Sunday, September 5, 2010

லண்டனில் ஓர் இந்திய அலுவலக அனுபவம்....

லண்டன்..... அகன்ற சாலைகள், ஒழுங்கு முறையான நெரிசல் இல்லா போக்குவரத்து, மாசு படியா கட்டிடங்கள், தூய்மையான நடைபாதைகள், நரகல் இல்லா ரயிலடிகள். மொத்தத்தில் அழகிய நகரம், இந்திய தூதரகம் காணும் வரை.

லிவர்பூல் ஸ்டேசனிலிருந்து மோனுமெண்ட் வழியாக டெம்பிள் ஸ்டேசன் சென்று, வழிகாட்டி காட்டிய பாதையில் 100மீ நடந்து இந்திய தூதரகம் செல்லும் வரை லண்டன் அழகாகவே என் கண்ணில் பட்டது. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் லண்டன் இந்திய தூதரகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை வானிலை சூழ்னிலை தவிர, அங்கே வெயில் இங்கே பனி. தெளிவான அறிவிப்பு பலகை இல்லாத இரண்டு மணி நேர க்யூ(ஒரு ஆங்கிலேயன் ரெண்டு மணி நேரம் நின்ற பின் அவனுடைய விண்ணப்பம் அங்கே வாங்கப்படமாட்டாது வேறு இடத்திற்க்கு செல்ல சொன்னார்கள்). ஆங்கிலேயர்களை
அறுபத்தி மூன்று வருடம் கழித்து இப்படி கூட பழி வாங்கலாம் போல.

சாப்பிட்டு/குடித்து தூக்கியெரிந்த காலி ப்ளேட் மற்றும் கேண்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன, ஈரத்தரையில் ஈரம் படாமல் உட்காருவதற்காக விரிக்கப்பட்ட அன்றைய நாளிதழ்கள்(இலவச) குப்பை தொட்டியில் இடாமல் சிதறிக்கிடந்தன, நூற்றுக்கணக்கான மக்கள் கூடுமிடத்தில் ஒரு கூரை மற்றும் இருக்கை கூட இல்லை, லண்டனில் வருடத்திற்கு நாலு பேர் கூட வராத பார்க்குக்கு கூட நாற்பது இருக்கைகள் இருக்கும். இந்த க்யூ தாண்டி முன்னேறி அலுவலகம் உள்ளே சென்றால் அங்கே மதுரை(இந்த ஸ்டேஜ் வரை வந்தது மதுரை அலுவலகத்தில் மட்டும்தான், சென்னை அலுவலகத்தில் முதல் க்யூவோடு திரும்பி விட்டேன்.) பாஸ்போர்ட் அலுவலகத்தைவிட பெரிய கூட்டம்(க்யூ கிடையாது). இந்தி தெரியாத இந்தியனாக சமாளித்து(வழிந்து) என்னுடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்தாகி விட்டது. அவர்கள் பேசிய இந்தியில் நான் புரிந்தது, "அரை மணி நேரத்தில் ஆபீஸர் வந்து விண்ணப்பத்தை சரி பார்ப்பார்". வந்தாரு சரி பார்த்தாரு, மறுபடியும் நான் வழியும் படி ஏதோ இந்தியில் சொன்னாரு, என் பின்னால் இருந்த மொழிபெயற்பாளர்(இந்தி அறிந்த தமிழன்) மூலம் நான் புரிந்து கொண்டது மீண்டும் மூன்று மணிக்கு வர சொன்னார்களென்று. வெளியே வந்து நானும் நாளிதழ் விரித்து அமர்ந்து ஐந்து மணி நேர பொழுதை போக்கினேன். என்னருகில் அமர்ந்திருந்த இளைஞன் இந்தியில் பேச ஆங்கிலத்தில் பதிலளித்து நான் தமிழனென்று பறைசாற்றினேன். இருந்தும் தொடர்ந்து அரை மணி நேரம் என்னிடம் பேசியது ஆச்சரியமாக இருந்தது.

அரை மணி நேரத்தில் விடை புரிந்தது, புது பாஸ்போர்ட் 100 பவுண்டு, பாஸ்போர்ட் சமர்ப்பித்து சான்று வாங்க 200 பவுண்டு, மற்ற வேலைகளுக்கு வேலையை பொறுத்து சர்வீஸ் கட்டணமாம். இந்தியாவில்கூட அனைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ப்ரோக்கர் தொல்லை ஒழிக்கப்பட்டுவிட்டது. அடுத்த பத்து நிமிடம் அவர் கேட்ட எந்த கேள்விக்குமே சரியாக பதில் சொல்லாததால் அவராகவே சென்று விட்டார். இனியும் அங்கு வெயிட் செய்வது சரியல்ல என்று எழுந்து சாப்பிட சென்று விட்டேன், மறக்காமல் நான் விரித்த மற்றும் என்னருகே விரித்திருந்த நாளிதழ்களை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு.

சரியாக மூன்று மணிக்கு வந்து மேலும் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து என்னுடைய சான்றிதழ் பெற்று வெளியே வந்து அன்றைய அனுபவம் மனதிலிருந்து அகலும் வரை தேம்ஸ் நதிக்கரையில் நடையாய் நடந்து மீண்டும் லிவர்பூல் ஸ்ட்டிராட்போர்டு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.


6 comments:

  1. Good one Perusu. Keep it up.
    --- Luke.

    ReplyDelete
  2. superb da u wrote it????.u did not tell me.....

    ReplyDelete
  3. Dae, Nee oru veti ninai thaen da. Very good.

    ReplyDelete
  4. Very good man..But namma madurai slang missing!!!...

    Dae Luke.....Nee blog eluthinaa thaan reply pannuviyaa......?

    ReplyDelete
  5. Fantastic narrative da perusu....Ippadi oru thiramai-a velikondu vanda sandharpathirku thanks sollanumda...

    ReplyDelete