Friday, January 16, 2015

1000 ரூபாய் நாணயம்

[இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 13 நிமிடங்கள் ஆகும்]

அமெரிக்காவில் பிறந்ததனால் பாதி அமெரிக்கனாகவும், பெர்மனெண்ட் ரெசிடென்ட்சிப் வாங்கியும் இன்னும் இந்திய பாஸ்போர்ட் கேன்சல் பண்ணாத பெற்றோரால் மீதி இந்தியனாகவும் இருக்கும் இனியனுக்கு, தான் அமெரிக்க இந்தியனாக இருப்பதில் இந்த முப்பத்தேழு வருடத்தில் முதல் முறையாக பெருமையாக இருந்தது.

பள்ளிக்கரணையில் இருக்கும் "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில்" இருந்து சிறப்பு வேலை அழைப்பு வந்ததற்கு, தன் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி அனுபவம் மட்டும் காரணமில்லை, இந்திய விசா ஈசியாக  கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இல்லையன்றால் தன்னை விட திறமையான சீனாவை சேர்ந்த தன் ப்ராஜெக்ட் பார்ட்னெருக்கு அல்லவா இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முதல் பயணம் ஏர் இந்தியா விமானத்தில்; வெளிப்புறம் முழுவதும் உள்ளயே தெரியும் படியாக இருக்கும் ஷீத்ரூ விமானம். மெல்லிய கண்ணாடி நுண்ணிளைகளால் வடிவமைக்கப்பட்ட ஃப்யூஸ்லேஜ். மேககூட்டங்களுக்கு நடுவில் அந்தரத்தில் தனியாக பறப்பது போன்ற ஓர் உணர்வு. Detroitல் இருந்து கிளம்பிய ஆறாவது மணி நேரத்தில் இந்திய எல்லை பரப்புக்குள் நுழைந்தது விமானம். கால்களுக்கிடையில் கீழே பார்த்தால் அடர்ந்த காடுகள், ஒவ்வொரு இரண்டு மூன்று நிமிடம் கடக்கும் போதும் பசுமை காடுகளுக்கிடையில் தெரியும் சிற்சில கான்க்ரீட் காடுகள்;

செங்கல்பட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கியதும் தாய் மண்ணில் கால் வைக்கும் பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே அம்மாதிரி எந்தவித சிலிர்ப்பும் இல்லை. "ஒரு வேலை நாம் அரை இந்தியன் கூட கிடையாதோ" என்று நினைக்க தோன்றியது. "இது என்ன பிதற்றல்", இறங்கும் இடத்துக்கு ஏற்றார்போல வெப்பநிலையை விமானத்துகுள்ளும் கொண்டிருந்ததால் எந்த சிலிர்ப்பும் இல்லை என்று அறிவியல் அறிவு சமாதானபடுத்தியது.

ஒரு மாத வேலை மட்டுமே ஆதலால் அதிக லகேஜ் இல்லை. இங்கிருந்து ஹோட்டலுக்கு செல்லுவதற்கு எந்த ரயில் செல்லும் என்று கைபேசியின் இயங்கு ஸ்க்ரீனில் தேட ஆரம்பித்தவுடன் ஒரு புது மெசேஜ், "உங்கள் விமான டாக்ஸி 400மீ தூரத்தில் உங்களுக்காக வெயிட் செய்கிறது". திரையில் வந்த திசையில் நடந்த்ததில் சரியாக 400மீ தூரத்தில் ஒரு பெரிய ட்ரோன் ரக இருவர் அமரும் விமானம். ஏறி உட்கார்ந்ததும் இன்னொரு மெசேஜ், "செக்குடு இன்டு  தாய்வீடு இன்ன்". எனது புன்னகையை படித்தவாராய் பைலட், "சார் உங்கள் செக்குடு டைம் இங்கிருந்தே கணக்கிடப்படும்" என்றார். இம்முறை ஒரு பெரிய புன்னகை செய்தேன், "நீங்கள் டிப்ஸ் மட்டும் ரூ1000 தந்தால் போதும் சார் டாக்ஸி பில் ஹோட்டல் பில்லோடு சேர்த்து கொள்ளப்படும்" என்றார், அதோடு என் இதழ்கள் புன்னகை பூக்கவில்லை.

