Saturday, October 25, 2014

விமர்சனங்கள் (விமர்சகர்கள்)

 [இந்த பதிவை படித்து ரசிக்க சராசரியாக 2.5 நிமிடங்கள் ஆகும்]

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் மிகவும்  விமர்சிக்கப்பட்ட(கேலி செய்யப்பட்ட) இரு வெவ்வேறு நபர்கள்,
 நீயா நானா கோபிநாத்
அஞ்சான் டைரக்டர் லிங்குசாமி

தனது talk show ல் மருத்துவ தொழிலிலை மிகவும் கேவலமான கருத்து தெரிவித்ததர்க்க்காக கோபிநாத்தையும், ஓடாத ஒரு படத்தை பற்றி படம் வருவதற்கு முன்னரே கொடுத்த பில்ட் அப் க்காக லின்குசாமியையும் எவ்வளவு ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டிருக்காங்க.

சமூக வலைத்தங்கள் தங்கள் பணியை வெகு சிறப்பாக செய்து  இந்த கேலி கிண்டல்களை வலைத்தளங்களில் பரப்பின. ஆனால் ஏனோ லிங்குசாமியின் கிண்டல் பதிவுகளை போல் கோபிநாத் பற்றிய ஆடியோ பதிவை ரசிக்க முடியவில்லை.

ஏனென்றால், லிங்குசாமியின் படைப்புகளை அந்த பதிவுகள் விமர்சிக்க வில்லை, மாறாக அவரின் பேட்டியை(மொத்த வித்தையை இறக்குனதை......) மட்டுமே விமர்சித்தன. அவரின் பழைய படங்களை பற்றியும் இந்த அஞ்சான் படத்தை பற்றியும் கூட ஒரு கருத்தும் சொல்லவில்லை, கிண்டல் பதிவுகளின் குறிக்கோள் அவருடைய பேட்டியை மட்டுமே தாக்குவதாக இருந்ததது.

ஆனால், கோபிநாத் பற்றிய ஒரு ஆடியோ பதிவு (ஒரு டாக்டர் தயாரித்தது ) , கோபிநாத் என்ற ஒரு தனி நபரையும் அவர் சார்ந்த விஜய் டிவியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்க பட்டது. இது மருத்துவ தொழிலை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக இது பதில் பதிவா?? ஏன் இவ்வாறு வேறு எந்த தொழிலையும் யாரும் விமர்சித்து கருத்து சொன்னது இல்லையா, போலீஸ் தொழிலையும், கால் சென்டர் வேலையும் இது வரைக்கும் talk show ல் விமர்சித்தது விட இது ஒன்றும் மோசமாக விமர்சிக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு போலீஷோ அல்லது கால் சென்டர் employeeஓ கீழ்த்தரமான மறுப்பு விமர்சனம் கொடுத்ததும்  இல்லை. அந்த ஒரு ஆடியோ பதிவு மட்டும் இல்லை, இது போன்ற நிறைய வீடியோ பதிவுகள் youtubeலும்(ஆனால் அது எல்லாம் கொஞ்சம் நாகரிகமாகவே இருந்தது). இதை எல்லாம் வச்சி பார்க்கும் போது டாக்டர்ஸ் இந்த நிகழ்ச்சிய இவ்ளோ நாள் ரொம்ப பர்சனல்லா ரசிச்சி பாத்திருபாங்கன்னு நினைக்கிறேன்.

Talk showவ, ஷோவா மட்டுமே பாத்திருந்தா இவ்வளவு காட்டம் இருந்திருக்காது, அத விட்டுட்டு கோபிநாத்தை ஒரு புரட்சியாளனாகவும், தலைவனாகவும், இவ்வளவு நாள் கொண்டாடிட்டு நமக்கு எதிரா ஒரு கருத்து சொன்னா இப்படிதான் கோபம் வரும். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு டாக்டர் விஜய் டிவி யின் எல்லா ப்ரோக்ராமையும் விடாம பாக்குறதுக்கு டைம் இருந்த்துருக்குமா?? ஏன்னா அந்த ஆடியோ பதிவு ஒரு ப்ரோக்ராம் விடாம எல்லாத்தையும் பாத்திருந்தா மட்டும்தான் இவ்வளவு விமர்சிக்க முடியும்.

இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் லிங்குசாமியை விமர்சித்தது அனைவரும் engineerகள்(கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பவர்கள்), கோபிநாத்தை விமர்சித்தவர்கள் டாக்டர்கள். ஒரு வேலை இதை அந்த டாக்டர் ஒரு engineerட்ட outsource பண்ணிருந்தா நகைச்சுவையாகவோ நாகரிகமாகவும் விமர்சித்திருந்திருக்கலாம்.

இந்த பதிவு வெறும் நகைச்ச்வைக்காக எழுதப்பட்ட என் தனிபட்ட  கருத்து மட்டுமே(குறிப்பாக டாக்டர்களை கிண்டல் அடிப்பதற்காக அல்ல ), அப்புறம் யாரவது ஒரு டாக்டர் இத படிச்சிட்டு blog எழுதும் மொத்த எஞ்சினியர் சமுதாயத்தையும் கிண்டல் அடிச்சி நீங்க கட்டுன பாலம் ஒழுங்கா நிக்குதா, கட்டிடம் இடியாம நிக்குதா, அல்லது  SW defect இல்லாம இருக்கன்னு மறு பதிவு போட்டுற போறாங்க.











Sunday, September 21, 2014

ஓர் இரவு வாழ்க்கை...


[இந்த பதிவ படித்து முடிக்க சராசரியாக நாலு நிமிடங்கள் ஆகும் ]



நடுநிசி இரவு பன்னிரெண்டு மணி, ஆள் அரவம் இல்லாத அந்த அறையில் யாரோ தன்னை பேர் சொல்லி அழைப்பது போல் கேட்டது.

ராம்,
டேய் ராம்,
டேய் ராம் எந்திரிடா...........

சரி சரி இது ஏதோ, ராஜா ராணி....., ஒரு ஊர்ல ஒரு பெரிய........ இப்படி ஏதோ ராமு, சோமு கதைன்னு நினைக்க வேண்டாம். இது மின்னணு உபகரணங்களில் இருக்கும் வன்பொருள், மென்பொருள்களுக்கு இடையில் நடக்கும் சிறு உரையாடல்.

அய்யோ......தமிழ் பதிவுன்னு சொல்லிட்டு இப்படி எழுதுனா எப்படி புரியும் உங்களுக்கு? இதோ தமிழ்லேயே சொல்லுறேன். electronic gadgetsல்  இருக்கும் hardware மற்றும் software பேசிக்கொள்ளும் சிறு உரையாடல்.

RAM,
டேய் RAM,
டேய் RAM எந்திரிடா........

RAM :  என்னடா EEPROM, என்னைய கொஞ்ச நேரம் கூட தூங்க விட மாட்டியா? நான் உன்ன மாதிரி ஒண்ணும் வெட்டி பய கிடையாது, நேத்து fulla ஒரே வேலை.....இந்தா beer அடிச்சிட்டு தூங்கிட்டு இருக்கானே இந்த நாதாரி ஒரு program கூட விடாம எல்லாத்தையும் download பண்ணி வச்சிக்கிட்டு எல்லா programயும் நோண்டிட்டே இருக்கான். இதுல இடைல whatsapp, facebook சாட்டிங் வேற. ஒரு நிமிஷம் என்ன தூங்க விட மாட்டேங்குறான்.

EEPROM alias NVM  : சரி சரி அப்படியே சைக்கிள் கேப்ல உன் புகழ் பாடுற பாத்தியா!!! charge போயிட்டாவது நீ தூங்கிக்கலாம், ஆனா என்ன பாரு இந்த phoneஐ தூக்கி கட்டைல போறது முடிய நான் வேலை பாத்தாகணும்.

ROM alias FLASH : டேய் மாப்பிளைகளா, என்ன ஓவரா உங்க புகழாவே பாடிட்டு இருக்கீங்க, நான் இல்லன்னா அப்புறம் உங்களுக்கு எதுடா வேலை!!! எல்லா programயும் ஸ்டோர் பண்ணிட்டு நான் எவ்ளோ அமைதியா வேலை செய்றேன்.

