Wednesday, February 18, 2015

ராஜராஜ சோழனுடன் ஜாக்கிங்

இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 15 நிமிடங்கள் ஆகும்]

ராஜா ராஜா சோழன் கூட ஜாக்கிங் போனா எப்படி இருக்கும், அப்படித்தான் நேற்றைய காலை ஜாக்கிங்கும் இருந்தது முகிலனுக்கு. நேற்று காலை கூட முகிலன் இதை முழுசா நம்பல, ஆனால் இன்று இரவு ஆள் அரவம் இல்லாத அந்த parkல் இப்பொழுது அதே ராஜ ராஜ சோழனுக்காக காத்துட்டு இருக்கான்.

நேற்று காலை

"ஏம்ப்பா முகிலா இன்னைக்கு இவ்வளவு லேட்..............." காலை ஜாக்கிங்கில் பரிச்சயம் இல்லாத மனிதர்கள் பேசுவது அல்லது சிறு புன்னகை செய்வது இயல்புதான் ஆனா பேரையும் சொல்லி உரிமையா ஏன் லேட்ன்னு கேட்ட உடன் கொஞ்சம் jerk ஆகிட்டான். இருந்தாலும் கொஞ்சம் ஸ்பீட குறைச்சிக்கிட்டு "லேட் ஆயுடுச்சி சார் ன்னு மொக்கையா ஒரு பதில் சொன்னான்". "அப்பா எப்படி இருக்கார்ப்பா" என்ற அடுத்த கேள்வியில் மேலும் குழம்பியவனாய், "அவர் நல்லா இருக்கார் சார், ஆனா நீங்க யாருன்னு தெரியலையே" என்றான். நீ ஜாக்கிங் முடிச்சிட்டு வா, நான் அந்த பென்ச்ல உக்காந்துருக்கேன் என்று இவன் கேள்வியையே கண்டு கொள்ளாதவராய் trackல் இருந்து விலகி ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்சில் உக்காந்தார்.

இருக்கிற குழப்பத்தில் வழக்கமா ஓடுற distance கூட ஓடல, ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு அவர் இருந்த பெஞ்ச் பக்கத்தில் போய் நின்னான். முகிலன் இன்னொரு முறை நீங்கள் யார் என்று கேட்பதற்கு முன்னரே சொன்னார் "நான்தான் அருள்மொழிவர்மன்" கை குலுக்கி ஹலோ சொல்லும் போதே அடுத்த அதிர்ச்சி கொடுத்தார், "சன் ஆஃப் பராந்தக சுந்தர சோழன்".

மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான், பார்க்க தெளிவாதான் இருக்கார் அப்புறம் ஏன் இப்படி கீழ்பாக்கம் கேஸ் மாதிரி பேசுறார்........"புரியலையே சார் நீங்க யாரு"......

"மேற்க்கே சாலுக்கிய பகுதியையும் தெற்க்கே சிங்களத்தையும் வென்ற அதே ராஜ ராஜன்தான்பா."

அய்யோ நாம நேத்து ராத்திரி ஒன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையே........, அவனையே கிள்ளி பாத்துகிட்டான் நிச்சயம் கனவு இல்லை இது. அந்த பெஞ்சை விட்டு விலகி நடந்தான், விடாமல் தூரத்தி வந்த அருள்மொழிவர்மன் நீ நம்பித்தான் ஆகணும்ப்பா என்று பேச்சை தொடர்ந்தார்.......... நம்ம சந்ததியர் எப்படி இருக்கிரார்கள்ன்னு பாக்கலாம்ன்னு வந்தேன், டைம் மெஷினில் தான் வந்தேன்.

டைம் மெஷினா.......டைம் மெஷினில் வேற பீரியடுக்கு போற மாதிரி நிறைய கதைகள் படிச்சிருக்கான், ஆனா அந்த டைம் மெஷினில் ராஜராஜன் தன்னை பார்க்க வந்ததா கனவு கூட கண்டதில்லையே..... நம்பியும் நம்பாமலும், நீங்க எப்படி இங்கிலீஷ்லாம் பேசுறீங்க, tracksuit shoesலாம் போட்டுருக்கீங்க என்றான்.