இரவு நல்ல தூக்கம்; காலை ஹோட்டலில் இருந்து ரயிலில் வேளச்சேரி ஸ்டேஷன் வந்து இறங்கி அங்கிருந்து மிதிவண்டி மூலம் ஆராய்ச்சி கூடம் வந்தாகிவிட்டது. "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி" இருப்பது வேளச்சேரி முதல் தாம்பரம் வரை உள்ள மெட்ராஸின் நீளமான பசுமை சாலையில். இச்சாலையின் இடையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் நன்மங்கலம் காப்பு காடு, இதை தவிர சிறு சிறு குடி இருப்புகள் இருந்தாலும் இயற்க்கை மாறாமல் பாதுகாக்கப்படும் சிறப்பு பகுதி. அனைத்து மோட்டார் வாகனங்களும் தடை செய்யப்பட்ட பகுதி. மூவாயிரம் அடி உயரத்தில் செல்லும் புல்லெட் ரயில் தவிர அந்த பாதையில் மிதிவண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. மெட்ராஸில் மக்கள் தொகையை விட மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகம் என்று படித்ததற்கு விளக்கம் இப்போது கிடைத்தது. அவசர நேரங்களில் இயங்கும் இருவர் செல்லும் விமானம் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும்  அனுமதி இல்லை.

நுழைந்த நொடி முதலே வேலை; புது டீம், புது வேலை, அறிமுகம் என்று எந்த சிறு வினாடியையும் வீணடிக்கவில்லை. ஒரு விதத்தில் எல்லோருமே அறிமுகமானவர்கள் தான். இந்த பத்து ஆண்டுகளில் சில கருத்தரங்குகளில் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம். ஆதலால் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாய் இருந்தனர். ஒரு விதத்தில் இயற்கையை கொண்டு இயற்க்கை சீரழிவை தடுக்கும் திட்டம்; இது காற்றின் திசை மற்றும் வேகங்களை ஆராய்ச்சி செய்யும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி கூடம்; கடந்த 200 ஆண்டுகள் dataவை கொண்டு ஆராய்ச்சி செய்யும் கூடம். உலகின் அதி உயர காற்று பிடிப்பான்கள், கடலுக்கடியில் காற்றின் தீவிரம் ஆராயும் அதி நவீன கருவிகள். மற்றும் உலகின் தலை சிறந்த காற்று ஆராய்வாளர்கள் மத்தியில் வேலை செய்வது மிகவும் சந்தோசமாக இருந்தது இனியனுக்கு.

இந்த இரண்டு வாரங்களில் ஹோட்டல், ஆராய்ச்சி கூடம் இதை தவிர வேறு எங்கும் வெளியே செல்லவில்லை. வேலையும் சரியாக இருந்தது. இடையிடையே அம்மா போனுக்கு பதில் சொல்வதை தவிர, அம்மாவின் பெரும்பாலான விசாரிப்புகள் வேளச்சேரி, OMR சாலை பற்றியே இருக்கும். ஆனால் அவள் காட்சிபடுத்திய எதுவுமே இங்கு இல்லை என்று கூறும்போது ஒரு சிறு கவலை அவள் முகத்தில் தெரியும். ஆனாலும் அடுத்த வினாடியே அவளுக்கு ஞாபகத்தில் இருக்கும் தி.நகர் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுவாள். பிராண்டிங் என்ற காரணத்தை சொல்லி சென்னையை மெட்ராஸ் என்று மாற்றியதில் இந்த மக்களே ஏற்றுக்கொண்டு விட்டாலும் அம்மாவால் மட்டும் ஒத்து கொள்ளமுடியவில்லை. அவள் இங்கு இருந்த போதே இந்த ஆராய்ச்சி கூடம் இதே இடத்தில் இருந்தது என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை.

இந்த மாதிரி வேலை அதிகம் உள்ள நாட்களில், Detroitல் இருந்த போது Erie lakeன் கரையில் நடந்தால் சில மணி துளிகளில் அலுப்பு தீரும். அதே போல் இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று வாட்ச்மேனை கேட்ட உடன் சிரித்து கொண்டே சார் கொஞ்சம் வெளிய போய் பாருங்க என்று சொன்னார். வெளியே வந்து இடது பக்கம் திரும்பி 200மீ நடந்தால் ஒரு சிறு நடை மேடை, அதை தாண்டினால் பறவைகள் சரணாலயம் என்று ஓர் பேர் பலகை. ID கார்டுடன் சென்றதால் அனுமதி இலவசம். ஏரிக்கு நடுவே 500மீ நடந்த உடன் அவ்வளவு பறவைகள், இது வரை இவ்வளவு விதமான பறவைகளை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை. க்ர்ரீச் கீச் கீம் என்று ரீங்கார சத்தம் மட்டுமே. 45சதுர கிமீ அளவு பரப்பளவில் இருக்கும் சதுப்புநிலபகுதி அதில் பார்வையாளர்கள் நடந்து செல்ல ஏதுவாக குறுக்கு நெடுக்காக 13கிமீ நீளத்துக்கு இரண்டு பாதைகள். வேலை அலுப்பு இருக்கிறதோ இல்லையோ அன்று முதல் தினமும் ஒரு மணி அங்கேயே பொழுதை போக்கினார் இனியன்.