ROM : இதுல இந்த பய புள்ள திடீர்னு எதாவது OS version மாத்துரேன்னு புது OS install பண்ணுவான் அப்புறம் factory reset பண்ணுறேன்னு எதாவது சொதப்பிட்டு திருப்பி flash பண்ணுவான்.

NVM : ஆமா அப்போ configuration சொல்லிட்டு எனக்கும்தான் வேலை இருக்கும்.


RAM: ஹலோ, எங்களையும் தான் download speed சரியல்லைன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. நான் மட்டும் speedஆ ரைட் பண்ணலைன்னா உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.


(அப்போ அங்க இன்னொரு சத்தம் கொஞ்ச கட்ட குரல்ல......என்னடா அங்க சத்தம் .....................பேசினது வேறு யாரும் இல்ல நம்ம CPU தான்)

RAM/ROM/NVM (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டிருந்தோம்........

RAM : ஆமா CPU ன்னா இவர் மட்டும் என்ன கொம்பா?? இவனும் நம்மள மாதிரி வெறும் memory தாண்டா!!! program counter, stack , ALU, registers அப்படின்னு வேற வேற பேர் வச்சிட்டு இருக்கான், ஆனா எல்லாமே memory தான்.

(CPU யோட கட்ட குரல் நம்ம ANDROID யும் எழுப்பி விட்டுருச்சு)

ANDROID: சரியா சொன்னடா, நீங்கல்லாம் வெறும் memory தான். உங்களுக்கு dataவ கொடுத்து உங்கள வேலை செய்ய வைக்கிறது நாங்கதான்.

NVM : அப்பு, நீ வெறும் program தான், உன்ன மாதிரி தான் windows ன்னு ஒருத்தன் பெரிய படம் போட்டுட்டு இருந்தான் இப்ப அவன் நிலைமைய பாத்தில....

ANDROID : அய்யோ, வெளிய இருக்குறவன் தான் விவரம் தெரியாம பேசுறான்னா நீயுமா?? நானோ windows, linux , iOSஓ ....இன்னும் எத்தனை programஓ......எல்லாம் compile பண்ணி build பண்ணிட்டா வெறும் zeroes and ones மட்டும்தான். நீங்க எல்லாம் அந்த zeroes and ones வச்சி output தர்ற வெறும் memory device அவ்ளோதான்.

ROM : சரி சரி இத சத்தமா சொல்லாத, அப்புறம் இந்தியாகாரன்லாம் zeroவ கண்டுபிடிச்சது இந்தியன்தான் சொல்லி ஒரு postingஅ போட்டு அதுக்கும் லைக் போட்டு நம்மள இன்னும் கொன்னு எடுப்பாங்க.

RAM/ROM/NVM (கோரஸாக):ஹா ஹா ஹா ...........

ANDROID : ஏய் அவனுங்கள லைக் வாங்குறதுக்கு மட்டும் வேலை செய்யும் ஆளுகன்னு தப்பா நினைச்சிடாத, நம்ம சொல்லுற சாதாரண zeroes and ones வச்சி எவ்ளோ achieve பண்ணிருக்காங்க தெரியுமா??

ROM : ஓ தெரியுமே!!!இந்தா  நமக்கெல்லாம் உயிர் வந்து பேசிக்கிற மாதிரி இந்த program எழுதுனது கூட மப்பு கலைஞ்சும், இன்னும் தூங்கிட்டு இருக்கனே இவன்தான் பெரிய ஆள்தாம்ப்பா.

NVM : டேய்  நம்ம பேசிக்கிற சத்தம் கேட்டு இவன் எந்திரிக்கிற மாதிரி இருக்கு.

ANDROID : அய்யோ, எதுக்கு எல்லா file யும் select பண்ணுறான்?? ஐயையோ இவன் விரல்கள் shift + del அமுக்..............


NVM: ஆ ஊ ~வ ஃ க்கோ @##$$%^&&**((((







Sunday, September 7, 2014

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்எண்னை மற்றும் தீபாவளிக்கு டால்டா வாங்கியவர்கள்;

பஞ்சாயத்து டிவில் ஒலியும் ஒளியும் மற்றும் ஹிந்தி படம் பார்த்தவர்கள்;

வருடம் முழுதும் டவுன் பஸ்ஸில் மட்டுமே சென்றாலும்  குடும்பத்துடன் துணிக்கடை செல்லும் நாட்களில் மட்டும் பந்தாவாக சைக்கிள் ரிக்சாவில் சென்றவர்கள்;

பொருட்காட்சியில் முதன்முதலாக  ஒரு சிக்கன் 65 வாங்கி குடும்பமே பங்கிட்டு சாப்பிட்டவர்கள்;

டூயுவில் சட்டர் போட்ட சாலிடர் டிவி வாங்கி, வரும் ஞாயிறு என்ன படம் என்று  சொல்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிரொலி பார்த்தவர்கள்;

ஒரு முறை  சென்னை சென்று வந்ததையே வருடம் முழுதும் பேசியவர்கள்;

எஞ்சினியரிங் என்றால் சிவில் எஞ்சினியர் மட்டுமே நினைத்தவர்கள்;

ஐந்து வருடத்திற்கு முன் எழுதி வைத்த போன் கனெக்ஷன் கிடைத்த  மகிழ்ச்சியில் எல்லா சொந்தத்துக்கும் பேசி விட்டு மாத கடைசியில் பில் வந்ததும் போனுக்கு பூட்டு போட்டவர்கள்;

மற்றும் இது போல் பலரை காணவில்லை. இவர்களிடத்தில்  காசு பணமிருந்ததில்லை அதே நேரத்தில் கவலையும் இருந்தததில்லை.

                  இவர்கள் எப்பொழுது முதல் காணாமல் போனார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. வேலை,பணம், குடும்பம் தேடுதல்  மற்றும் கால ஓட்டங்களில் காணமல் போயிருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது, இறுதி 90களில், மற்றும் உலகமயமாக்கல் பொருளாதர வளர்ச்சியில் காணாமல் போயிருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற விவரமே வேலை வெட்டி இல்லாத நேரங்களில் அல்லது டிவியில் பட்டிமன்றம் பார்க்கும் போது  மட்டும்தான் தெரிய வரும். மற்ற நேரங்களில் இவர்களை தேடக்கூட ஆள் இருக்காது. இவர்களை  பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, அளவுக்கு அதிகமாக பணமிருந்தும் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காத(அல்லது ஒதுக்காத) எவரிடமும் தெரிவிக்கலாம்.

வீட்டிற்க்கு ரெண்டு கார் இருந்தும், அதில் குடும்பத்தோடு ஊர் சுற்ற நேரமில்லாதவனும்;
பிடித்த உணவை விட பிடிக்காத மாத்திரையை அதிகம் சாப்பிடுபவனும்;
42" இன்ச் டிவி வாங்கியும், அதை பார்க்க நேரமில்லாதவனுக்கும்தான்  இவனை கண்டுபிடிக்க வேண்டியது இப்போது அவசியமாகிறது.

                 இவர்களை தேடுவதை விடுத்து அவர்கள் தொலைந்த காலங்களை தேடுவதை விடுத்து நமது சரியான சந்தோஷம்(நிச்சயம் பணமாக இருக்காது) எது என்று தேடினாலே, தானாக இவர்கள் கிடைப்பார்கள்.


Saturday, January 7, 2012

சினிமாக்காரனின் 8 ஆம் அறிவு..........

                      7 ஆம் அறிவு படம் வர்றதுக்கு முன்னாடியே ரொம்ப பேசினாங்க.... போதிதர்மன், தமிழனுக்கு அநியாயம், தமிழனின் கலை, குங்பூ, ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பாக்க வேண்டிய படம்.......இப்படி நிறைய பேசினாங்க. இதெல்லாம் சமீப காலத்தில் சினிமாகாரன் கற்று கொண்ட 8 ஆம் அறிவு, விளம்பர அறிவு..........
                      நோக்கு வர்மம் - அப்படியே குறு குறு ன்னு பாத்தாலே இவன் நினைக்கிறதெல்லாம் அப்படியே பண்ணுறாங்க, 50 வயசுல சாக்கடை அள்ளுற ஆள் இருந்து சாதாரண குடும்ப பெண் வரைக்கும் அப்படியே இருந்திருந்த மாதிரியே குங்பூ போட்டு ஹீரோவ பிரி பிரின்னு பின்னி எடுத்திடுவாங்க. அதுமட்டும் இல்ல போதிதர்மனோட வம்சா வழி வர்ற ஒருத்தன் கிட்ட இந்த நோக்கு வர்மம் செல்லாது.
                      'தி கராத்தே கிட்' இதே குங்பூ கலையை மையமா வச்சு வெளி வந்த ஓர் நல்ல படம். நோக்கு வர்மத்தை இரண்டே சீன்ல காண்பிச்சிருந்தாலும் ரொம்ப நல்லா எடுத்துருப்பாங்க, அது ஒரு புரளி வித்தை இல்லை - மனசை ஓர் நிலை படுத்துற கலைன்னு கரெக்ட்டா காண்பிசிருப்பாங்க. அதை
விட முக்கியம் பட விளம்பர promotion ல, ஒவ்வொரு அமெரிக்கனோ அல்லது ஒவ்வொரு சீனாகாரன் பாக்க வேண்டிய படம்ன்னு சொல்ல மாட்டாங்க. படத்தை பத்தி மட்டும்தான் விளம்பர படுத்தினாங்க.
                      முன்னல்லாம் அரசியல்வாதி மட்டும்தான் தமிழன்ற வார்த்தையை யூஸ் பண்ணி தன்னோட கட்சியை விளம்பர படுத்தினான், ஆனா இப்ப இந்த யுத்தியை சினிமாகாரனும் கையிலெடுத்தி ரொம்ப பாடா படுத்திராங்கப்பா. ஆனா ஒன்னு உண்மைப்பா, குங்பூ கலை தமிழன் உருவாக்கின கலையா இல்லையான்ற வாதம் ஒரு பக்கம் இருக்கும்போது தமிழன் எடுத்த இந்த படத்தின் சில சீன்களின் மூலம் தற்போதைய தமிழனுக்கும் (தான் தமிழன் தமிழன் என்று தன்னையே அடிக்கடி பிரகனபடுத்தும் சினிமாக்காரன்) குங்பூ க்கும் ரொம்ப தூரம்ன்னு நிரூபித்து விட்டார்கள்.

                     - இப்படிக்கு சினிமாவை சினிமாவாகவே மட்டும் பார்க்கும் ஓர் சாதாரண ரசிகன்.
                      

Thursday, September 23, 2010

ரோஜர் ப்ளாக்குக்கு நன்றி.....


நன்றி ரோஜர் ப்ளாக்!!!!!!!!!!!

ரோஜர் ப்ளாக், இன்று டிவியில் காமன்வெல்த் போட்டி பற்றி இந்தியா சார்பாக பேசிய ஒரே ஆள். இவர் 1986ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 400 ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றவர்.

காமன்வெல்த் போட்டி ஆர்கனைசிங்க் கமிட்டிக்கு போதாத நேரம்....கட்டமைப்பு பணிகள் முடியல, பாதுகாப்பு குறைவு மற்றும் போதிய சுகாதாரம் இல்லாத குடியிருப்புகள், இப்படி பல விஷயத்துக்கு இடையில வந்த இன்னொரு கெட்ட நேரம்தான் போட்டி மைதானத்தின் ஓவர்ப்ரிட்ஜ் இடிந்து விழுந்த செய்தி.

பிபிசி, ஸ்கை நீயூஸ் எந்த சேனல் வச்சாலும் இதே நீயூஸ்தான். ஸ்காட்லாந்து, கனடா, நீயூசி, ஆஸி போன்ற நாடுகள் தங்கள் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று செய்திகள் வெளியிட்டன. அவங்க பேட்டி கொடுத்தது என்னமோ ஒரு தடவைதான் ஆனால் இந்த டிவி காரங்க இருக்காங்கலே இதே நீயூஸ ஓராயிரம் தடவை போட்டுருப்பாங்க. இவ்வளவு பேட்டி மற்றும் கேள்விக்கு, போட்டி நடத்தும் அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரே பதில் என்னவோ கட்டுமானப்பணிகள் முடிவடைடந்துவிடும், திட்டமிட்ட படி போட்டி நடக்கும், அசராம இதே பதில சொல்றாங்கப்பா.

இப்படி ஒட்டு மொத்த மீடியாவும் இந்தியாவையும், காமன்வெல்த் போட்டி செயல்பாட்டு குழுவையும் வறுத்தெடுக்க இந்த ரோஜர் ப்ளாக் ஒருவர் தான் போட்டி நடத்துவதற்க்காக ஆதரவாக பேசினார். விளையாடு வீரர்களுக்கு தங்குமிடத்தை விட விளையாட்டு தான் முக்கியமாக இருக்க வேண்டும், எங்கதான் பாதுகாப்பு இருக்கு லண்டன்ல கூட பாதுகாப்பு இல்ல.........அதனால இந்த மாதிரியான காரணங்களை விடுத்து போட்டியில் கலந்து கொள்ள அனைத்து வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஒரு பக்கம் அவர் பேசியது சரியாகவே பட்டாலும், இன்னொரு பக்கம் நம்மளால வெறும் 56 நாடுகள் பங்கேற்க்கும் ஒரு போட்டி கூட நடத்த முடியலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு. உலக அரங்கில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கிட்டு இருக்குன்னு சொன்னா மட்டும் போதாது, அதற்கு இந்த மாதிரி ஒரு போட்டி நடத்தி நிரூபிச்சுக்கனும். ஏழு வருசமா திட்டமிட்டு எழுபத்தியேழாயிரம் கோடி செலவழித்து ஒரு வேலைய சரியா செய்யலைன்றது கஷ்டமாத்தான் இருக்கு. இது ஒரு தனி நபரோட தப்பு கெடையாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், காண்ட்டிராக்டர்கள் மற்றும் பல பேரோட தப்பு(ஊழல், கடமையின்மை, பொறுப்பு இல்லாதது) சேர்ந்திருக்கு. மொத்தத்துல ஒரு மோசமான ப்ராஜக்ட்டுக்கு சிறந்த எடுத்துகாட்டு.
இப்படி ஒரு விஷயம் நடந்தது ஒரு வகையில நல்லதுதான், இதுல மட்டும் எவ்ளோ லெசன்ஸ் லேர்ண்ட்.......; நம்ம அரசியல்வாதிகள், கேள்வியே கேட்காத மக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கேட்கும் ஆக்கப்பூர்வமில்லாத கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லி பழகிவிட்டார்கள் இப்பதான் உலக நாடுகளின் கேள்வி மற்றும் மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை, சொல்லட்டும் அட்லீஸ்ட் அவங்க வேலை என்னன்னாவது தெரிஞ்சுக்கட்டும். இந்த போட்டியின் விமர்சனங்களை ஒரு பாடமா எடுத்து இனிமேல் இது மாதிரி ஒரு மோசமான திட்டமிடல் இல்லாம பாத்துக்கலாம்.
பார்ப்போம், இந்திய விளையாட்டு வரலாறுல இது ஒரு கறுப்பு புள்ளியாக ஆகாம......எல்லா வேலைகளும் வேகமா முடிந்து போட்டி திட்டமிட்ட படி நடக்க வேண்டிக்கவும்(நம்மளால முடிஞ்சது...).

இந்த பதிவு போடும் முன்பு வந்த கடைசி செய்தி, இங்கிலாந்து அணி திட்டமிட்டபடி முதல் 22 வீரர்களை அனுப்பும்.

Sunday, September 5, 2010

லண்டனில் ஓர் இந்திய அலுவலக அனுபவம்....

லண்டன்..... அகன்ற சாலைகள், ஒழுங்கு முறையான நெரிசல் இல்லா போக்குவரத்து, மாசு படியா கட்டிடங்கள், தூய்மையான நடைபாதைகள், நரகல் இல்லா ரயிலடிகள். மொத்தத்தில் அழகிய நகரம், இந்திய தூதரகம் காணும் வரை.

லிவர்பூல் ஸ்டேசனிலிருந்து மோனுமெண்ட் வழியாக டெம்பிள் ஸ்டேசன் சென்று, வழிகாட்டி காட்டிய பாதையில் 100மீ நடந்து இந்திய தூதரகம் செல்லும் வரை லண்டன் அழகாகவே என் கண்ணில் பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் லண்டன் இந்திய தூதரகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை வானிலை சூழ்னிலை தவிர, அங்கே வெயில் இங்கே பனி. தெளிவான அறிவிப்பு பலகை இல்லாத இரண்டு மணி நேர க்யூ(ஒரு ஆங்கிலேயன் ரெண்டு மணி நேரம் நின்ற பின் அவனுடைய விண்ணப்பம் அங்கே வாங்கப்படமாட்டாது வேறு இடத்திற்க்கு செல்ல சொன்னார்கள்). ஆங்கிலேயர்களை
அறுபத்தி மூன்று வருடம் கழித்து இப்படி கூட பழி வாங்கலாம் போல.

சாப்பிட்டு/குடித்து தூக்கியெரிந்த காலி ப்ளேட் மற்றும் கேண்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன, ஈரத்தரையில் ஈரம் படாமல் உட்காருவதற்காக விரிக்கப்பட்ட அன்றைய நாளிதழ்கள்(இலவச) குப்பை தொட்டியில் இடாமல் சிதறிக்கிடந்தன, நூற்றுக்கணக்கான மக்கள் கூடுமிடத்தில் ஒரு கூரை மற்றும் இருக்கை கூட இல்லை, லண்டனில் வருடத்திற்கு நாலு பேர் கூட வராத பார்க்குக்கு கூட நாற்பது இருக்கைகள் இருக்கும். இந்த க்யூ தாண்டி முன்னேறி அலுவலகம் உள்ளே சென்றால் அங்கே மதுரை(இந்த ஸ்டேஜ் வரை வந்தது மதுரை அலுவலகத்தில் மட்டும்தான், சென்னை அலுவலகத்தில் முதல் க்யூவோடு திரும்பி விட்டேன்.) பாஸ்போர்ட் அலுவலகத்தைவிட பெரிய கூட்டம்(க்யூ கிடையாது). இந்தி தெரியாத இந்தியனாக சமாளித்து(வழிந்து) என்னுடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தாகி விட்டது. அவர்கள் பேசிய இந்தியில் நான் புரிந்தது, "அரை மணி நேரத்தில் ஆபீஸர் வந்து விண்ணப்பத்தை சரி பார்ப்பார்". வந்தாரு சரி பார்த்தாரு, மறுபடியும் நான் வழியும் படி ஏதோ இந்தியில் சொன்னாரு, என் பின்னால் இருந்த மொழிபெயற்பாளர்(இந்தி அறிந்த தமிழன்) மூலம் நான் புரிந்து கொண்டது மீண்டும் மூன்று மணிக்கு வர சொன்னார்களென்று. வெளியே வந்து நானும் நாளிதழ் விரித்து அமர்ந்து ஐந்து மணி நேர பொழுதை போக்கினேன். என்னருகில் அமர்ந்திருந்த இளைஞன் இந்தியில் பேச ஆங்கிலத்தில் பதிலளித்து நான் தமிழனென்று பறைசாற்றினேன். இருந்தும் தொடர்ந்து அரை மணி நேரம் என்னிடம் பேசியது ஆச்சரியமாக இருந்தது.

அரை மணி நேரத்தில் விடை புரிந்தது, புது பாஸ்போர்ட் 100 பவுண்டு, பாஸ்போர்ட் சமர்ப்பித்து சான்று வாங்க 200 பவுண்டு, மற்ற வேலைகளுக்கு வேலையை பொறுத்து சர்வீஸ் கட்டணமாம். இந்தியாவில்கூட அனைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ப்ரோக்கர் தொல்லை ஒழிக்கப்பட்டுவிட்டது. அடுத்த பத்து நிமிடம் அவர் கேட்ட எந்த கேள்விக்குமே சரியாக பதில் சொல்லாததால் அவராகவே சென்று விட்டார். இனியும் அங்கு வெயிட் செய்வது சரியல்ல என்று எழுந்து சாப்பிட சென்று விட்டேன், மறக்காமல் நான் விரித்த மற்றும் என்னருகே விரித்திருந்த நாளிதழ்களை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு.

சரியாக மூன்று மணிக்கு வந்து மேலும் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து என்னுடைய சான்றிதழ் பெற்று வெளியே வந்து அன்றைய அனுபவம் மனதிலிருந்து அகலும் வரை தேம்ஸ் நதிக்கரையில் நடையாய் நடந்து மீண்டும் லிவர்பூல் ஸ்ட்டிராட்போர்டு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.