Thursday, July 30, 2015

கனவுகளை விதைத்த ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி

தங்களுக்கு விஞ்ஞானி, ஜனாதிபதி, கவிஞர், ஆசிரியர் மற்றும் இன்னும் பல அடையாளங்கள் இருந்தும் ஆசிரியர் என்ற அடையாளத்தால் அறிய  படுவதையே உங்களின் விருப்பமாக இருந்தது. ஆதலாலே இந்த தலைப்பும்..............

எழுபதுகளின் இரண்டாம்பாதிக்கு மேல் பிறந்தவர்களுக்கு நல்ல தலைவன் என்பவன் வரலாற்று பக்கங்களில் படித்த ஒரு விசயமாகவே இருந்தது. ஆம் காமராஜ், காந்தி போன்றோர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தது இல்லை, ஆனால் நீங்கள் இருக்கும் வரை அறிந்திருக்கவில்லை அவர்களுக்கு ஒப்பான ஒரு தலைவருடன் வாழ்ந்திருக்கிறோமென்று. இதுவரை எவ்வளவவோ பிடித்த அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், சினிமா பிரபலங்களின் இறப்பு செய்திகளை கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் ஜூலை 27' 2015 இரவு வந்த அந்த செய்தி மட்டும் நமக்கு மிகவும் நெருங்கிய அல்லது வெகு நாள் பழகிய ஒருவரை இழந்ததாகவே தோன்றுகிறது.

போர் விமானி ஆக விருப்ப பட்டீர்கள், நல்ல வேலை அன்று அந்த வேலை உங்களுக்கு கிடைக்கவில்லை, இல்லையென்றால் விண்வெளியில் இந்தியாவுக்கு இவ்வளவு வெற்றிகள் சாத்தியபட்டிருக்குமே என்பது சந்தேகமே. இல்லையில்லை அன்று நீங்கள் போர் விமானி ஆகி இருந்தால், இன்று இந்திய விமான படை உலகின் தலைசிறந்த ஒரு விமான படையாக இருந்திருக்கும்.

ஆம், இந்திய குடியரசின் அதிக அதிகாரம் இல்லாத அதி உயர்ந்த பதவி, ஐந்து வருட ஜனாதிபதி பதவி; யாரும் அறிந்திருக்கவில்லை உங்களால் அப்பதிவியும் அலங்கரிக்க படும் என்றும். இன்றும் அந்த ஐந்து வருடமே(2002 - 2007) அப்பதவிக்கு அளவுகோளாக பார்க்கபடுகிறது. அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் செய்திடவில்லை(அப்படி ஒன்றும் செய்திடவும் முடியாது, அப்பதவியால்), ஆனால் இந்த பதவியை உங்கள் குறிக்கோளுக்கு படிக்கட்டாய் பயன் படுத்தி கொண்டீர். தெளிவான ஒரே குறிக்கோள், அதை அடைய ஒரே வழி; வளர்ந்த நாடாக இந்தியா, அதை சாத்திய படுத்துபவர்கள் இளைஞர்கள்..........இது தான் அந்த குறிக்கோளும் அதை அடைய நீங்கள் கண்டுபிடித்த வழியும். ஜனாதிபதியாய், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் குழந்தைகள், இளைஞர்களுக்கு அறிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வழியாக வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தீர்கள். அப்பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆசிரியராய் தொடர்ந்து இப்படியும் கூட வாழ முடியுமா என்று எண்ண வைத்தீர்கள். ஜனாதிபதியாய் சந்தித்த மாணவர் எண்ணிக்கையை விட அதற்கு பிறகு சந்தித்த மாணவர் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு தருணத்தில் மாணவர்களுடன் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது உங்கள் இறப்பும் ஒரு தனிதத்துவம் படைத்தது.