மூன்றாவது ஞாயிறு இன்று, அடுத்த ஞாயிறு மீண்டும் அமெரிக்கா; இது வரை எங்கும் வெளியே செல்லவில்லை, இன்றும் வெளியே செல்லும் எண்ணமில்லை. உடன் வேலை செய்யும் ஜெர்மன் இஞ்சினியர்கள் அனைவரும் தி.நகர் ஷாப்பிங் சென்று விட்டார்கள். அறுபது வயது அம்மாவை தவிர தனக்கென்று வேறு யாரும் இல்லை. அவளுக்கும் இது போன்ற ஷாப்பிங் பரிசு பொருள்களில் ஈடுபாடு இல்லை. வேறு ஏதாவது வித்தியாசமான அல்லது பாரம்பரியமான பரிசு பொருள் கொண்டு செல்ல விரும்பினார்.

ஹோட்டலில் இருந்து மிதி வண்டியில் ரயில் நிலையம் முடிய வந்து வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒரு பழைய பாதையில் நடக்க ஆரம்பித்தார், இன்றைய பிளாஸ்டிக் சாலைகளுக்கிடையில் இந்த ஒதுக்கப்பட்ட சாலை கொஞ்சம் குப்பை கூளங்களுடன் வித்தியாசமாக இருந்தது. அப்படி ஒரு குப்பையை தாண்டி நடக்கும் போது ஓரமாக ஒரு மெல்லிய வெளிச்சம், குப்பையை ஒதுக்கி எடுத்தால் அது ஒரு ஆயிரம் ரூபாய் நாணயம். அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்த நாணயத்தை எடுத்து தன் கைகுட்டையில் சுத்தம் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டார். அம்மாவின் coin கலெக்ஷனில் இந்த 1000ரூ நாணயம் இருக்க வாய்ப்பில்லை. இதையே பரிசாக கொடுத்தால் ரொம்ப சந்தோசபடுவாள். மேலும் நடந்து கொண்டே யோசிக்க ஆரம்பித்தார், தான் இதுவரை படித்த இந்தியாவிற்கும் இங்கே காண்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை.  இயற்கையும் செயற்கையும் சம விகிதத்தில் கலந்து செய்த இன்றைய இளைஞர்களின் கனவு தேசம். பத்து ட்ராக்குகளில் செல்லும் பறக்கும் ரயில்கள். இன பாகுபாடு இல்லாமல் எல்லா நாட்டவரும் வாழக்கூடிய சூழ்நிலை. வானுயர வளர்ந்த கட்டிடங்கள், தன் கழிவுகளை தானே சுத்தம் செய்து மறுசுழற்சி செய்யும் தன்னிறைவு பெற்ற கட்டிடங்கள். இவை அனைத்திற்கும் வெகு அருகாமையில் விவசாயமும் நடந்தன. உலகின் 60% சதவிகித உணவு தேவையை இந்தியாதான் பூர்த்தி செய்கிறது.