"ஏன்ப்பா டைம் மெஷின்னு எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னன்னா tracksuitன்னு சின்னபிள்ள தனமா பேசிட்டு இருக்க". முகிலனுக்கு இந்த பதில கேட்ட உடனே கொஞ்சம் அசிங்கமாயிடுச்சு, ச்ச்ச 1200 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு ஆளு நம்மள இப்படி அசிங்க படுத்துறாரே............ஐயோ நம்மளை அறியாமல் நாமளே நம்ப ஆரம்பிச்சிட்டோமோ??

நீங்க சொல்லுறத நம்பும்படியா இல்லையே என்றான் முகிலன்; "நான் உன்னோட futureக்கும் போயிட்டு தான் வந்துருக்கேன், அதுல நாளைக்கு நடக்க போற ஒரு விஷயத்த சொன்னா நம்புவியா"??

இதில் கொஞ்சம் logic இருப்பதாய் நினைத்து சரி சொல்லுங்க பாப்போம் என்றான்.

"நீ நாளை முதல் ABC Corp க்கு வேலைக்கு செல்வாய். அவ்வாறு நடந்தால் நாளை இரவு இதே பார்கில் இருப்பேன் வந்து பார்" சொல்லி விட்டு விறு விறு என்று ஓடி மறைந்தார்.

இவ்வளவு நேரம் நடந்த விஷயங்களில் குழம்பி இருந்தாலும், கடைசியாய் சொன்ன விஷயம் இம்மியளவு கூட நடக்க வாய்ப்பு இல்லாதலால், ஏதோ புத்தி பிசகிய ஒருவன் நம் காலை ஜாக்கிங்கை கெடுத்து விட்டான் என்று குழப்பமின்றி நடக்க ஆரம்பித்தான்.

வீடு வரை நடந்து வரும் போது பல யோசனைகள், யாரோ ஒருவன் எப்படி நம்முடைய பெயர்  அழைக்க முடியும். அதுவும்  உருவத்தையும் பேசிய தெளிவையும் வைத்து பார்க்கும் பொழுது பைத்தியம் போல் தெரியவில்லையே. ஆனால், அவர் சொல்வது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. XYZ Corpல் வேலைக்கு சேர்ந்து இந்த 12 வருடத்தில் வேறு எந்த ஒரு வேலைக்கும் விண்ணப்பித்தே இல்லை, அதுவும் இந்த ABC Corp  தன் XYZ Corp ன் போட்டி கம்பெனி என்ற காரணத்தினால் இந்த கம்பெனிக்கு மாறும் எண்ணம் இருந்ததே இல்லை.

காலை பார்க்கில்  நடந்த விஷயங்களை வீட்டில் அகல்யாவிடம் கூட சொல்ல வில்லை, சொன்னால் என்ன நினைப்பாள்.......இவருக்கு மூளை குழம்பிடுச்சின்னு சொல்லி ஊர்ல இருந்து எல்லாரையும் வர வச்சிருவா. இருந்தாலும் கேட்டே விட்டாள் அவள் "என்னங்க லூசு மாதிரி எங்கயோ பாத்துட்டு ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க....."; வேறு வழி இல்லாமல் நடந்ததை சொன்னான் முகிலன். "நினைச்சேன், நீங்க book exhibitionல இருந்து இவ்ளோ சுஜாதா புக்ஸ் வாங்கிட்டு வந்து படிக்கும் போதே இப்படி ஏதாவது ஆகும்ன்னு நினைச்சேன்". மனைவியின் இந்த பதிலை எதிர் பார்க்காத முகிலன் அவசரமாக இட்லியை முழுங்கி விட்டு ஆபீஸ்க்கு கிளம்பி ஓடினான்.

ஆபிஸ் வந்தது முதல் அதிக வேலை, நேற்று இரவு ரிலீஸ் செய்த சாப்ட்வேரில் நிறைய பிரச்சனைகள் இருந்தது என்று ஏகப்பட்ட மீட்டிங்கள், மீண்டும் ஒரு சாப்ட்வேர் இன்றே ரிலீஸ் செய்யணும்னு நிக்கிறான் அமெரிக்காகாரன். "டேய் ஒருமாசம் டைம் எடுத்து ரிலீஸ் பண்ணுன சாப்ட்வேர்க்கே ஓர் ஆயிரம் பிரச்சனை, இதுல எப்படிடா உடனே ரிலீஸ் பண்ணுறது" ஒரு வழியா அவன சமாளிச்சு ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் காலையில் இருந்து வந்த மெயில் ஒன்றும் படிக்கலை, சரி பரவாயில்லை, நாளை காலை பார்க்கலாம் என்று close பண்ணும் பொழுது ஒரு subject lineஐ படிக்கும் போதே கால்கள் வலுவிழந்தன. "Welcome to ABC Corp"............ பதட்டத்தை சரி செய்து கொண்டு, மீண்டும் இடத்தில் உட்கார்ந்து மெயிலை ஓபன் பண்ணி படிக்க படிக்க தலை கிர்ரென்று சுத்தியது.