ஐரோப்ப யூனியன் பார்லிமென்ட்டில் பேசிய உரை, திருப்பதி திருத்தலத்தில் இந்தியாவிற்கே அர்ச்சனை செய்தது, வெற்றிகளில் சிறந்த வெற்றியாக போலியோ பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் இடை குறைந்த செயற்கை கால்களை வடிவமைத்ததை சொல்வது. சாகும் நிமிடங்களுக்கு சில மணித்துளிகள் முன்னர் கூட உங்களுக்காக ஆயுதம் ஏந்தி நின்று கொண்டே பயணம் செய்த காவலருக்கு நன்றி சொன்னது. இவ்வாறு பல நிகழ்வுகள், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

தலைவன் ஆவதற்க்காகவே கட்சி ஆரம்பிக்கும் இந்நாட்டில் நூறு கோடி மக்களாலும் தலைவனாக ஏற்று கொள்ள பட்ட ஒரே தலைவர் அதுவும் எந்த ஒரு கட்சி அல்லது இயக்கம் சாராதவர். ஒரு பஸ் எரிப்பு இல்லை, கல் எறிதல் இல்லை, எந்த ஒரு அசம்பாவிதம் இல்லை, வலுகட்டாய கடை அடைப்பு இல்லை.........இந்தியாவில் இதுவே முதல் முறை இப்படியொரு இறுதி பயணம்(மேற் சொன்ன காந்தி காமராஜரின் மறைவுகள் கூட சில அசம்பாவித சம்பவங்களை பதிவு செய்திருக்கிறது). மாறாக, சிறப்பு பேருந்துகள் இயக்க பட்டன, சில இலவச பேருந்துகளும் கூட இயக்கப்பட்டன. ஏன், இந்த இறுதி ஊர்வலத்தை பார்த்து சில அரசியல் தலைவர்கள் கூட கனவு காண ஆரம்பித்திருப்பார்கள் தங்கள் இறுதி பயணமும் இது மாதிரி இருக்க வேண்டுமென்று. சாமானியனை மட்டுமல்ல தலைவர்களையும் கனவு காண வைத்த இந்த பயணம், உங்கள் கனவு மெய்பதுவதற்கு சிறந்த எடுத்துகாட்டு. நீங்கள் நினைத்த வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைந்து விட்டது, இனி உங்களின் விதைகள் விருட்சமாக வளரட்டும்.








Saturday, July 4, 2015

முதல் மெட்ரோ பயணம்

முதல் மெட்ரோ பயணம்................ஓகே அப்படி பொத்தாம் பொதுவா "முதல்" மெட்ரோ பயணம்ன்னு சொல்லிற முடியாது. வேணும்ன்னா இந்தியால முதல் மெட்ரோ பயணம், ஒ ஒ ஓஓ அதுவும் சொல்ல முடியாது டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோகளிலும் தலா ஒரு பயணம் முடிந்தாகிவிட்டது, சரி முழு கட்டுமான பணிகளையும் பார்த்து பயணம் செய்த ஒரு மெட்ரோ பயணம்.

ஆம், வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார்ன்ற பழமொழிய எல்லோராலும் அனுபவிக்க முடியுதோ இல்லையோ, "மெட்ரோ கட்டுவதை பார்" இந்த வாக்கியத்தை கடந்த ஆறு வருடங்களில் சென்னையை தொடர்புடைய யாராலும் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. இந்த கட்டிட வேலைகளால் அரை கிமீ தூரத்தை கடக்க கூட அரை மணி நேரமாகிய நாட்கள், மழைக்கு ஒதுங்கி பில்லருக்கு அடியில் நின்று இதில் ஒரு track இருக்குமா அல்லது இரு track இருக்குமா போன்ற விவாதங்களை கேட்ட நாட்கள், கட்டுமான பணியின் போது நடந்த விபத்துகளால் அவ்வழி பாதைகளில் பயணம் செய்த சக பயணிகளுக்கு நடந்த கொடூர மரணங்கள், இவையல்லாமல் வெறும் துண்டு செய்திகளாக வந்த கட்டுமான அஸ்ஸாம், மற்றும் மணிப்பூர் பகுதி பணியாளர்களின் மரணங்கள், ஆட்சி மாற்றங்களுக்கு இடையில் வெகுவாக சிக்காமல் சிற்சில தடைகற்களை மட்டுமே தாண்டி வளர்ந்து கொண்டிருக்கும் மெட்ரோ, இப்படி நாம் தினமும் கேட்டு அல்லது பார்த்து வளர்ந்த மெட்ரோ சென்னை மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என்ற செய்தியே கொஞ்சம் ஆர்வமாக தான் இருந்தது. ஒவ்வொரு வெள்ளி கிழமைகளில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கே முதல் ஷோ முதல்  ரிவ்யூ கொடுக்கணும்ன்னு இருக்கும் ஷோஸியல் மீடியாக்களின் குறிக்கோள்களுக்கு மத்தியில் இந்த மெட்ரோ ஓபனிங் ஒன்றும் விதி விலக்கல்ல. படங்களை போல் 120ரூ டிக்கெட் இல்லை அதிகமே 40ரூ தான், டிக்கெட் கெடைக்கலைன்ற பிரச்சனையே கெடையாது, இப்படி பட்ட மொக்க படத்துக்குபோய் முதல் நாளே வந்துட்டோம்ன்னு வருத்தமும் இருக்காது. இவையனைத்தும் சேர்ந்து நாமளும் மெட்ரோல போய் ஒரு செல்ஃபி எடுத்து போடணும் என்ற எண்ணம் மேலும் ஆர்வத்தை கூட்டியது. ஆலந்தூர் முதல் அசோக் பில்லர் முடிய திரும்ப அசோக் பில்லரில் இருந்து ஆலந்தூர் முடிய, பயண நேரம் பத்து நிமிடங்களுக்கு குறைவே; ஸ்டேஷன் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பராக்கு பார்த்து சென்றது ஒரு அரை மணி நேரம் எடுத்திருக்கும்.

இதற்கு முன்பு இதே போல் பராக்கு பார்த்து கொண்டே மெட்ரோவில் பயணம் செய்தது ட்யூப் என்று செல்லமாக அழைக்க படும் லண்டன் மெட்ரோவில். முதல் இரண்டு மூன்று ட்யூப் பயணங்கள் சுவாரசியமும் மிரட்சியும் கலந்ததாகவே இருந்தது; சுவாரசியம் - எப்படி இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்களை கட்டி முடித்திருப்பார்கள், எவ்வளவு காலம் எடுத்திருப்பார்கள்; மிரட்சி - வழி தவறாமல் நண்பர்களின் பின்னாலயே சென்றது, இந்த கூட்டத்தில் இவர்களை தவற விட்டால் நம்மால் திரும்ப வீடு போக முடியுமா......அடுத்தடுத்த ட்யூப் பயணங்களில் "மிரட்சி" சுத்தமாக குறைந்தாலும் சுவாரசியம் சற்றும் குறையவே இல்லை, ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு புது புது ரூட்களின் ட்யூப் பயணம் புதிதாகவே இருந்தது. நிலத்துக்கு அடியில் இரண்டடுக்கு tunnelக்கே விலகாத ஆச்சரியங்களுக்கு இடையில்  ஐந்தடுக்கு tunnel அந்த ஐந்தடுக்குக்கும் escalator வசதி, அதில் ஒரு சிறு பிசுறு இல்லாமல் பயணம் செய்யும் லட்சகணக்கான பயணிகள் மேலும் மேலும் சுவாரசியத்தை கூட்டும். இந்த சுவாரசியம் அகலும் முன்னே அடுத்த ட்யூப் ரூட் தேம்ஸ் நதிக்கடியில்......வருடம் முழுவதும் நீர் ஓடும் நதிகடியில் சுரங்க பாதையா, அதுவும் இதை 150 வருடங்களுக்கு முன்னரே கட்டி விட்டனர்............இவைகளுக்கிடையில் ஏனோ தேவை இல்லாமல் நம்ம ஊரின் மெட்ரோ பணிகளை ஒப்பிட்டு பார்க்கும் மனது, அப்போதுதான் சென்னை மெட்ரோவில்  அடையார் நதியை(சாக்கடையை) கடந்து செல்லும் பாதையை கட்டி கொண்டிருந்தார்கள், ஆனால் அண்டர்க்ரௌண்ட் இல்லை, நதியின் மேலே செல்லும் பாதையே. நமது நாட்டின் வளங்களை 400 வருடங்கள் சுரண்டி சென்றால் இதை விட சிறப்பாகவே கட்டி இருக்கணும் என்று தானாக சமாதானம் அடையும் மனது. 

