்கிறது நாங்கதான்.

NVM : அப்பு, நீ வெறும் program தான், உன்ன மாதிரி தான் windows ன்னு ஒருத்தன் பெரிய படம் போட்டுட்டு இருந்தான் இப்ப அவன் நிலைமைய பாத்தில....

ANDROID : அய்யோ, வெளிய இருக்குறவன் தான் விவரம் தெரியாம பேசுறான்னா நீயுமா?? நானோ windows, linux , iOSஓ ....இன்னும் எத்தனை programஓ......எல்லாம் compile பண்ணி build பண்ணிட்டா வெறும் zeroes and ones மட்டும்தான். நீங்க எல்லாம் அந்த zeroes and ones வச்சி output தர்ற வெறும் memory device அவ்ளோதான்.

ROM : சரி சரி இத சத்தமா சொல்லாத, அப்புறம் இந்தியாகாரன்லாம் zeroவ கண்டுபிடிச்சது இந்தியன்தான் சொல்லி ஒரு postingஅ போட்டு அதுக்கும் லைக் போட்டு நம்மள இன்னும் கொன்னு எடுப்பாங்க.

RAM/ROM/NVM (கோரஸாக):ஹா ஹா ஹா ...........

ANDROID : ஏய் அவனுங்கள லைக் வாங்குறதுக்கு மட்டும் வேலை செய்யும் ஆளுகன்னு தப்பா நினைச்சிடாத, நம்ம சொல்லுற சாதாரண zeroes and ones வச்சி எவ்ளோ achieve பண்ணிருக்காங்க தெரியுமா??

ROM : ஓ தெரியுமே!!!இந்தா  நமக்கெல்லாம் உயிர் வந்து பேசிக்கிற மாதிரி இந்த program எழுதுனது கூட மப்பு கலைஞ்சும், இன்னும் தூங்கிட்டு இருக்கனே இவன்தான் பெரிய ஆள்தாம்ப்பா.

NVM : டேய்  நம்ம பேசிக்கிற சத்தம் கேட்டு இவன் எந்திரிக்கிற மாதிரி இருக்கு.

ANDROID : அய்யோ, எதுக்கு எல்லா file யும் select பண்ணுறான்?? ஐயையோ இவன் விரல்கள் shift + del அமுக்..............


NVM: ஆ ஊ ~வ ஃ க்கோ @##$$%^&&**((((







Sunday, September 7, 2014

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்எண்னை மற்றும் தீபாவளிக்கு டால்டா வாங்கியவர்கள்;

பஞ்சாயத்து டிவில் ஒலியும் ஒளியும் மற்றும் ஹிந்தி படம் பார்த்தவர்கள்;

வருடம் முழுதும் டவுன் பஸ்ஸில் மட்டுமே சென்றாலும்  குடும்பத்துடன் துணிக்கடை செல்லும் நாட்களில் மட்டும் பந்தாவாக சைக்கிள் ரிக்சாவில் சென்றவர்கள்;

பொருட்காட்சியில் முதன்முதலாக  ஒரு சிக்கன் 65 வாங்கி குடும்பமே பங்கிட்டு சாப்பிட்டவர்கள்;

டூயுவில் சட்டர் போட்ட சாலிடர் டிவி வாங்கி, வரும் ஞாயிறு என்ன படம் என்று  சொல்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிரொலி பார்த்தவர்கள்;

ஒரு முறை  சென்னை சென்று வந்ததையே வருடம் முழுதும் பேசியவர்கள்;

எஞ்சினியரிங் என்றால் சிவில் எஞ்சினியர் மட்டுமே நினைத்தவர்கள்;

ஐந்து வருடத்திற்கு முன் எழுதி வைத்த போன் கனெக்ஷன் கிடைத்த  மகிழ்ச்சியில் எல்லா சொந்தத்துக்கும் பேசி விட்டு மாத கடைசியில் பில் வந்ததும் போனுக்கு பூட்டு போட்டவர்கள்;

மற்றும் இது போல் பலரை காணவில்லை. இவர்களிடத்தில்  காசு பணமிருந்ததில்லை அதே நேரத்தில் கவலையும் இருந்தததில்லை.

                  இவர்கள் எப்பொழுது முதல் காணாமல் போனார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. வேலை,பணம், குடும்பம் தேடுதல்  மற்றும் கால ஓட்டங்களில் காணமல் போயிருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது, இறுதி 90களில், மற்றும் உலகமயமாக்கல் பொருளாதர வளர்ச்சியில் காணாமல் போயிருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற விவரமே வேலை வெட்டி இல்லாத நேரங்களில் அல்லது டிவியில் பட்டிமன்றம் பார்க்கும் போது  மட்டும்தான் தெரிய வரும். மற்ற நேரங்களில் இவர்களை தேடக்கூட ஆள் இருக்காது. இவர்களை  பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, அளவுக்கு அதிகமாக பணமிருந்தும் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காத(அல்லது ஒதுக்காத) எவரிடமும் தெரிவிக்கலாம்.

வீட்டிற்க்கு ரெண்டு கார் இருந்தும், அதில் குடும்பத்தோடு ஊர் சுற்ற நேரமில்லாதவனும்;
பிடித்த உணவை விட பிடிக்காத மாத்திரையை அதிகம் சாப்பிடுபவனும்;
42" இன்ச் டிவி வாங்கியும், அதை பார்க்க நேரமில்லாதவனுக்கும்தான்  இவனை கண்டுபிடிக்க வேண்டியது இப்போது அவசியமாகிறது.

                 இவர்களை தேடுவதை விடுத்து அவர்கள் தொலைந்த காலங்களை தேடுவதை விடுத்து நமது சரியான சந்தோஷம்(நிச்சயம் பணமாக இருக்காது) எது என்று தேடினாலே, தானாக இவர்கள் கிடைப்பார்கள்.