"Dear Employees,

As per the ABC Corp's acquisition of XYZ Corp, ......................."

அப்படி என்றால் நான் நாளை முதல் ABC Corp employee, அதை விட முக்கியம் இன்று காலை நம்மிடம் பேசியது ராஜராஜ சோழனே. இதை நினைக்க நினைக்க படபடப்பு  கூடியது முகிலனுக்கு. வேண்டாம் இதை அகல்யாவிடம் சொல்லவே வேண்டாம், சொன்னால் கட்டாயம் மயக்கம் போட்டு விடுவாள். அன்று இரவு, மறுநாள் காலை பார்க், ஆபீஸில் நேரத்தை கடத்துவது யுகத்தை கடத்துவது போல் இருந்தது முகிலனுக்கு. சாயந்திரம் ஐந்து மணிக்கே பார்க்கிற்கு வந்து விட்டான், ஒவ்வொரு பெஞ்சா மாறி மாறி உக்காந்து ராஜராஜ சோழனை எதிர்பார்த்து இருந்தான் முகிலன்.

இப்பொழுது(இன்று இரவு) 

சரியாக ஏழரை மணிக்கு ராஜராஜன் வந்தார். முகிலன் அவரிடம் சார், உங்களை சார்ன்னு கூப்பிடலாமா அல்லது அரசேன்னு கூப்பிடவா. வேணாம்பா சும்மா சார்ன்னு கூப்பிடு.....நீங்கள்லாம் இப்ப குடியரசுல இருக்கீங்க, நானெல்லாம் உங்களுக்கு அரசன் கிடையாது.

தொடர்ந்து நிறைய கேள்விகள், சார் எப்படி அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை வென்றீர்கள், அந்த காலத்துலயே எப்படி அவ்வளவு பெரிய கோபுரத்தை கெட்டுனங்க, அது சரி டைம் மெஷினே கண்டு பிடிச்சிருக்கீங்க அப்புறம் கோபுரம் எல்லாம் ஈஸி தான். எதுக்கு இப்ப இங்க வந்தீங்க, எதுக்கு குறிப்பா என்னை செலெக்ட் பண்ணீங்க?? எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து, முகிலனின் படபடப்பு குறைய காத்திருந்தார்.

முதல்நாள் பேசியது போலே தெளிவான குரலில் பேச ஆரம்பித்தார், உன்னையும் இந்த இடத்தையும் தேர்ந்தெடுத்தது முறையில்லா வரிசை முறைப்படியே முடிவெடுத்தோம். முகிலனின் முகத்தில் குழப்ப ரேகையை படித்தவராய், அதான்ப்பா ரேன்டம் நம்பர் மூலமே உன்னை பார்க்கலாம் என்று தேர்ந்தெடுத்தோம். என்னை பொறுத்த வரை அந்த காலம், இந்த காலம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை எல்லாமே நிகழ் காலம்தான். அனைத்து நிகழ்வுகளும் நிகழ் காலம்தான், மனிதன் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயற்கையின் வேகத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறான், அதே மனிதன் இயற்க்கை வேகத்தை மீறி முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்ல முடிந்தால் அவன் தான் காலம் வென்ற கால இயந்திரம் ஆவான். முகிலனுக்கு ராஜராஜனுடன் இருக்கிறோம் என்பதில் இருந்த குழப்பத்தை விட அவர் சொன்ன தியரி ரொம்ப குழப்பமாக இருந்தது. மேலும் அவரே தொடர்ந்தார், அதாவது நாம் இப்பொழுது ஒரு பத்து நிமிடமாக பேசி கொண்டிருக்கிறோம், முதல் நிமிடம் பேசிய விஷயங்கள் இறந்த காலம் என்பாய் நீ, ஆனால் அந்த முதல் நிமிடமும் நிகழ் காலமே எனக்கு, ஏனென்றால் அந்த நிமிடங்கள் எங்கும் செல்ல வில்லை அது அங்கேயேதான் இருக்கிறது. அதை உணர்வதற்குரிய வாய்ப்பு நமக்கு அந்த தருணம் மட்டுமே தர பட்டது, அந்த வாய்ப்பை தேவையான நேரத்தில் பெற முடிந்தால் அவன்தான் கால இயந்திரம். சுருக்கமாக சொன்னால் நிகழ்வுகளை அழிக்க முடியாது, அதை மறைக்க மட்டுமே முடியும், அந்த மறைக்கும் பொருள் தான் காலம்.