மெதுவாக நடந்தாலும் எண்ணங்கள் வெகு வேகமாக பின்னோக்கி சென்றன. தன் இரண்டாவது வயதில் ஒரு முறை இந்தியா வந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், தனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதுகளில் அப்பா சொன்ன இந்தியா இப்போது இல்லை. அக்காலங்களில் வளரும்  நாடுகளின் பட்டியல்களின் முதல் நாடாக இருந்தது. ஆனால் அதற்காக நாற்பது ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பெண்கள் பாதுகாப்பில் கடைசி, ஊழலில் முதலிடம், பிச்சைகாரர்களை கூட ஒழிக்க முடியாத நாடக இருந்தது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் உலகில் நடந்த பல இயற்கை மாற்றங்களும் இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாயின. வட அரை கோளத்தில் இருக்கும் மேலை நாடுகள் பல அழிந்தே விட்டன, மீதமிருக்கும் சில நாடுகளும் எந்தவித கனிம வளங்களும் இல்லாமல் மத்தியதர நாடுகளின் உதவியால் வாழ்ந்து கொடிருக்கின்றன. தண்ணீருக்காக நடக்க விருந்த நான்காம் உலக போரை இந்தியா வெகு சாமர்த்தியமாக நடக்காமல் சமாளித்து உலகின் எழுபது சதவிகித நாடுகளை தனது நட்பு நாடாக்கிகொண்டது. மேலும் சில நல்ல கொள்கை முடிவுகளால் இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றிகொண்டது. இருந்தும் கணிப்பொறி தவிர வேறு எந்த துறைகளிலும் கவனம் செலுத்ததால், அனைத்து ஆராய்ச்சி துறைகளுக்கும் மேலை நாடவர்களையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது. ஆதலால்தான் முடிந்த அளவுக்கு இந்திய வம்சாவளியினர்க்கே வாய்ப்புகளை வழங்குகிறது.

அரை  மணி நேர நடையில் வெகு தூரம் நடந்திருந்தேன், இருட்டியும் விட்டது. வரும்போது இருந்த அமைதி இப்போது இல்லை, பரிச்சயம் இல்லாத மனிதர்கள் சிறு சிறு கூடாரங்கள் அடித்து கொண்டிருந்தனர். கூடாரத்தில் வெளியில் உட்கார்ந்திருந்த இருவர் தன்னை காட்டி ஏதோ சைகையில் பேசியது போல இருந்தது, அனிச்சையாக கால்கள் வேகமாக நடந்தன, முகத்தில் முத்து முத்தாக இருந்த வேர்வை துளிகள் மனதில் இருந்த பயத்தை வெளி காட்டியது. ஓட்டமும் நடையுமாக வந்து ரயில்வே ஸ்டேஷனின் மறு முனையை அடைந்த உடன் தான் நிம்மதியாக இருந்தது. ரூமுக்கு வந்தவுடன் முதல் வேலையாக அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த அனுபவத்தை சொன்னனேன். "பிச்சைகாரர்களாக இருக்கும், இதுக்கு போய் பயபடுவார்களா" என்று கூறி சிரித்தாள். மேலும் அவள் சிரிப்பில் தான் காட்சி படுத்திய ஒரு விஷயமாவது இருக்கிறது என்ற பெருமை இருந்ததாக தெரிந்தது.

அடுத்த ஒரு வாரமும் சரியான வேலை, அடுத்த இருபது ஆண்டுகளில் வங்காள விரிகுடாவை தாக்கவிருக்கும் மூன்று சுனாமிகளுக்கும் தடுப்பு திட்ட வடிவம் முழுமையடைதிருந்தது. கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் எவ்விதமான மரங்கள் நடப்பட வேண்டும் அதை எவ்வளவு உயரம் செங்குத்தாக வளர்க்க வேண்டும், எவ்வளவு கான்க்ரீட் தூண்கள் அமைக்க வேண்டும், இவைகளால் சுனாமியின் தாக்கம் எவ்வளவு மட்டுப்படும் போன்ற விசயங்களுடன் கூடிய ரிப்போர்ட் சமர்ப்பித்தாகிவிட்டது. நாளை மீண்டும் டெட்ராய்ட் அமெரிக்கா.

காலை ஹோட்டல் மாடியில் அதே விமான டாக்ஸி மற்றும் அதே பைலட். ஏர்போர்ட்டில் இறங்கிய வினாடி "செக்குடு அவுட் ஃப்ரம் தாய் வீடு இன்ன்" மெசேஜுடன் 1லட்சம் INR க்ரெடிட்டர்டு என்ற செய்தியும் வந்தது. பைலட்டுக்கு நன்றியுடன் ஒரு புன்முறுவல் செய்தார். கோர்ட்டை மாட்டியபடியே   ஏர்போர்ட் வாசல் நோக்கி நடந்தவர் ஏதோ யோசித்தவராய் பின்னோக்கி வந்தார். தன் கோர்ட் பையில் இருந்து அந்த 1000ரூ நாணயத்தை எடுத்து வாசலில் அமர்ந்திருந்த பிச்சைகாரர் ஒருவரிடத்தில் போட்டு விட்டு விறு விறுவென உள்ளே சென்றார்.