அதே சுவாரசியம் மற்றும் மிரட்சியை நிறைய கண்களில் ஆலந்தூரிலும் பார்க்க முடிந்தது. நாங்களும் மெட்ரோ ரயில் எரிட்டோம்ல என்று வெற்றி புன்னகையோடு சில பெண்கள் கூட்டம்; 150 அடிக்கு மேல் இருக்கும் escalator அதில் பயந்து பயந்து ஏறும் பெரியவர்களின் கூட்டம்; இதோ மெட்ரோ டிக்கெட், மெட்ரோ ஸ்டேஷனில் தண்ணி குடிக்கிறேன், இந்தா ட்ரெயின் வருது, இந்த கதவு திறக்குது..............இப்படி ஒரு நிமிசத்துக்கு முன்னூறு ஸ்டேடஸ் போடும் காலேஜ் இளசுகள் கூட்டம்; முதல் மெட்ரோ பயணம்ன்றத விட என்ட்ட iphone6 இருக்குன்னு காண்பிப்பதுக்கே செல்பி எடுக்கும் corporate கூட்டமும்;  இன்ஜினியரிங் கவுன்செல்லிங் வந்திருக்கும் மிரட்சி குறையாத சில வெளியூர் மக்களும். இவர்களுக்கு இடையில் நம்மளும் blog எழுதி ரெண்டு மாசத்துக்கு மேல ஆயுடுச்சே இந்த மெட்ரோ மேட்டர வச்சி ஒரு கட்டுரையாவது எழுதிரலாம்னு திரிஞ்ச நானும் ஒருத்தன்.

இந்த பயணத்தில் புகழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் நாற்பதினாயிரம் பயணிகள், இந்த நாற்பதினாயிரம் பயணிகளுக்கும் முகம் சுழிக்காமல் உதவி(லிப்ட் மற்றும், escalator ஏரியாகளில்) புரியும் volunteerகள். சொன்ன வினாடிக்கு(நிமிடம் அல்ல வினாடி) சரியாக வந்து நிற்கும் ட்ரெயின், எந்த பிளாட்ஃபார்மில் எந்த வழியாக செல்லும் வண்டி வரும், அதற்க்கு எந்த வழியாக செல்ல வேண்டும் இவ்வாறு பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் அறிவிப்பு பலகைகள்,  மேலும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். ஆனால், இவ்விசயங்களை லண்டன் ட்யூப் பயணத்தோடு கம்பேர் செய்தால், அனைத்துமே பாஸ் மார்க் கூட வாங்காது. மொத்த லண்டனில் 9ஜோன்களாக பிரித்து அதில் 11lineல் இயங்கும் ட்யூபோடு ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஆனால் நம் சென்னையில், நம் நாட்டில் நாம் இது வரை பயணம் தாம்பரம் பீச் சப்-அர்பன் ரயில், பறக்கும் ரயில் திட்டங்களோடு கம்பேர் செய்தால் இது நிச்சயம் புகழ்வதற்கு உரிய விசயமே. அதுவும் இந்த ஒரு பகுதி மட்டுமல்லாமல் முழு வேலையும் முடிவடைந்து சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இரண்டு corridorல் அனைத்து பகுதியையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்பதான சென்னையும் அதன் போக்குவரத்தும் ன்னு மெட்ரோவ பற்றி இன்னொரு blog எழுதலாம்.