என்ன சார், ஏதோ எல்லா விசயங்களும் protected folderல தான் இருக்கும், சூப்பர் யூசர் அட்மின் மட்டும் வாங்கிட்டா போதும் திருப்பி திருப்பி dataவ பாத்துக்கலாம்னு மாதிரி சிம்பிளா சொல்றீங்க. நீங்க சொல்லுறத பாத்தா, எதிர் காலம்ன்றதும் இப்பயே நடந்துகிட்டேதான் இருக்கு நாம தான் இன்னும் அந்த காலத்தை பார்க்க தகுதி பெறலைன்னு சொல்றீங்க கரெக்டா??

மிகவும் சரி.....என்னிடம் அந்த காலங்களுக்கு செல்ல வேண்டிய password இருக்கிறது.

ஓ, அப்படின்னா மார்ச் 29 2015 ஆம் தேதி நடக்க போறத கூட இப்ப தெரிஞ்சிக்கலாமா சார்??  2015 என்னப்பா 2800ல நடக்க போற விஷயத்தை கூட தெரிஞ்சிக்கலாம், ஆனா எதுக்கு 29 மார்ச்ன்னு  அந்த ஒரு தேதிய முக்கியமா கேக்குறப்பா?? சார், அது வந்து கிரிக்கெட் வேர்ல்ட் கப் பைனல் நடக்குற நாள், அன்னைக்கு மேட்ச்ல யார் ஜெயிச்சி கப் வாங்குறாங்கன்னு தெரிந்ச்சிகலாம்ன்னு தான்........என்று வழிந்துகொண்டே இழுத்தான் முகிலன்.

ரிசல்ட் தெரிஞ்சிகிறது என்ன, நீ ஏன் கூட வந்து அந்த மேட்சே பார்க்கலாம். முகிலனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை, "நானும் டைம் மெஷினில் பயணிக்கலாமா, அதுவும் நடக்க போற வேர்ல்ட் கப்பே பாக்கலாமா", கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சரி என்றான். நீ உட்கார்ந்திருக்கும் அதே பொசிசனில் உன் இடது உள்ளங்கையை என் வலது உள்ளங்கையில் வைத்து இந்த 18 மந்திரங்களையும் சொல் அதன் பின் இரண்டாவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா மெல்பெர்ன் மைதானத்தில் நாம் இருவரும் மேட்ச் பார்த்து கொண்டிருப்போம்.

முகிலனுக்கு தலை கால் புரியவில்லை, மனதிலே ஆயிரம் எண்ணங்கள், இன்றே 45 நாட்கள் கழித்து நடக்க இருக்கும் ஃபைனல் பார்க்கலாம். திரும்பி வந்து நண்பர்களிடத்தில் யார் கப் வெல்வார்கள் என்று பெட் கட்டலாம், அய்யோ யாரும் புக்கிகள் இந்த விஷயமறிந்து நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தால்..., யாரிடமும் சொல்ல கூடாது, அகல்யாவிடம் மட்டும் சொல்லலாமா??, வேண்டாம், அவளிடம் சொல்வதும் ஒண்ணுதான் facebook அல்லது whatsappல் போடுவதும் ஒண்ணுதான்........  "ம்ம் கவனம், நான் சொல்வதை தவறில்லாமல் திரும்ப சொல்" என்ற ராஜராஜ சோழனின் குரலால் நினைவலையில் இருந்து  திரும்ப வந்தான்.

மந்திரத்தை சொல்வதற்கு தயாராகி கொண்டான், கண்களை மூடி கொண்டு, அவர் சொல்வதை அப்படியே சொல்லி கொண்டிருந்தான்.........இருந்தாலும் மனக்குரங்கு திரும்ப வேறு எண்ணங்களை எண்ண ஆரம்பித்தது......ஐயோ அகல்யாட்ட கூட சொல்லாம கிளம்பிட்டோமே, ஒரு வேலை திரும்ப வர முடியலைன்னா.....ச்சீ ச்சீ அப்படில்லாம் நடக்காது இவர் ராஜா நம்மள அப்படிலாம் விட்டுற மாட்டாரு, சரி ஒரு வேலை இப்ப அகல்யா call பண்ணா நமக்கு ரிங் வருமா, ஆஸ்திரேலியால airtel எடுக்குமா, ஒரு வேலை அங்க போலீஸ் யாரும் பாஸ்போர்ட் விசா கேட்டாங்கன்னா என்ன பண்ணுறது....ஐயோ இதை எதையும் யோசிக்காம மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்சிடோமே........இவன் கவனத்தை திருப்ப கைகளில் நறுக்கென்று கிள்ளியது போல் இருந்தது, ரோலர் கோஷ்டரில் சுத்தி பாதியில் தள்ளி விட்டது போல் இருந்தது....மெதுவாக கண்ணை திறந்தான் flood lights கண்ணைக்கூசியது, ஐயோ பிட்ச்சில் மல்லாக்க படுத்து கிடக்கிறோமோ, ச்சீ அம்பயர் பாக்குறதுக்கு முன்னாடி எந்திருச்சி ஓடிருவோம், என்ன ராஜராஜன் வெள்ளை கோர்ட் போட்டு நிக்கிறாரு....யோசித்து கொண்டே எழுந்திருக்கும் போதே அகல்யா தோளில் தட்டி எழுந்திரிக்க விடாமல் தடுத்தாள் .........இவ எப்படி ஆஸ்திரேலியா வந்தாள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அழுகையுடன் அவள் முப்பாத்தம்மனுக்கு நன்றி சொல்லிகொண்டிருந்தால். ஓ அது flood lights இல்லை, ICUல் சைடில் இருக்கும் விளக்குகள், சுற்றி இரண்டு நர்ஸ்கள் வெள்ளை அங்கி அணிந்தது டாக்டர்...................

"எப்படிங்க இருக்கு இப்ப உடம்புக்கு, ஒரு  வாரமா வேண்டாத தெய்வமில்லை, அந்த ஆத்தா கருணை தான் உங்கள காப்பத்திருக்கு. கோமாவிலிருந்து எந்திரிக்க வச்ச அந்த ஆத்தா மகிமையே தனி தான். இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சா இருந்தா என்ன......, மேட்ச் பாக்கணும் அதனால ஆபீஸ் வர முடியாதுன்னு சொல்லிருக்கணும் அல்லது வேலை தான் முக்கியம்ன்னா, போய் வேலையை பார்க்க வேண்டியதுதான.........அது விட்டுட்டு மேனேஜரை திட்டிகிட்டே ஸ்கோரும் கேட்டுட்டு வண்டிய ஓட்டிட்டு போனா இப்படிதான் தண்ணி லாரில விட்டுட்டு........." அதுக்கு மேல அவளால பேச முடியாம அழுக ஆரம்பிச்சிட்டா.

அடுத்த ஒருவாரம் ஹாஸ்பிடல் லைஃப், சொந்த பந்தங்கள், நண்பர்கள் வருவதும் விசாரித்து விட்டு செல்வதுமாய் இருந்தது. உடம்பும் நல்லா தேறி இருந்தது, நாளைக்கு டிஸ்சார்ஜ்........அலுவலக நண்பன் முகேஷ் வந்து இன்சூரன்ஸ் ஃபார்ம்ஸ், பில்ஸ் எல்லாம் வாங்கி சென்றான். பரவாயில்லை மாப்ள மெடிக்கல் லீவ் இன்னும் extend பண்ணிக்கோ, மெதுவா ஆபீஸ் வா என்று சொல்லி கெளம்பினான், செல்லும் போது ஏதோ ஞாபகம் வந்தவனாய், டேய் மாப்ள நம்ம கம்பெனியை  நேத்து ABC corp வாங்கிட்டாங்க டா............

7 comments: